ஹிஷாலினி கொலையில் 5 ஆவது சந்தேக நபராக றிஷாட் பதியுதீன் மீது வழக்குப் பதிவு
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய றிஷாட் பதியுதீன் மீது , அவரது வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய ஹிசஷாலினி ஜூட்டின் கொலை வழக்கின் ஐந்தாவது சந்தேக நபராக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ராஜிந்திர ஜயசூரியவின் தலைமையில் திங்களன்று (23) கூட்டப்பட நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது றிஷாட் பதியுதீனை ஐந்தாவது சந்தேகநபராக அறிவித்து அவரை செப்டெம்பர் 6ம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி சிறைச்சாலைகளின் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
முறைப்பாடு செய்தவரின் வாக்குமூலத்தின் படி, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு இதர குற்றவாளிகளும், இவ் வழக்கு தொடர்பாகத் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டதால் அவர்கள் அனைவருக்கும் பிணை மறுக்கப்பட்டு அடுத்த மாதம் 6ம் திகதி வரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் மனைவி கைதர் முகம்மது ஷியாப்டீன் ஆயிஷா, அவரது தந்தையார் முகம்மது ஷியாப்டீன், அவரது சகோதரர் கைதர் முகம்மது ஷியாப்டீன் இஸ்மத் மற்றும் ஹிஷாலினியைப் பணிப்பெண்ணாக அறிமுகம் செய்துவைத்த தரகர், சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் ஆகியோரே தற்போது தடுப்புக் காவலிலுள்ள நான்கு சந்தேகநபர்களாவர்.