பிள்ளையா(ன்)ர் பிடிக்கப் போன கதை
மாயமான்
ராஜபக்ச ராச்சியத்தில் நீதி கேட்டு ஒரு போதும் மணிகள் அடிக்கப்படுவதில்லை. காரணம் அமணிகளில் அடிக்கும் ‘அவை’ கழற்றப்பட்டு விட்டன. மணியோசை கேட்காமையால் மன்னன் நீதி வழுவா நெறிமுறையுடன் ஆட்சிய நடத்துகிறான் என மக்கள் வாழ்த்தி வணங்குகிறார்கள்.
மணி நீதி மன்னன் பற்றி பல நீண்ட நெடுங்கதைகளுண்டு. தெரிந்த சிலர் உயிருக்கஞ்சி ஓரமாக நின்று பூவெறிந்துவிட்டுப் போகின்றனர்.
பிள்ளையா(ன்)ர் தப்பிய கதையும் அதிலொன்று.
மட்டக்களப்பு குறுநிலத்தில் முரளீதரர் என்னுமொரு குறுநில மன்னர் ஆட்சி நடத்திவருங்கால் அவரது முதன் மந்திரியாக இருந்த பிள்ளையான் என்பார் அரசனின் கட்டளையின்படி ஒரு கொலையைச் செய்தார். அக் குறுநிலத்தின் அறிவாளியும் மக்கள் தேவைகளை அஞ்சாமல் அரச சபைகளில் எடுத்துச் சொல்லி வந்தவருமான பரராஜசிங்கர் என்பவர் கோவிலில் வழிபாடு செய்துகொண்டிருக்கும்போது பிள்ளையார் அவரை நயவஞ்சகமாகக் கொன்றார் எனவும், அது அப்போதய ராச்சிய மன்னர் ராஜபக்சரின் ஏவலின்பேரில் நடைபெற்றது எனவும் மக்களிடையே பேசப்பட்டு வந்தது. ராச்சிய மன்னரின் சகோதரரும், படைத் தளபதியுமான நந்தசேனர் மிகவும் கொடூரமானவர் என்பதால் மக்கள் அப்பேச்சை எடுப்பதில்லை.
சில காலங்களுக்குப் பிறகு ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்துபோக ராச்சியத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். இதன் பிரகாரம் ஆட்சியைப் பரிபாலிக்கும் பொறுப்பு இரண்டு மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இக் காலத்தில் முந்திய மன்னராட்சியில் நடைபெற்ற அநியாயங்களை மக்கள் முறையிடத் தொடங்கினார்கள். நீதி மணிகள் செப்பனிடப்பட்டன. இக்காலத்தில் மட்டக்களப்புக் குறுநிலத்திலும் அந்த அதிசயம் நடந்தது. பரராஜசிங்கரின் கொலைக்காக முன்னாள் முதன் மந்திரி பிள்ளையார், பரராஜசிங்கரின் கொலையைச் செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.
பிள்ளையாருக்கு எதிராகச் சாட்சிகளைச் சேகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிள்ளையாருக்கெதிராக சாட்சி சொல்ல இருவர் முன்வந்தனர். அவர்கள் தமிழர்கள் என்பதால் ராச்சியத் தலைநகரிலிருந்து தமிழ் பேசும் ஒரு காவலதிகாரி மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டார். அவர் மட்டக்களப்பு போய்ச் சேர்ந்ததும் அவரைப் பிள்ளையாரின் ஆட்கள் தமது வலையில் வீழ்த்தி சாட்சிகளைத் தேடவேண்டாமென்று பெருந்தொகையான பணத்தைப் பரிசாகக் கொடுத்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். தலைநகருக்குத் திரும்பிய அவர் சாட்சிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறி நாட்களைக் கடத்திக்கொண்டு வந்தார். அதுவரை பிள்ளையார் சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நந்தசேனரின் தந்திரத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராச்சியம் ராஜபக்சர் வசம் மீண்டும் வந்து சேர்ந்தது. முன்னர் படைத்தளபதியாகவிருந்த நந்தசேனரே நாட்டின் பரிபாலனத்தை வழிநடத்த வேண்டுமென பெளத்த மகாசங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சர்வ வல்லமை பொருந்திய நந்த சேனருக்கே மகுடம் சூட்டப்பட்டது. கோதாபய நந்த சேனர் என்ற பெயரில் அவர் ஆட்சி பீடம் ஏறினார்.
அவர் ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அரசர்களால் சிறை பிடிக்கப்பட்ட பல கொலைகாரர்கள், ஊழல் பேர்வழிகள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். மட்டக்களப்புக் குறுநிலமக்களும் பிள்ளையார் மீது வருத்தப்பட்டு, அவரை நந்தசேனர் ஆட்சியின் தமது குறுநிலப் பிரதிநிதிகளில் ஒருவராக அனுப்பிவைத்தனர். குறுநில மக்கள் தமது ஆட்சியில் அதிருப்தியடைந்து வருவது சர்வதேச அரங்குகளில் தனது பெயருக்கு இழுக்கைத் தேடித்தந்துவிடும் என்பதால் நந்தசேனரும் பிள்ளையாருக்கு மதிப்பளித்து, விடுதலையளித்து அவரைத் தன் சபையில் அமர்த்திக் கொண்டார்.
அது மட்டுமல்லாது, பிள்ளையாரைப் பிடிக்கவெனக் கட்டளையிட்ட அதிகாரி நந்தசேனரின் உத்தரவின் பேரில் சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். நாட்டின் நீதி மணிகள் அனைத்தும் மீண்டும் துலக்கப்பட்டு ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன. ஒலியை எழுப்பும் ‘அவை’ மீண்டும் பத்திரமாகக் கழற்றி வைக்கப்பட்டிருக்கின்றன.
மணி நீதி மன்னனின் புகழ் நாடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.
