ஹெய்ட்டியில் பூகம்பம் – 300 க்கும் மேற்பட்டவர்கள் பலி!

ஹெய்ட்டி நாட்டில் ஏற்பட்ட 7.2 றிக்டர் அளவு பூகம்பத்தின் தாக்கத்தால் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், 1800 க்கும் மேலானோர் காயமடந்துமுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெய்ட்டி நாட்டின் தென்பகுதியில் அமந்துள்ள செயின்ட் லூயி டு சுட் நகரிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் சனிக்கிழமை (14) அதிகாலை இப் பூகம்பம் இடம்பெற்றுள்ளதென அமெரிக்க பூகோள நில ஆய்வு அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

2010 இல் இந்நாட்டில் நடைபெற்ற பூகம்பம் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மக்கள் இன்னும் முற்றாக மீளாமலிருக்கும் நிலையில் இப் பூகம்பம் மேலும் அழிவைக் கொண்டுவந்திருக்கிறது. 2010 இல் இடம்பெற்ற 7.0 றிக்டர் அளவு பூகம்பத்தின்போது 300,000 பேர் இறந்தும், 1.8 மில்லியன் மக்கள் காயமடந்தும் இருந்தனர்.

ஐரோப்பிய – மத்தியதரைக்கடல் நிலநடுக்க மேற்பார்வை மையத்தின் படி, ஹெயிட்டியில் சனியன்று இடம்பெற்ற பூகம்பம் 7.6 றிக்டர் அளவு எனவும், கியூபா நாட்டின் நிலநடுக்க மையத்தின் கணிப்பின்படி அது 7.2 றிக்டர் அளவு எனவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக 3 மீட்டர் உயரமான அலையுடன் சுனாமி ஏற்படலாமென முதலில் எச்சரிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அவ்வறிவிப்பு மீளப்பெறப்பட்டு விட்டது.

ஹெய்ட்டியின் புதிய பிரதமர் ஏரியெல் ஹென்றி ஒரு மாத அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யத் தனது அரசு அனத்து வளங்களையும் பாவிக்குமெனக் கூறியிருக்கிறார்.