ArticlesColumnsசிவதாசன்

ஹார்ப்பருக்கு சிறுநீரில்தான் தத்து…

சிவதாசன்

ஸ்டீபனுக்கு இது போதாத காலம். மிஸ்டர் ரூடோவிற்கு நல்ல கிரகங்களின் பார்வை இருக்கலாம் போல. இல்லாது போனால் சிறுநீரால் அப்பிளையன்ஸ் திருத்தும் ஒரு ரெக்னீசியனைத் தன் கட்சியின் வேட்பாளராக ஹார்ப்பர் நியமித்திருப்பாரா? இன்னும் எத்தனை மஜீசியன்கள் அவரது கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறதோ? எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்.

ஜெறி பான்ஸ் என்ற இந்த சிறுநீர் மஜிசியன் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் வேட்பாளராக நின்றிருந்தார். தொகுதி பிரிவதற்கு முன்னர் 2008 இல் அவர் இத் தொகுதியில் கேட்டு ஏறத்தாழ 9000 வாக்குகளைப் பெற்றிருந்தவர். அப்போது சிறுநீர் கழித்திருந்தாரோ தெரியாது.

ஸ்காபரோ தொகுதி பிரிக்கப்படுவதற்கு முன்னர், 2011 இல், கன்சர்வேட்டிவ் கட்சியில் மாலீன் கலியட் என்ற பெண் 13,000 வாக்குகளைப் பெற்றிருந்தவர். அப்படியிருந்தும் அவரைப் புறந்தள்ளிவிட்டு கட்சி ரெஜி பான்ஸை நியமித்தது.

ஸ்காபரோ ரூஜ் மற்றும் ஸ்காபரோ நோர்த் இரண்டு தொகுதிகளிலும் தமிழரே வெற்றிகளைத் தீர்மானிக்கும் வாக்கு வங்கிகளை வைத்திருந்தும் கூட கன்சர்வேட்டிவ் கட்சி தமிழர்களை வேட்பாளராக நியமிக்காதது ஏன்? (தமிழரிடையே தரமான வேட்பாளர்கள் இல்லை என்று ஹார்ப்பருக்கு எப்போதோ தெரியும் என்று நீங்கள் சொன்னால் நான் அதை நம்பாமல் அடம் பிடிக்கப் போவதில்லை)

எப்படியோ பான்ஸ் தூக்கப்பட்டு விட்டார். கன்சர்வேட்டிவ் கட்சி கொஞ்சம் தங்கள் கொள்கை வகுப்பாளர்களைத் தள்ளி வைத்துவிட்டு திருவாளர் கொமன் சென்ஸை அனுசரித்துப் போனால் இந்தத் தடவை ஒரு தமிழருக்கு இடம் கொடுப்பதே சரியென நான் வாதிடுவேன். காரணம் அவர் வெல்வதுதான் முக்கியமென்பதில்லை. அவரும் வெல்லலாம். அடுத்தவரும் வெல்லலாம்.

இன்னுமொரு தமிழரை நியமிப்பதால் பாதிக்கப்படப் போவது லிபரல் கட்சி வேட்பாளர் ஆனந்தசங்கரியாகவும் இருக்கலாம். வேட்பாளர்களிடையே மும்முனைப் போட்டி இருக்கும் அதே வேளை பதாகை வெட்டிகளிடையேயும் மும்முனைப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். எப்படியாயினும் ஒரு தமிழர் பாராளுமன்றம் போவார். இது ஒன்றும் றொக்கட் சயன்ஸ் இல்லை. ஆனால் யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது மகா சிரமம்தான். (பத்து வெள்ளிகள் அங்கத்துவப் பணத்தை வேட்பாளரே கட்டி அவரே தேர்தலில் தெரிவாவதும் ஒரு வகையில் நியமனம் தான்).

ஹார்ப்பர் வரலாற்றின் மிக நீண்டகால தேர்தல் பிரச்சார கால நிர்ணயத்தைச் செய்தது டஃபி வழக்கில் படவிருக்கும் அவமானத்தைக் கழுவ – மக்களை மறந்துவிடச் செய்ய -கால அவகாசம் பெறுவதற்குத் தான். தேர்தல் முடியும்வரை வழக்கை ஒத்திப் போடவும் சர்வ வல்லமை கொண்ட அவரால் முடியும் என்பதும் தெரியும். பெண்களையும் தன் இனம் சாராதவர்களையும் பழி வாங்கி ருசி கண்டவருக்கு ட்ஃபி கொஞ்சம் ஓவர் ஸைஸ் தான். இருப்பினும் காலத்தால் வெல்ல முயற்சித்தார். அவரது கனவை இந்த சிறுநீர்க் குறும்பர்கள் கெடுத்து விட்டார்கள்.

