வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் நாடு திரும்பத் தாமதமாகலாம் – பிரதமர் ட்றூடோ எச்சரிக்கை
மிகவும் பாரதூரமான தொற்று ஆற்றலுடன் பல நாடுகளில் பரவிவரும் கோவிட் நோயின் வேறு வடிவங்கள் கனடாவுக்குள் வருவதைத் தடுப்பதற்காக அவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கனடிய அரசு நாட்டு மக்களைக் கேட்டிருந்தது. ஆனாலும் அவ்வேண்டுகோளை மீறிப் பலரும் பயணம் செய்வது கனடிய பிரதமரை மிகவும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக பிரதமர் ட்றூடோ, வெள்ளியன்று மக்களுக்கு விடுத்த அறிக்கையில், வெளிநாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் நாடு திரும்புவதற்கு மிக நீண்டகாலம் எடுக்கவேண்டி ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
“இந்த நேரத்தில் ஒருவரும் வெளிநாட்டு விடுமுறைகளை எடுக்க வேண்டாம். அதற்கான திட்டங்களை ஏற்கெனெவே மேற்கொண்டிருந்தால் அதைப் பின்னொருநாளுக்கு மாற்றிவிடவும். வசந்தகால விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நாங்கள் திட்டமிட்டிருக்கும் புதிய நடவடிக்கைகள் அமுலாக்கப்பட்டால் இவ்வெச்சரிக்கைகளை மீறிப் பயணம் செய்தவர்கள் நாடு திரும்புவதில் பாரதூரமான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம். இந் நடவடிக்கைகள் எதுவித எச்சரிக்கைகளுமின்றி, எந்த நேரத்திலும் அமுலுக்கு வரலாம்” எனக் கண்டியப் பிரதமர் எச்சரித்துள்ளார்.
மார்கழி மாதம் அரசினால் கொண்டுவரப்பட்ட பயணக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்திருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களாக லண்டன், அம்ஸ்ரெடாம், லொஸ் ஏஞ்ஞெலிஸ் நகரங்களுக்கும், மற்றும் கன்கூன், மெக்சிக்கோ, மொண்டீகோ குடா, ஜமைக்கா, போர்ட்டோ பிளாட்டா ஆகிய விடுமுறை நகரங்களுக்கும் செல்லும் பயணணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்பயணங்களை மேற்கொள்ளும் விமானங்கள் பற்றிய தகவல்கள் அரசாங்க இணியத்தளத்தில் பதியப்பட்டுள்ளதுடன், அதில் சென்ற பயணிகள் பற்றிய தகவல்களும் அரசினால் சேகரிக்கப்பட்டுள்ளன.
உடனடியாக எடுக்கப்படவிருக்கும் நடவடிகைகள் பற்றி பிரதமர் எதையும் குறிப்பிடவில்லையாயினும், கட்டாய தனிமைப்படுத்தல் முதல் முற்றான பயணத் தடை வரையான பல திட்டங்கள் தயாராக உள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளையர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் தனிமைப்படுத்தல் சட்டங்கள் உலகிலேயே மிகக் கடுமையானவை. அவற்றை மேலும் கடுமையாக்க அரசு தயங்காது என பிளையர் மேலும் தெரிவித்தார்.
பிரேசில், தென்னாபிரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் மிகவும் மோசமான, வைரஸின் மாற்று வடிவங்கள் தொற்றுக்களை அதிகரித்து வருகின்றன.
பிரித்தானியாவில் உலவும் வைரஸின் மாற்று வடிவம், முந்தைய வைரஸைவிட வேகமாகப் பரவுகிறது என்பதோடு அது 30% கூடுதலான உயிராபத்தை விளைவிக்கிறது என பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று மட்டும், கனடாவில், 31 புதிய பிரித்தானிய வைரஸ் மற்றும் 3 தென்னாபிரிக்க வைரஸ் தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் எல்லாமே சர்வதேசப் பயணிகளால் கொண்டுவரப்பட்டவை.
