Columnsமாயமான்

100 வயது கிசிங்கர் | 3 மில்லியன் மரணங்களுக்குக் காரணமானவர்

மாயமான்

ஆறு அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு ஆலோசகராக இருந்த ஹென்றி கிசிங்கெருக்கு இப்போது 100 வயது. 3 மில்லியனுக்கு மேலானோரின் மரணத்திற்கு நேரடிக் காரணமாக இருந்தவர். அரசுகள் அன்றும் அறுக்கவில்லை தெய்வங்கள் நின்றும் அறுக்கவில்லை. மனிதர் ஆரோக்கியமாக 100 வயதைக் கடந்துவிட்டார்.

அமெரிக்க அனுசரணையுடன் உலகில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள், சதிகள் போன்றவற்றின் சூத்திரதாரியான கிசிங்கர் ஒரு போர்க்குற்றவாளி எனப் பலரும் குற்றம்சாட்டினாலும் உலகில் எந்தவொரு அரசோ, அமைப்புக்களோ அல்லது தனிமனிதர்களோ அவரைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டத் திராணியற்று இருக்கிறார்கள்.

இவரது ‘கொலைகளில்’ பிரசித்தமானது கம்போடியாவின் கொலைக்களம். 1970 களில் வியட்நாமில் மூக்குடைபட்டதன் காரணமாக கம்போடியாவில் வியட்நாமியர்களைத் துரத்துகிறேன் என்ற போர்வையில் 150,000 பொதுமக்களை அமெரிக்க இராணுவம் கொன்றொழித்தது. எண்ணிக்கை இதைவிட அதிகம் எனக் கூறுபவர்களும் உள்ளனர். கிழக்குத் தீமோர், பங்களாதேஷ் என்று ஆசியா கண்டமெங்கும் இவரது ஆலோசனைக்கேற்ப பயங்கரவாதமும், சதிகளும் கொலைகளும் நடந்தேறின. தென்னமெரிக்காவில் ஒப்பெறேஷன் சொண்டோர் என்ற பெயரில் கூலிப்படைகளின் கொலைக்களங்களும், தென்னாபிரிக்காவில் இனப்போர்களும், கம்போடியா, லாவோஸில் கம்பளக்குண்டு வீச்சுக்களும் என்று மொத்தம் 3 மில்லியன் மரணங்களுக்கு கிசிங்கரே பொறுப்பு எனப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். தனியார் துறையினருக்கு இவர் வழங்கிய ஆலோசனைகளின்பேரில் நிகழ்ந்திருக்ககூடிய மரணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

கம்போடியாவில் நடைபெற்ற 50,000 மரணங்களுக்கு தனது செயற்பாடுகள் இரண்டாம்தரக் காரணிகளாக இருந்திருக்கலாமென்றும் ஆனாலும் முதற் காரணம் வியட்நாமியர் தான் எனவும் அவர் அடம்பிடிக்கிறார். நமது முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் பாதுகாப்பாகவென ஒதுக்கப்பட்ட இடம் எப்படி குண்டுவீச்சுக்குக் குறியாகத் தரப்பட்டதோ அதே போன்று தான் கம்போடியாவிலும் நடைபெற்றது. அக்குண்டுவீச்சுக்களுக்கான குறிகள் வியட்நாமிற்குள்ளே இருந்ததெனப் பதிவுகளில் காணப்படுவதால் அவை சட்டரீதியானவை என அமெரிக்கா உலக அடிமை நாடுகளுக்கு வகுப்பெடுத்து வருகிறது. ஆனால் குண்டுகள் விழுந்தது லாவோஸில். ‘ஒன்றுமறியாத’ இலங்கை விமானப்படைக்கு வகுப்பெடுத்தது யாரெனத் தெரிந்தாலும் ஆலோசனை எங்கிருந்து வந்தது என்பது இன்னும் புலப்படவில்லை.

