News & AnalysisSri Lanka

ஹரின் ஃபெர்ணாண்டோ கைதுசெய்யப்படுவதற்கு சுதந்திரக்கட்சி எதிர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக சமாகி ஜன பலவேகய பா.உ. ஹரின் ஃபெர்ணாண்டோ பாராளுமறத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக அவரை விசாரணைக்கு வருமாறு குற்ற விசாரணைப் பிரிவு ஆணை பிறப்பித்திருந்தது.

இந் நிலையில், ஹரின் பெர்ணாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களின் மீது சட்டப்படி பொலிசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற வரைமுறையை மீறி குற்றவிசாரணைப் பிரிவு அவரை விசாரணக்கு உட்படுத்துவது தவறு எனவும் அவர் கைது செய்யப்படுவதைத் தாம் எதிர்ப்போம் என்றும் ஆளும் கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரா தெரிவித்துள்ளார்.

“தமது கருத்துக்களைப் பாராளுமன்றத்தில் சுதந்திரமாகத் தெரிவிப்பது பாராளுமன்ற உறுப்பினருகுரிய சலுகைகளில் ஒன்று. அவர் பாராளுமன்றத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள் மீது கேள்வி கேட்க எவருக்கும் உரிமையில்லை” என பட்டிக், கைத்தறி, உள்ளூர்த் துணியுற்பத்தி ராஜாங்க அமைச்சரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிந் அறிக்கையில் சேர்க்கப்படாத பல அதிர்ச்சி தரும் தகவல்களை ஹரின் ஃபெர்ணாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக அவரது வாக்குமூலத்தைப் பெறுவதில் தவறில்லை. அவர் தெரிவித்த பல விடயங்கள் பின்னர் விசாரணைக்கு உதவலாம். ஆனால் அவரைக் கைது செய்ய பொலிசாருக்கு அனுமதியில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஹரின் ஃபெர்ணாண்டோ தெஹ்ரிவித்த கருத்துக்கள் தொடர்பாக அவரை விசாரனை செய்து கைது செய்வதற்கே முயற்சிகள் நடக்கிறது. அதை அனுமதிக்க முடியாது” என அமைச்சர் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஹரின் ஃபெர்ணாண்டோ வின் கருத்துக்கள் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு ஏப்ரல் 23 அன்று அழைப்பாணை ஒன்றை விடுத்திருந்தது. அதற்கு மறுநாள், ஹரின் ஃபெர்ணாண்டோவைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என பா.உ. பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்திருந்தார். அதற்கு முன்னரே ஹரின் ஃபெர்ணாண்டோ மார்பு வலி காரணமாகத் தன்னை மருத்துவமனையொன்றில் அனுமதித்திருந்தார்.

இதே வேளை, தன்னைக் கைது செய்வதைத் தடுத்து நிறுத்த ஹரின் ஃபெர்ணாண்டோ உச்ச நீதிமன்றத்தில் நேற்று (28) விண்னப்பமொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.