ஹிசாலினியின் மரணத்தைப் பாவித்து அரசாங்கம் தமிழ்-முஸ்லிம் மோதலை உருவாக்க முனைகிறது – பா.உ. சாணக்கியன் ராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து மர்மமான முறையில் மரணமான ஹிஷாலினியின் மரணத்தைப் பாவித்து தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இநமோதலைத் தூண்டிவிட அரசாங்கம் முனைகிறது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் நேற்று (03) பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“வீட்டுப் பணிபெண்ணாகக் கடமையாற்றிய 16 வயதுடைய, தற்கொலை செய்ததாகக் கருதப்படும், ஹிஷாலினியின் மரணத்தைப் பாவித்து இலங்கையின் தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே மோதலை உருவாக்க அரசாங்கம் வேண்டுமென்றே தூண்டுதல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இச் சம்பவத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள்” என அவர் தனது பாராளுமன்ற உரையின்போது குறிப்பிட்டார்.

“அரசாங்கம் தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக தமிழ்-முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உண்டுபண்ண முயற்சிக்கிறது. கோவிட் 19 தடுப்பூசி நடவடிக்கைகள் நடைபெறாதிருந்தால் இந மோதல் உருவாகியிருக்கலாம்” என அவர் மேலும் தெரிவித்தார். (நியூஹப்.லங்கா)