Spread the love

கோவிட்-19 விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட விதம், பிரித்தானிய தேசிய மருத்துவ சேவையில் பணிபுரியும் பெருந்தொகையான மருத்துவர்களை விரக்தியடைய வைத்திருக்கிறது என சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பொன்று தெரிவிக்கிறது.

இக் கருத்துக்கணிப்பின் படி, அதில் பங்கெடுத்த மருத்துவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாம் மூன்று வருடங்களில் சேவையிலிருந்து விலகப்போவதாகத் தெரிவித்துள்ளார்கள். கோவிட்-19 பணிகளினால் ஏற்பட்ட களைப்பும், தமக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான விரக்தியும் இந்த முடிவை எடுப்பதற்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மருத்துவத் தொழிலின் காரணமாக ஏற்படும் மன் அழுத்தம், உளைச்சல் காரணமாக இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்குப் போகவோ, பணியிலிருந்து தற்காலிக ஓய்வெடுக்கவோஅல்லது மற்றவர்களுக்காகத் தற்காலிக ஈடுசெய்யவோ (locums) உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

“கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக தேசிய மருத்துவ சேவை மருத்துவர்கள் (National Health Service doctors) மிகவும் உடல் வருந்தி, மனமுடைந்து நொந்துபோயிருக்கிறார்கள்” என்கிறார் பிரித்தானிய மருத்துவர் சங்கத் தலைவர் பற்-றோடென்.

“பெரும்பான்மையான மருத்துவர்கள் மூன்று வருடங்களில் சேவையைத் துறக்க விரும்புகிறார்கள் என்பது இந்நாட்டின் உயிர்நாடியான மருத்துவர்களை அரசாங்கம் நடத்தும் விதம் பற்றிய அதிர்ச்சி தரும் ஒரு விடயம். தமது உயிர்களையும் பொருட்படுத்தாது நோயாளிகளைக் காப்பதில் அர்ப்பணிப்போடு செயற்படுபவர்கள் இம் மருத்துவர்கள். இவர்களை நாம் இழக்கப் போகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.



பிரித்தானிய மருத்துவர் சங்கத்தால் இணைய வழியாக மேற்கொள்ளப்பட்ட இக் கருத்துக்கணிப்பில், 1,758 மருத்துவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இக் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்வி ” கொள்ளை நோய் சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னணி சேவையாளர்களாக இருந்த உங்களை அரசு கையாண்ட விதம், இச் சேவையில் (NKS) தொடர்ந்தும் இருப்பதா அல்லது விலகுவதா என்ற முடிவுக்குக் காரணமாக அமைந்திருக்கிறதா” என்பது. இவர்களில் 1,214 பேர் (69%) தாம் அநேகமாக சேவையிலிருந்து விலகுவதாகத் தீர்மானித்துள்ளதாகவும் 28 வீதம் தாம் விலகப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்கள்.

பிரித்தானிய தேசிய மருத்துவ சேவை ஏற்கெனவே மருத்துவர் பற்றாக்குறையால் திண்டாடிக்கொண்டிருக்கிறது. கடைசியாகக் கிடைத்த அறிக்கையின்படி 8,278 மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாமலுள்ளன. ஏனைய நாடுகளைப் போலல்லாமல் பிரித்தானிய மருத்துவர்களது வருமானம் ஒப்பீட்டளவில் குறைவானது. சமீபத்தில் அரசாங்கம் 2.8% சம்பள உயர்வை அறிவித்திருந்தாலும் பெரும்பாலான பொது மருத்துவர்களுக்கும் (GP’s), பயிற்சியில் இருக்கும் மருத்துவர்களுக்கும் இவ்வுயர்வு கொடுக்கப்படவில்லை.

“போதுமான சம்பளமில்லை, பயனற்ற பாதுகாப்பு உபகரணங்கள், அரசியல் இலாபங்களுக்காக வெறும் வாக்குறுதிகளைத் தருவது தான் இந்த அரசாங்கம் தேசிய மருத்துவ சேவைப் பணியாளர்களை நடத்தும் விதம். 20 வருடங்களாக முன்னணியில் வேலை செய்த நான் இப்போ களைத்து விட்டேன்” என ஒரு மருத்துவர் ஆதங்கப்பட்டார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கைக்குத் தலையிடியைத் தரப்போகும் சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்க வர்த்தகத் தடை
1,000 த்துக்கு மேலான பிரித்தானிய மருத்துவர்கள் தேசிய சேவையிலிருந்து வெளியேற உத்தேசம்

1,000 த்துக்கு மேலான பிரித்தானிய மருத்துவர்கள் தேசிய சேவையிலிருந்து வெளியேற உத்தேசம்