India

இலங்கையிலும் நேபாளத்திலும் பா.ஜ.க. அரசுகளை அமைப்போம் – இந்திய உள்விவகார அமைச்சர் அமித் ஷா


இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை நிறுவியதன் பின்னர் அயல் நாடுகளான இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளிலும் பா.ஜ.க. அரசுகளை நிறுவுவோம்” எனச் சனியன்று திரிபுர மாநிலத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோது இந்திய உள்விவகார அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டதாக திரிபுர முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகங்களில் பரவலாகப் பிரசுரிக்கப்பட்ட இச் செய்தி பல மட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


திரிபுரத்திலுள்ள ரவீந்திர சதபார்ஷிகி பவனில் நடைபெற்ற பா.ஜ.க. கட்சிக் கூட்டமொன்றில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக டெப் தெரிவித்துள்ளார்.

“திரிபுர மாநிலத்தின் வாடி வீட்டில் இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது திரிபுர வட-கிழக்கு பிராந்திய செயலாளர் அஜே ஜாம்வால் “பா.ஜ.க. தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பர்றியுள்ளது” எனக்கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் “நாங்கள் இலங்கையிலும் நேபாளத்திலும் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” என அமித் ஷா பதிலளித்ததாக டெப் தெரிவித்திருக்கிறார்.



அமித் ஷாவின் தலைமையைப் புகழ்ந்த டெப், அவரது தலைமையின்கீழ் தான், கம்யூனிஸ்ட் கட்சியையும் வீழ்த்திவிட்டு, பா.ஜ.க. உலகிலேயே பெரிய கட்சியாக வளர முடிந்தது எனத் தெரிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அமித் ஷாவின் இக்கருத்துக்களை உறுதிசெய்யும்படி திரிபுரத்தின் எதிர்க்கட்சி பா.ஜ.க. தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

“திரிபுரத்தின் முதலமைச்சருக்கு அரசியலமைப்பு பற்றி விளக்கமேதுமில்லை. டெப் கூறியது போல அமித் ஷாவின் கூற்றுக்கள் இறமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்குச் சமமாகும் ” என எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜிதேந்திர சவுத்றி தெரிவித்துள்ளார்.