பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது
முன்னாள் மேற்கு மாகாண ஆளுனர் அசாத் சாலி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் சட்டங்களைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சமீபத்தில் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டார் எனக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பத்தில் தெரிவித்திருந்ததாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பின்னர் அறிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியம் அதிகரித்துவரும் இவ் வேளையில், சாலியின் கைது சர்வதேச வட்டாரங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை, அச் சட்டம் விரைவில் மீளாய்வுக்குள்ளாகும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா சபையில் உத்தரவாதமும் அளித்திருக்கிறார்.
அமெரிக்காவும் இவ்விடயத்தை மிகுந்த அக்கறையுடன் அவதானித்துக்கொண்டிருக்கிறது எனத் தெரியவருகிறது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளார் எனவும், இவ்விடயம் பற்றியும், ஏப்ரல் 14, 2020 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹேஜாஸ் ஹிஸ்புல்லாவின் விடயம் போன்றவை பற்றியும் ஆராய ராஜாங்கத் திணைக்களம் பிராந்திய செயலாளர் ஒருவரை நியமித்திருப்பதாகவும் தெரியவருகிறது.
அசாத் சாலியின் கைது, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான வாக்குகளைப் பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. சபையில் அங்கத்துவம் வகிக்கும் 11 முஸ்லிம் நாடுகள் தமக்கு ஆதரவாக வாக்களிக்குமென இலங்கை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. சாலி, ஹிஸ்புல்லா கைதுகள் மற்றும் இலங்கையில் சமீப காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பல முஸ்லிம் நாடுகளை இலங்கை மீது அதிருப்தியடையச் செய்துள்ளதாகவும் இதன் காரணமாக பல நாடுகள் இலங்கைக்கு எதிராகவோ வாக்களிக்கவோ அல்லது நடுநிலைமை வகிக்கவோ கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
