NewsUS & Canada

‘ஹுவாவே இளவரசி’ மெங் வாண்சூ, இரண்டு மைக்கேல்கள் விடுதலை


பிரதமர் ட்றூடோவின் தலையிடி தீர்ந்தது

மாயமான்

கனடா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை இராட்சத அரசியல் சிக்கலில் மாட்டியதோடு, இரண்டு அப்பாவி கனடியர்களை மூன்று வருடங்களாகச் சிறையிலடைத்த உலகின் புதிய இரும்புப் பெண் இன்று நாடு திரும்புகிறார்.

மெங் வாண்சூ, உலகின் அதி பெரிய நவீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே டெக்னோலொஜீஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி நிர்வாகியாவார். இன் நிறுவனத்தின் ஸ்தாபகர் மெங் வான்சூவின் தந்தையாரான றென் ஜெங்ஃபெய் எனினும் கம்யூனிஸ்ட் சீனாவின் அரச நிர்வாகத்திலேயே ஹுவாவே இயங்குகிறது என்பது பொதுவான கருத்து.

இரண்டு மைக்கேல்கள் – மைக்கேல் கொவ்றிக் (இடம்), மைக்கேல் ஸ்பேவொர்

கடந்த மூன்று வருடங்களாக கனடா மெங் வாண்சூவை வீட்டுக் காவலில் வைத்திருந்தது. அமெரிக்காவால் பொருளாதாரத் தடை நிர்ணயிக்கப்பட்ட ஈரானுக்கு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்தமை தொடர்பாக மெங் வாண்சூவைக் கைதுசெய்து தன்னுடைய நாட்டுக்கு அனுப்பும்படி அமெரிக்கா கனடாவுக்குக் கட்டளையிட்டிருந்தது. ஆனால் அவரைக் கைது செய்வதற்கும், தடுத்து வைத்திருக்கவும், அமெரிக்காவுக்கு அநுப்புவதற்கும் கனடாவுக்கு சட்ட அருகதை இல்லை என அவரது வழக்கறிஞர்கள் கனடாவில் வாதாடியிருந்தனர். அதன் காரணமாக அவர் எங்கும் தப்பியோடிவிடாதபடி கனடாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதனால் கடுப்படைந்த சீன ஆட்சியாளர் பழிக்குப் பழியாக இரண்டு அப்பாவி கனடியர்களை ‘ஒற்றர்கள்’ என்ற பொய்க்குற்றச்சாட்டுடன் சிறைக்குள் தள்ளிவிட்டர்கள்.

‘இரண்டு மைக்கேல்கள்’ என அழைக்கப்படும் கனடியர்கள் இருவரையும் விடுவிக்க ட்றூடோவின் அரசு பெருமுயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், ஜனாதிபதி ட்றம்ப் நிர்வாகம் மெங் வாண்சூவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி முன்வைத்த கோரிக்கையிலிருந்து துளியும் இளகாமையால் அம்முயற்சிகளுக்குப் பலனேதும் கிட்டவில்லை. தற்போது, ஜனாதிபதி பைடன் நிர்வாகம் கனடாவின் கோரிக்கையை ஏற்று தன் கோரிக்கையைத் தளர்த்தியதால் மெங் வாண்சூவுக்கு மட்டுமல்ல இரண்டு மைக்கேல்களுக்கும் விடுதலை கிடைத்திருக்கிறது.

இவ்வளவும் நடைபெற்றபோதும் தான் குற்றமேதும் புரியவில்லை என மெங் வாண்சூ இறுதிவரை கூறிக்கொண்டிருந்தார். அவருக்காகக் கனடிய நீதிமன்றத்தில் போராடியவர் வில்லியம் ரெய்லர் III என்ற கநடிய வழக்கறிஞர். சீனாவில் சிறைக்குள் தள்ளப்பட்ட மைக்கேல்களைச் சந்திக்க கனடிய தூதுவருக்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை.

பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்ட நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை அமெரிக்கா தனது கறுப்புப் பட்டியலில் போட்டு விடுகிறது. ஹுவாவே நிறுவனமும், அதன் 70 கிளை நிறுவனங்களும் இப் பட்டியலில் உள்ளன. ஹுவாவேயின் தயாரிப்பான Honor என்ற கைத்தொலைபேசியை இப்படி ஒரு கிளை நிறுவனத்தினூடாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்ததாக ஹுவாவே நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாகிய மெங் வாண்சூ மீது அமெரிக்கா வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த ஏற்றுமதி தொடர்பான பண மாற்றீடுகள் விடயத்தில் சமபந்தப்பட்ட HSBC வங்கிக்குப் பொய் சொல்லியிருந்தார் என்பதே அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் உத்தரவின் பேரில், வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கனடிய பொலிசாரால் மெங் வாண்சூ கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கனடிய ‘ஒற்றர்களான’ இரண்டு மைக்கல்களும் தற்போது சீனாவால் விடுதலை செய்யப்பட்டு கனடாவுக்கு வந்துகொண்டிருப்பதாக அறியப்படுகிறது.