100,000 யூக்கிரெய்ன் இராணுவத்தினர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்-ஐரோப்பிய ஒன்றியம்

20,000 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்

யூக்கிரெய்ன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாக இதுவரை 100,000 யூக்கிரெய்ன் இராணுவத்தினரும் சுமார் 20,000 பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வொண் டெர் லேயென் தெரிவித்திருக்கிறார். இதற்கான ஆதாரங்களை அவர் எங்கிருந்து பெற்றார் என்பது பற்றி அவர் குறிப்பிடவில்லை.

கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த ரஷ்ய – யூக்கிரெய்ன் போர் இதுவரை சுமார் 8 மில்லியன் பொதுமக்களை அகதிகளாக இடம்பெயர்த்திருக்கிறது. இவர்களில் 3 மில்லியன் மக்கள் ரஷ்யாவுக்குள் சென்றிருக்கிறார்கள். ஏனையவர்கள் அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

செப்டம்பர் மாதம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சொய்கு அவர்கள் தெரிவித்த கருத்துக்களிம்படி சுமார் 60,000 யூக்கிரெய்ன் இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இது இப் போரில் இறந்த ரஷ்ய இராணுவத்தினரைவிட 10 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ள $311 பில்லியன் ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்களையும், $20 பில்லியன் பெறுமதியான ரஷ்ய தனவந்தர்களின் சொத்துக்களையும் பாவித்து மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமென ஒன்றியத்தின் தலைவர் கேட்டுள்ளார். (Photo by Daniele Franchi on Unsplash)