ஐஸ் கிரீமில் கொறோணாவைரஸ் – சீனாவில் கண்டுபிடிப்பு
கிழக்கு சீனாவில் ஒரு நிருவனத்தால் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொறோணாவைரஸ் இருந்ததாகக் கூறி சீன அரசு பல பெட்டிகளைத் திருப்பியழைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.
இவ்வைஸ்கிரீமைத் தயாரித்த, தலைநகர் பெஜ்ஜிங்கிற்கு அருகிலுள்ள ரியஞ்ஜின் நகரிலுள்ள டக்கியோடோ ஃபூட் கொம்பனி லிமிட்டட் என்ற நிறுவனத்தை அரச அதிகாரிகள் தற்போது பூட்டிவிட்டதாகவும் அதன் பணியாளர்கள் தொற்றுக்காகப் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அந்நகராட்சி அதிகாரிகளின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஐஸ் கிரீமைச் சாப்பிட்டவர்கள் எவரும் இதுவரை நோய்த் தொற்றுக்கு ஆளாகவில்லை எனவும் தெரிய வருகிறது.
இத் தயாரிப்பிலுள்ள 29,000 கார்ட்டன்களில் 390 மட்டுமே விற்கப்பட்டிருந்தது எனவும் அவற்றை வாங்கியவர்களைத் தேடிக்கண்டுபிடித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வைஸ் கிரீம் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களான பால் மற்றும் வே பவுடர்கள் நியூசீலந்திலிருந்தும், ஊக்கிரெயினிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டதெனவும் அதன் மூலமே வைரஸ் வந்திருக்கக்கூடிய சாத்தியமுண்டெனவும் சீன அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீனின் மூலம் வைரஸ் சீனாவுக்குள் கொண்டுவரப்பட்டது எனச் சீன அரசு குற்றஞ் சாட்டியிருந்தது.
பால் மாவிந் மூலம் வைரஸ் கொண்டுவரப்படுவதற்குச் சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
