• Post category:HEALTH / INDIA
  • Post published:September 16, 2020
Spread the love

மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டுவரும் ரஷ்யாவின் தயாரிப்பான கோவிட்-19 தடுப்பு மருந்து, ஸ்புட்னிக் V யை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்திருக்கிறது. 100 மில்லியன் அளவு (doses) மருந்தை மக்களில் பரிசோதிப்பதற்கும், வெற்றியளிக்கும் பட்சத்தில் அதை விற்பனை செய்வதற்குமான உரிமையை, இந்தியாவிலுள்ள டாக்டர் ரெட்டியின் ஆய்வகம் (Dr.Reddy’s lab) வாங்கியிருக்கிறது.

இந்தியாவில் மனிதப் பரிசோதனைக்கு (clinical trials) அனுமதி கிடைக்கும் பட்சத்தில், இந்த வருட இறுதியில் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து பரிசோதனைப் பாவனைக்கு அறிமுகப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தைத் தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டி லபோறட்டரீஸ் லிமிட்டட் இத் தடுப்பு மருந்தின் இந்தியாவுக்கான விற்பனை உரிமையப் பெற ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ரஷ்யன் டிறெக்ட் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் இந்திய பரிசோதனைகளுக்கும் (Phase III clinical trials), விநியோகத்துக்கும் ஒத்துழைப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் V, ஒரு அடினோவைரஸ் (DNA வைரஸ்) காவி முறையைக் கையாளும் ஒரு தடுப்பு மருந்து. அதாவது SARS-CoV-2 வைரஸை அடையாளம் காட்டும் அண்டிஜென்னை, உறையற்ற DNA வைரஸின்மீது கட்டி மனித உடலுள் செலுத்தி விடும் முறை. இது ஒரு செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட DNA (genetically engineered). கொறோணாவைரஸ் ஒரு RNA வைரஸ். DNA வைரஸ்களினால் நோய்கள் உருவாகினாலும் பெரும்பாலான தருணங்களில் அவை உயிராபத்தை விளைவிப்பதில்லை. இங்கு கட்டி விடப்படும் அண்டிஜென்னைக் கண்டவுடன் மனித உடல் அதற்கு எதிரான எதிர்ப்பாற்றலை உருவாக்கிவிடும். உண்மையான SARS-CoV-2 வைரஸ் உடலுட் புகும்போது அதன் அண்டிஜென் அடையாளத்தைக் கண்டவுடன் உடலில் ஏற்கெனெவே தயாராகவிருக்கும் நோயெதிர்ப்பாற்றல் அவ்வைரஸ்களை அழித்துவிடும். இதுவே இத் தடுப்பு மருந்தின் நோக்கம்.



ஸ்புட்னிக் V யைப் போலவே அடினோவைரள் காவி முறையைப் பின்பற்றி வேறு பல நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் CanSino Biologies, இலண்டனில் Oxford University, அமெரிக்காவில் Johnson & Johnson ஆகிய நிறுவனங்கள் இதே முறையில் தடுப்பு மருந்துகளைத் தயாரித்துப் பரீட்சித்து வருகின்றன. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்து Phase III மனிதப் பரிசோதனைகளில் சிக்கல்களை உருவாக்கியதால் தற்காலிகமாக அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் V இன் Phase I, Phase II பரிசோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு சாதகமான பெறுபேறுகளைத் தந்துள்ளன எனவும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதிகளின் பிரகாரம் Phase III பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், டாக்டர் ரெட்டி லபோறட்டரீஸ் நிர்வாகப் பணிப்பாளர் ஜி.வி.பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

உலகில் முதன் முதலாக கோவிட்-19 தடுப்பு மருந்தாகப் பதியப்பட்டது ஸ்புட்னிக் V.

Related:  கோவிட் | இந்தியாவில் தடுப்பு மருந்து விநியோகம் ஆரம்பம்

ரஷ்யாவின் கமலீயா நாஷனல் றிசேர்ச் இன்ஸ்டிடியூட் ஒஃப் எபிடேமியோலொஜி அண்ட் மைக்றோபயோலொஜி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக் V தடுப்பு மருந்திற்கான Phase I, Phase II பரிசோதனைகள் பற்றி சர்வதேச பிரபல மருத்துவ சஞ்சிகையான லான்செட்டில், செப்டெம்பர் 4 இல் பிரசுரமாகியிருந்தது. இதன் பிரகாரம், இத் தடுப்பு மருந்தால் இதுவரை எவருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை எனவும், பரிசோதனையில் பங்குபற்றியவர்கள் அனைவரும் (100%) நோயெதிர்ப்பாற்றலை உருவாக்கியிருந்தார்கள் எனவும் தெரியவருகிறது. பதிவு செய்யப்பட்டதன் பின்னர், 40,000 தொண்டர்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 55,000 தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 46 தடுப்பு மருந்துகள் பரிசோதனைகளில் உள்ளன. இவற்றில் 7 தடுப்பு மருந்துகள் Phase III பரிசோதனைகளை மேற்கொண்டவண்ணம் உள்ளன.

Print Friendly, PDF & Email