ஹிஸ்புல்லாவின் பற்றிக்கலோ கம்பஸ் (பிரைவேட்) கம்பெனி வங்கிக் கணக்கிலிருந்து 4 பில்லியன் ரூபா மாயம்!

Spread the love

சவூதி அரேபியாவிலிருந்து 3.64 பில்லியன் ரூபா பெறப்பட்டிருக்கிறது

மட்டக்களப்பு புனானை பகுதியில் கட்டப்பட்டுவரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான ‘பற்றிக்கலோ கம்பஸ் (பிரைவேட்) கம்பனி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வெளிநாடுகளிலிருந்து வைப்பிடப்பட்ட 4 பில்லியன் ரூபாவில் தற்பொழுது 36,000 ரூபா மட்டுமே இருப்பில் இருக்கிறது என நிதி மோசடி விசாரணைப் பிரிவு கொழும்பு முதன்மை நீதிபதி லங்க ஜயரத்னாவிற்கு அறிவித்திருக்கிறது.

ஜனவரி 14, 2016 முதல் மே 31, 2019 வரையில் 206 தடவைகள் மொத்தம் 4.44 பில்லியன் ரூபா வைப்பிடப்பட்டிருக்கிறதெனவும் 825 தடவைகள் பணம் மீளப்பெறப்பட்டிருக்கிறதெனவும் மீதியாக 36,298.47 ரூபா மட்டுமே கணக்கில் இருக்கிறதென்றும் இவ் விசாரணைப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

வைப்பிடப்பட்ட பணத்தில் 3.64 பில்லியன் ரூபா, கொழும்பிலிருக்கும் ஒரு வங்கிக்கு, ஜெட்டா, சவூதி அரேபியாவிலிருந்து, ‘இன்ஹெறிற்றன்ஸ் அலி அப்துல்லா அல்ஜுபாலி’ (Inheritance Ali Abdulla Aljufally) என்ற நிறுவனத்தின் பெயரால் நான்கு தடவைகளில் அனுப்பப்பட்டுள்ளது எனவும் நீதிபதிக்கு விசாரணைப் பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. இப் பணம் எவ்வாறு பெறப்பட்டது, எவ்விதம் செலவழிக்கப்பட்டது என்பதை விசாரித்து தனது ‘B’ அறிக்கை மூலம் தெரியப்படுத்தவுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) மேலும் தெரிவித்துள்ளது.

விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு இச் சம்பவத்துடன் தொடர்பான மேலும் 13 வங்கிக் கணக்குகளை விசாரிக்க நீதிமன்றத்திடம் விசாரணைப் பிரிவு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. அதற்கு நீதிபதி அனுமதியளித்து விரைவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பணித்துள்ளார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>