ஜனவரி 12, 2019
உத்தேச அரசியலமைப்பு வெளியாவதற்கு முன்னரேயே அதை பற்றிப் பொய்ப் பரப்புரைகளைச் செய்வைத்தான் மூலம் மஹிந்த ராஜபக்ச இனவாதத்தைத் தூண்டுகிறார் என்று ஜே .வி.பி. கட்சியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.
“அரசியலமைப்புச் சபையும், அதன் ஆலோசனைச் சபையும் ஒரு உத்தேச வரைவைத் தானும் உருவாக்கவில்லை. நாங்கள் இன்னும் அதை உருவாக்கும் நிலையில் தான் இருக்கிறோம். ஆலோசனைச் சபை இன்றுவரை 83 சந்திப்புக்களையே நடத்தியிருக்கிறது. இறுதியான வரைவு ஒன்றை இனிமேல்தான் நாம் தயாரிக்கவிருக்கிறோம். மாகாணசபைகளின் சம்மதத்தை இனிமேல்தான் பெற வேண்டும். பாராளுமன்றத்தில் இனிமேல்தான் விவாதம் நடத்தப்பட வேண்டும். 2/3 பாராளுமன்ற அங்கத்தவர்களது ஆதரவு கிடைத்தால் தான் அது அப்பால் நகரும். அதன் பிறகு மக்கள் ஆணையைப் பெற அதன் மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதியே இனிமேல்தான் கையொப்பமிட வேண்டும். இத்தனை நடைமுறைகளும் முற்றுப்பெற எவ்வளவு காலம் எடுக்கப் போகிறது? இந்த நடைமுறைகளை நிறைவேற்றத் தற்போதைய பாராளுமன்றத்தால் நினைக்கக்கூட முடியுமா?” என இன்று பாராளுமன்றத்தில் பேசும் போது காரசாரமாகத் தன் கருத்தை வெளியிட்டார் அனுர குமார.
அவர் தொடர்ந்து பேசும்போது, ” இப் பின்னணியில், ஏப்ரல் மாதம் அமுல்படுத்தப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பில் 9 மாகாணங்களும் தனித் தனி பொலிஸ் படைகளைக் கொண்டிருக்கும் என ராஜபக்ச தொடர்ந்து கூறி வருகிறார். அத்தோடு, இன்னும் சில மாதங்களில் சிறிலங்கா ஒரு சமஷ்டி அரசாக மாறிவிடுமென்றும் கூறி வருகிறார். அவருக்கு வெட்கமென்பதே இல்லையா?.
தற்போதைய தேங்கு நிலையிலிருந்து வெளி வருவதற்கு இனவாதமே ஒரே வழி என அவர் நினைக்கிறார். அவரது அரசியலமைப்புச் சதி எதிர்த் தாக்கம் புரிந்து விட்டது. சட்ட விரோதமாக அதிகாரத்தைப் பெற முயற்சித்தமையால் மக்களின் தீவிர எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு விட்டார். இப்பொழுது இனவாதத்தைக் கக்குகிறார்.
ராஜபக்சவின் கூட்டாளிகள் என் இதைச் செய்கிறார்கள் என்று எனக்குப் புரிகிறது. ஆனால் இவர் 10 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்த ஒருவர். இது முற்றிலும் வெட்கமேயில்லாத பதவி மோகமே தான். ராஜ்பக்ச தன்னை நினைத்து வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.