இப்போது அவருக்குக் கிரக மாற்றம் சிரியக் குழந்தை வடிவில் வந்திருக்கிறது. பில்-24 சட்ட மசோதாவின் மூலம் வழக்கம் போல பாதுகாப்பு, குடிவரவு, பயங்கரவாதம், ஐஸிஸ் என்று பயமுறுத்தியே வாக்குகளைப் பெற்று வந்தவருக்கு இவை எல்லாவற்றையும் கடைந்து குடிநீராய்க் கொடுத்திருக்கிறது அந்த சிரியக் குழந்தை.

அனுபவமில்லாத சின்னப் பையன் ‘ஜஸ்டின்’, ஹார்ப்பர் வாங்கிக் கொடுத்த கால அவகாசத்தில் முதிர்ந்து ‘ட்ரூடோவாக’ மாறிவிடுவான் என்று அவர் எதிர் பாராமலிருந்திருக்கலாம். நடந்து விட்டதே!

கருத்துக் கணிப்புகள் ஹார்ப்பருக்கு சிம்ம சொப்பனமாக வந்து கொண்டிருக்கின்றன. இதுவே அவரது கடைசித் தேர்தல் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

அவரை இவ்வளவு தூரத்திற்குப் படியிறக்கம் செய்த என்.டி.பி. கட்சியும் பெரிதளவில் புளகாங்கிதம் அடையத் தேவையில்லை.என்.டி.பி. கட்சி கொஞ்சம் வலது நோக்கி நகர்ந்திருக்கிறது என்பது உண்மை. வலதுசாரிகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார இயந்திரத்தைக் கையாளும் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்குள் அவர்களது ஆட்சிக் காலம் முடிந்துவிடும். இன்னுமொரு பொப் ரே ஆட்சியாகவே அதுவும் இருக்கும். சமூகப் புரட்சிகளைப் பரீட்சிப்பதற்கான களங்களாக இருப்பதற்குப் பாராளுமன்றங்களுக்கும் வாக்காளர்களுக்கும் பொறுமையில்லை. இலகுவில் சலித்துப் போகும் நுகர்வுக் கலாச்சாரத்தின் குழந்தைகளிடம் சித்தாந்தங்கள் எடுபடா.

ஹார்ப்பர் ஸ்டீவனாக இருந்த காலத்தில் படு வலதுசாரி. ஆனால் கெட்டிக்காரன் என்று சொல்வார்கள். ஆனால் அவரது கட்சிக்குள் அவர் போட்ட கோட்டை ஒருவரும் தாண்ட இயலாது. தாண்டக்கூடிய ஒரே ஒருவர் முந்நாள் நிதியமைச்சர் ஜிம் ஃபிளகெட்டி. அவர் மறைந்ததும் இருந்த மிதவாதிகளான ஜோன் பெயர்ட், பீட்டர் ம்க்கே போன்றவர்கள் விலகிவிட மீதம் இருப்பவர்கள் ஹார்ப்பரைக் கண்டதும் கழிசானுக்குள் சிறுநீர் வடிப்பவர்கள் தான். கட்சிக்கும் சிறுநீருக்கும் நீண்ட நாள் உறவிருக்கிறது.

இந்தத் தேர்தல் போரில் ஹார்ப்பரின் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன. ட்ரூடோவின் ஆயுதங்கள் இப்போது தான் பொருத்தப்படுகின்றன. முல்கெயர் இந்த இருவரின் வெடிக்காத ஆயுதங்களுக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இத் தேர்தல் பற்றிய எனது கணிப்பு, ஹார்ப்பரின் இழப்பு வீட்டில் ட்ரூடோ பிடில் வாசித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

சிவதாசன் 2015-09-05 ஈகுருவி செப்டெம்பெர் இதழில் பிரசுரமானது [wp-rss-aggregator]