ஹொங் கொங்கில் ஸ்னோடனுக்கு அபயம் கொடுத்த இலங்கைக் குடும்பத்துக்கு கனடா அபயம்


முன்னாள் நாசா பணியாளரும் உலகின் பல முக்கிய இரகசியங்களைப் போட்டுடைத்த விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சின் நண்பருமான எட்வார்ட் ஸ்னோடனுக்கு ஹொங் கொங்கில் அபயம் கொடுத்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சுபுன் தில்லின கெல்லபாத, அவரது மனைவி நடீக டில்ருக்‌ஷி நோனிஸ் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் (செதும்டி 9, டினாத் 5) ஹொங் கொங்கில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்திருந்த போதும், அவர்களது கோரிக்கையை 2017 இல் அரசாங்கம் நிராகரித்திருந்தது.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணியாற்றிய அமெரிக்கரான எட்வார்ட் ஸ்னோடன் அமெரிக்க இராணுவ இரகசியங்களை விக்கிலீக்ஸ் மூலமாக வெளிப்படுத்தியமைக்காகத் தேடப்பட்டவர். பின்னர் அவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடி ஹொங் கொங்கில் சிறிதுகாலம் மறைவாக வாழ்ந்தபோது கெல்லபாத குடும்பம் அவருக்கு அபயம் வழங்கிக் காப்பாற்றியிருந்தது. கனடிய மனித உரிமை வழக்கறிஞர் றொபேர்ட் ரிப்போ இவ்விடயத்தில் உதவிகளை வழங்கியிருந்தார். இவ்விடயம் ஊடகங்களுக்கு எட்டியதால் இக் குடும்பம் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. இதனால், கனடா, அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வந்தனர்.

நேற்று (செப் 28), இக் குடும்பம் கனடாவில் வந்திறங்கியது. ‘அகதிகளுக்காக’ (For the Refugees) என்னும் இலாபநோக்கற்ற அமைப்பு இக்குடும்பத்தை பிரத்தியேகமாக ஸ்பொண்சர் செய்திருந்தது. மொன்றியல் நகரில் இக் குடும்பம் வசிப்பதற்கென வீடொன்றையும் இந்த அமைப்பு ஒழுங்குசெய்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் இரகசியத் திட்டமான ‘பிரிஸம் கண்காணிப்பு’ திட்டத்தை எட்வார்ட் ஸ்நோடன் அம்பலப்படுத்தியமைக்காக அமெரிக்க அதிகாரிகள் அவரைக் கைதுசெய்யத் தேடிக்கொண்டிருந்தபோது அவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடி ஹொங் கொங்கிலுள்ள றிட்சி ஓட்டலில் தங்கியிருந்தார். அவரது மறைவிடம் பிடிபட்டதும் அவர் கெல்லபாத வீட்டில் மறைந்திருந்தார். ஏற்கெனவே இட நெருக்கடியோடு வாழ்ந்துவந்த கெலபாத குடும்பம் ஸ்னோடனையும் தம்மோடு இணைத்துக்கொண்டது. இரண்டு வாரங்களின் பின்னர் ஸ்னோடன் ரஷ்யாவிற்குத் தப்பியோடிவிட்டார்.

ஸ்னோடனுக்கு அபயம் கொடுத்த இன்னுமொருவரான அஜித் புஷ்பகுமார இன்னும் ஹொங் கொங்கில் வாழ்ந்து வருகிந்றார். அவரது புகலிடக் கோரிக்கையையையும் துரிதப்படுத்தும்படி ‘அகதிகளுக்காக’ அமைப்பு கனடிய அரசாங்கத்தைக் கேட்டு வருகிறது. ஸ்னோடனுக்கு அபயமளித்த இன்னுமொரு குடும்பமான வனெசா றோடெல் மற்றும் அவரது மகள் கியானாவுக்கு 2019 இல் கனடா புகலிடக் கோரிக்கையை வழங்கியிருந்தது. இவர்கள் இப்போது மொன்றியலில் வசித்து வருகிறார்கள்.