முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வீட்டுப் பணிப்பெண் ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சகோதரர், பணிப்பெண்ணை வேலைக்கு சேர்த்த தரகர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மனைவியின் தந்தையும், சகோதரரும் இரண்டு பாலியல் வன்முறைக்குற்றங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதே வேளை மனைவியின் சகோதரர் 2015-19 காலப்பகுதியில் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த இன்னுமொரு 22 வயதுப் பெண்ணைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார் எனத் தெரியவந்துள்ளது.
பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த ஹிஷாலினி ஜூலை 3 அன்று 75% தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமையால் மரணமடைந்திருந்தார். அவரின் உடலைப் பரிசோதனை செய்த மரண விசாரணை அதிகாரி, உடலில் நீண்டகாலப் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வழக்கு மீதான விசாரணைகளையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்வதற்காக ஒரு குழுவொன்றை, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்னம் நியமித்துள்ளார்.
ஹிஷாலினியின் குடும்பத்தினர், அவரது பாடசாலை அதிபர் ஆகியோரரிடமிருந்து பொலிசார் வாக்குமூலங்களைப் பெற்றிருக்கின்றனர்.