கோதபாய ராஜபக்ச மீது காவல்துறை விசாரணைகளை மேற்கொள்ளலாம்?
அமெரிக்க குடியுரிமையை வைத்துக்கொண்டு சிறீலங்கா குடியுரிமை, கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பெற்றமை தொடர்பாக கோதபாய ராஜபக்ச பல சட்டமீறல்களைச் செய்துள்ளார் எனக்கூறி சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணகளை மேற்கொள்ளவுள்ளதாக அறியப்படுகிறது.
கோதபாய 2005ம் ஆண்டு அமெரிக்கக் குடிமகனாக சிறீலங்காவிற்கு சுற்றுலா அனுமதியோடு வந்திருந்தபோது அவரது தமையனார் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் பின்னர் உடனடியாகே மர்மமான முறையில் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றிருந்தார் எனவும் அமெரிக்க குடிமாகனாக இருக்கும்போது சிறிலங்காவில் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற நிலைமையிலும் அவர் 200ம் ஆண்டு வாக்காளாராகப் பதிந்திருந்தார் எனவும் டெய்லி எப்டி என்ற ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
கோதபாய ராஜபக்ச ஊழல் மற்றும் பொதுப்பணத்தைக் கையாடியதுடன் வேறு பல குற்றச்செயல்களுக்காகவும் சந்தேகநபராக இருக்கின்றபோது அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தன்மீதுள்ள குற்றங்களை இல்லாமற் செய்துவிடுவார் எனக் காமினி வியாங்கொட பிரதி காவல்துறை நாயகம் (IGP) சி.டி.விக்கிரமரத்தினவிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி இது பற்றிய விசாரணகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே வேளை பேராசிரியர் தேனுவர, கோதபாய ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிடாமல் ” அட்டோர்ணி ஜெனெரல் மற்றும் ஊழல் கமிஷன் ஆகியவற்றினால் குற்றப்பதிவுகள் செய்யப்பட்டுப் பிணையில் இருக்கும் ஒரு பொதுச் சேவகர்’ என்ற வகையில் மூறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். இவர்களைப் போன்று வேறு பல செயற்பாட்டுக் குழுக்களும் கோதபாயமீது வழக்குகளைத் தொடரமுயற்சிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரியவருகிறது.
கோதபாய ராஜபக்ச ஜனவரி 31, 2003 இல் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றிருந்தார். அப்போதிருந்த சிறீலங்க குடியுரிமைச் சட்டத்தின் 20(5) ம் பிரிவின்படி ஒரு சிறீலங்காவின் குடிமகன் தானாகவே இன்னுமொரு நாட்டின் குடிமகனாகும்போது சிறீலங்காவின் குடியுரிமையை இழந்தவராகிறார். அப்படியிருக்க 2005ம் ஆண்டு ஜூலை 3ம் திகதி கோதபாய ஒரு அமெரிக்க குடிமகனாக சுற்றுலாவுக்கான நுழைவு அனுமதியுடன் சிறீலங்கா வருகிறார். இறங்குதுறைகளில் வழங்கப்படும் (on-arrival visa) நுழைவு அனுமதியில் சுற்றுலாவைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்பது சட்டம். அப்படியிருக்க அவர் தனது தமயனாரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இது சட்டத்திற்கு விரோதம்.
தேர்தலில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்ச நவமபர் 15, 2005 இல் ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்கிறார். உடனடியாக கோதபாய வின் இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. அது துரிதப்படுத்தப்பட்டு நவம்பர் 21 இல் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு நவம்பர் 30, 2015 இல் அவர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுகிறார். ஆனால் நவம்பர் 24, 2015 அன்றே அவர் நாட்டின் பாதுகாப்பு செயலாளராக நியமமிக்கப்படுகிறார்.
இந்த முறையீடுகளினால் சந்தேகம் கொண்ட குடிவரவு அதிகாரிகள் சென்ற வாரம் கோவைகளைப் புரட்டிப்பார்த்தபோது கோதபாயவின் குடியுரிமை விண்ணப்பம் பற்றிய எந்தவிதமான தரவுகளும் அங்கு இருக்கவில்லை.
அதே வேளை இந்த வருடம் மே மாதம் திடீரென்று அவருக்கு சிறீலங்கா அடையாள அட்டையும், குடியுரிமையும் (தனிக்) வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி வினவியபோது ‘இவ் விடயங்கள் பற்றி எனக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் தெரியும் ஆனாலும் அவர் இதுபற்றிக் கருத்துக்கூறும் வரை என்னால் எதையும் கூறமுடியாது’ என உள்ளக விவகாரங்களுக்கான அமைச்சர் வஜிர பயவர்த்தன கூறியதாக டெய்லி எப்ரி செய்தி வெளியிட்டுள்ளது.