‘தி இன்ரெர்செப்ட்’ என்ற ஊடகத்தின் நிருபரான நிக் ட்றூஸ் என்பவர் குறிப்பேடுகளை ஒப்பீடு செய்து கணித்ததில் கிசிங்கரின் பெயரோடு 150,000 மரணங்களைத் தொடர்புபடுத்தமுடியும் என்கிறார். அமெரிக்க இராணுவம் ஆவணப்படுத்தி வைத்திருந்து சமீபத்தில் பகிரங்கமாக்கப்பட்ட சில பதிவுகளை ஆரய்ந்து ட்றூஸ் தனது முடிவுகளை எய்தியிருக்கிறார்.

வியட்நாம் போர்க்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த றிச்சார்ட் நிக்ஸன் பெரும்பாலான தருணங்களில் மது போதையில் இருப்பவர்; அடிக்கடி கோபம் கொண்டு உளறித் திட்டித் தீர்ப்பவர் எனப் பெயர் பெற்றவர். போதையில் அவர் உளறியவற்றைக் கட்டளைகளாக்கி பெண்டகனுக்கு கொடுத்தமையால்தான் பெண்டகன் வியட்நாமில் பாரிய குண்டுவீச்சுக்களை நிகழ்த்தியது என்கிறார் ட்றூஸ். “பறப்பன அனைத்தயும், அசைவன அனைத்தையும் சுட்டுக் கொல்லுங்கள்” என்பது கிசிங்கரின் பிரபல வாக்கியம். 1973 இல் மட்டும், கிசிங்கரின் நேரடிக் கட்டளையின் பிரகாரம், கம்போடியாவில் 257,000 தொன்கள் குண்டுகள் போடப்பட்டதுடன் 3,875 பொதுமக்கள் இதன்போது கொல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாய்வுக்காக ட்றூஸ் கம்போடிய கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பேட்டி கண்டார். பெண்டகன் குறிப்புக்களில் காணப்பட்டதைவிட கம்போடியாவில் நடைபெற்ற அனர்த்தங்கள் பல மடங்குகள் மோசமானவை. பல குண்டு வீச்சுக்கள் “விமானியின் தவறுகள்”, “தவறுகள்” எனப் பதியப்பட்டுள்ளன. ஆனாலும் இத்தவறுகள் பல்லாயிரம் தடவைகள் நடைபெற்றதாகப் பதிவுகள் உள்ளன. அமெரிக்க காலாட்படையினர் கிராமங்களைச் சூறையாடுவது ஊடகங்களில் பிரசுரமானதும் ஊடகவியலாளர்களின் தலைகளில் இத்தவறுகள் சுமத்தப்பட்டன என்கிறார் ட்றூஸ்.

கம்போடியாவில் கிசிங்கரினால் ஏவபட்ட ‘கம்பளக் குண்டுவீச்சைத்’ தொடர்ந்து எழுந்ததுதான் பொல் பொட்டின் கெமெர் ரூஜ் இராணுவம். பொல் பொட்டின் ஆட்சியில் மட்டும் கம்போடியாவில் 2 மில்லியன் மக்கள், நாட்டின் சனத்தொகையின் 20%, கொல்லப்பட்டார்கள். பொல் பொட்டின் ஆட்சிக்கு மறைமுகமான ஆதரவைத் தந்தவர் அமெரிக்காவின் ஆலோசகரான கிசிங்கர். எனவே பொல் பொட்டின் கொலைகளுக்கும் இவரே காரணம்.

இக்குற்றங்களுக்காக கிசிங்கர் மீது ஒருபோதும் போர்க்குற்ற வழக்குகள் பதியப்படவில்லை. குறைந்தது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட இக்கொலைகளுக்கு கிசிங்கரே மூலகாரணம் என்றாவது எவராலும் சொல்லப்படவில்லை. அவருக்கு 100 வயது. வாழ்த்த மனம் இடம் கொடுக்குதில்லை. (Image Credit: thefamouspeople.com)