Art & LiteratureBooksScience & Technologyமாயமான்

‘ஹேலீஸ்’ வால்வெள்ளியின் வரவைத் துல்லியமாகக் கணித்த யாழ்/காரைநகரைச் சேர்ந்த வானியல் மேதை அலன் ஏப்ரஹாம்

பெருமைக்குரிய தமிழர்கள்

மாயமான்

தூமகேது எனத் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் வால் வெள்ளி அல்லது வால் நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமானது ‘ஹேலீஸ்’ வால்வெள்ளி (Halley’s Comet). 75 வருடங்களுக்கு ஒரு தடவை உலகத்துக்குக் காட்சி தரும் 1986 இல் தரிசனம் தந்திருந்தது. அடுததாக 2061 இல் மீண்டும் வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

வானவியல் மேதை அலன் ஏப்ரஹாம்

இவ் வால்வெள்ளியைப் பற்றி ஆராய்ந்த,இங்கிலாந்தைச் சேர்நத வானியல் நிபுணர் எட்மண்ட் ஹேலி அவர்களது பெயர் இதற்குச் சூட்டப்பட்டிருக்கிறது. 1531, 1607, 1682 ஆண்டுகளில் தோற்றம் தந்த வால்வள்ளிகள் எல்லாம் ஒன்றுதான் எனவும் அது திரும்பவும் 1758 இல் காட்சி தருமெனவும் ஹேலி எத்ரிவுகூறியிருந்தார். ஆனால் அதன் வருகையைத் தரிசிக்காமலேயே அவர இறந்து போனார். அதன் பிறகு இவ்வால்வெள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இதன் பின்னர் இவ்வால்வெள்ளி 1910 மே 19 அன்று காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் பூமியிலுள்ளொருக்குக் காட்சி தருமெனவும் ஆனால் அது பூமியில் மோதாது எனவும் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த அலென் ஏப்ரஹாம். இவ்வருடம் இவ்வால்வெள்ளியின் வரவைப்பற்றி றோயல் வானியல் கழகம் (Royal Astronomical Society) கணித்துக்கூறியதைவிட ஏப்ரஹாமின் கணிப்பு மிகவும் துல்லியமாக இருந்தது என்றும், இக்கணிப்பைச் செய்வதற்காக அவர் இரண்டு பனைகளுக்கிடையே ஒரு கயிற்றுப் படுக்கையைக் கட்டி அதில் பலநாட்கள் இருந்து தனது சொந்த உற்பத்தியான தொலைநோக்குக் கருவியைக் கொண்டு எடுத்த தரவுகளைக்கொண்டு கணிப்புகளைச் செய்திருந்தார் என கலாநிதி ரகுபதி அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரஹாமின் எதிர்வுகூறல் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஏ.வி. ஜுக்கா அவர்கள் 1911இல் கொடுத்த பரிந்துரையை ஏற்று, 1912 ஜனவரி 12 அன்று ரோயல் வானவியல் கழகம் அவரைத் தனது கழகத்தில் ஒரு fellow ஆக இணைத்துக்கொண்டது. இக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஏப்ரஹாம் ஆகும்.



பிறப்பு, கல்வி, வாழ்வு

ஆப்ரஹாமின் இயற் பெயர் அம்பலவாணர். தந்தை தாயர்: கந்தப்பர் / பார்வதி. ஆப்ரஹாம் 1865 இல் காரைநகரில் பிறந்தார். 1876 இல் இலங்கையைச் சின்னாபின்னமாக்கிய காலரா கொள்ளை நோயினால் இவரது பெற்றோர்கள் இருவரும் இறந்துபோக அவரது சிறியதந்தை கந்தப்பர் சரவணமுத்துவுடன் அவர் வளர்ந்தார். தனது கிராமதிலுள்ள பாடசாலையொன்றில் ஆரம்பக் கல்வியைக் கற்றபின்னர் டிசம்பர் 1881 இல் தெல்லிப்பழையிலுள்ள ‘எயிட்’ பயிற்சிப் பாடசாலையில் (Aid Training School) கற்கத் தெரிவானார். அங்கு அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிக்கொண்டு அலென் ஏப்ரஹாம் என்ற பெயரை வரித்துக்கொண்டார்.

டிசம்பர் 1883 இல் இப்பாடசாலையில் கல்வியை முடித்துக்கொண்ட ஏப்ரஹாம் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இணைந்து 1888 இல் முதலாம் தரப் பட்டத்துடன் வெளியேறிப் பின்னர் யாழ். புனித பத்திரிசாரியர் கல்லூரியில் இணைந்தார். இங்கு கல்வியை முடித்துக்கொண்டு மீண்டும் யா. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்தார். இங்கு கற்பித்துக்கொண்டிருக்கும்போதே அவர் தனக்குக் கிடைத்த மிக எளிமையான கருவிகளின் துணைகொண்டு வானவியல் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

வானவியலில் மட்டுமல்லாது ஆப்ரஹாம் கணிதம், கவிதை எழுதுதல், தமிழ் மொழி, இலக்கியம் போன்றவற்றிலும் புலமை கொண்டிருந்தார்.

இவரது மனைவியின் பெயர் முத்தாச்சி எனவும் இவர்களுக்கு கனகசுந்தரம், அருளையா என்று இரு மகன்களும், ஜேன் நல்லம்மா, றோஸ் ராசம்மா என்று இரு மகள்களும் இருந்தனர் எனவும் முத்தாச்சியின் மரணத்திற்குப் பின்னர் அவர் தையமுத்து என்பவரைத் திருமணம் செய்திருந்ததாகவும் அறிய முடிகிறது.



நூல்

தற்போது அலென் ஏப்ரஹாமும் (அம்பலவாணர் சுப்ரமணியர்) ஹேலீஸ் வால்வெள்ளியும் (ALLEN ABRAHAM (Ambalavanar Subramaniar) and the Halley’s Comet)) என்ற நூலொன்றை அலென் எல்.துரைரட்ணம் என்பவர் வெளியிட்டுள்ளார். இலங்கை பத்தரமுல்லையிலுள்ள நெப்டியூன் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந் நூலுக்கு ருஹுண பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஈ.ஏ.காமினி ஃபொன்சேகா மதிப்புரை எழுதியுள்ளார்.

இந்நூலைத் தொகுப்பதற்காக, மெல்போர்ணைச் சேர்ந்த பொறியியலாளரான அலென் துரைரட்ணம், காரைநகரில் ஏப்ரஹாம் வாழ்ந்த கிராமத்திலிருந்து பலவிதமான ஆவணங்களைச் சேகரித்திருக்கிறார். வானவியல் கணிப்பிற்காக ஏப்ரஹாம் பாவித்த பல வரைபடங்கள், லண்டன் வானவியல் கழகத்துடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள், அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘மோர்ணிங் ஸ்டார்’ போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றை எல்லாம் இணைத்து இந்நூலை உருவாக்கியுள்ளார் துரைரட்ணம்.

தமிழுலகத்துக்கு இச்சாதனைகளைப் பெற்றுக்கொடுத்த திரு ஏப்ரஹாம் அவர்கள் 1922 இல் மரணமடைந்தார். அவரது இறப்பின் நூற்றாண்டு ஞாபகார்த்தமாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.