Entertainment

ஹிருதயபூர்வம் (மலையாளம்)

முருகதாஸின் மதராசி படத்தைப் பார்த்த கோபத்தில் வேண்டாம் இந்தத் தமிழ்க் குப்பைகள் என மலையாளத்தை எட்டிப் பார்த்தேன். மோஹன்லாலது படமொன்று கண்ணில் பட்டது. உடனேயே உள்ளே பாய்ந்துவிட்டேன். இதுவரை அவர் என்னை ஏமாற்றியதில்லை என்ற ஒரு அகம்பாவம்.

படத்தின் பெயர் ஹிருதயபூர்வம். தமிழில் காதல் கடிதங்களை எழுதி அனுபவப்பட்டவர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல் ‘இருதய பூர்வம்’. கதை காதலாக இருந்தாலென்ன என்ன மண்ணாங்கட்டியாகவிருந்தாலென்ன மோகன்லாலிடம் எதைக் கொடுத்தாலும் அவருக்கே உரிய அடக்கமான under acting பாணி அக் கதையை எல்லை தாண்டிக் கொண்டு சென்றுவிடும்.


நாற்பது வயது; Lunch Box என்ற தனது உணவகத்தையே கட்டிப்பிடித்துக்கொண்டு தனிக்கட்டையாக வாழும் மோகன்லாலுக்கு இருதய வியாதி. இருதய மாற்றுச் சிகிச்சைக்காகக காத்திருக்கும் அவருக்கு பூனேயில் திடீர் மரணமடைந்த ரவி என்பவரது இருதயம் பொருத்தப்படுவதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. இறந்துபோன தந்தையை மிதமாக நேசித்த அவரது மகள் மாளவிகா மோகனன் ஒரு நாள் கேரளாவிலுள்ள மோகன்லாலின் வீட்டு வாசலில் நிற்கிறார். தனது திருமண நிச்சயதார்த்ததிற்கு தனது தந்தையின் ஸ்தானத்தில், தந்தையின் இருதயத்தோடு இருக்கும் மோகன்லால், வந்து ஆசீர்வாதம் தரவேண்டுமெனக் கேட்கிறார். முதலில் மறுப்புத் தெரிவித்துவிட்டு பின்னர் தனது மருத்துவ உதவியாளர் சங்கீத் பிரதாப்புடன் பூனே செல்கிறார் மோகன்லால்.

மணமக்களிடையே எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து நிச்சயதார்த்த கொண்டாட்டத்தை மாளவிகா முறித்துக்கொள்ள அதைத் தொடர்ந்து எழுந்த கைகலப்பில் மோகான்லால் தலையிட்டு (தமிழ்ப்படம் போலல்லாது!) அடி வாங்கி அதனால் கிடைத்த extended stay இன்போது மாளவிகாவின் வீட்டில் மோகன்லால் தங்க நேரிடுகிறது. இவ்வேளையில் (இளம்) தாய் சங்கீதா, மகள் மாளவிகா, மோகன்லால் ஆகியோரிடையில் பரிணமிக்கும் முக்கோண உறவு தான் படத்தின் கதை.

மலையாளப் படங்கள் என்றாலே மிகை நடிப்பை எதிர்பார்க்கத் தேவையில்லை. சோகமோ, கோபமோ, மகிழ்ச்சியோ, நக்கலோ, நளினமோ மோகன்லால் கண்களால் மட்டுமே வெளிப்படுத்திவிடக் கூடியவர். சண்டிக்கட்டும், தேனீர்க் கடையும், பசுமையான மரங்களும் நமது பழைய கிராம வாழ்க்கையை இரைமீட்பதாலோ என்னவோ அந்த nostalgic ஈர்ப்பை மலையாளப் படங்களைத் தவிர வேறெவற்றாலும் தந்துவிட முடியாது. பாத்திரங்களுக்கும் மிகையான மேக்கப்புகள், அரிதாரப் பூச்சுகள் இருக்காது.

மோகன்லாலுக்கு அடுத்தபடியாக மாளவிகா சிறப்பாக நடிக்கிறார். சங்கீத் பிரதாப், யூ-டியூப் குழு, மோகன்லால் ஆகியோரது மிகையற்ற இயல்பான நகைச்சுவை போதுமானதாக இருக்கிறது. யோகி பாபு போன்ற செருகல்கள் தேவைப்படவில்லை.

ஆனாலும் ஒரு தொடரும் நெருடல். அது ஏன் சமையல்காரிகளும், தோட்டக்காரர்களும் கறுப்புத் தோல்களுடனும் எண்ணை வழியும் முகங்களுடனும் காட்டப்படவேண்டும்? அது தமிழ் நாட்டான் சேரனாக இருந்தாலென்ன மலையாளத்தான் சத்தியன் அந்திக்காடென்றாலென்ன (ஹிருதயபூர்வம்)மாற்றமேயில்லை. சரிதாவிற்குப் பிறகு பெண் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் இறக்கப்படவேண்டும் அல்லது மிகையாகப் பூசப்படவேண்டுமென்ற நிலை. கறுமம்.

மோகன்லால்-மாளவிகா-சங்கீதா முக்கோண உறவு எப்படி முடிந்தது? படத்தைப் பாருங்கள்!