Health

ஹண்டா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து

சமீபத்தில் ஆர்ஜன்ரீனாவிலிருந்து புறப்பட்ட உல்லாசக் கப்பலில் பயணம் செய்து ஹண்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதால் மூவர் மரணமடைந்துள்ளதாகவும் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைச்சின் தலைவர் ரெட்றோஸ் கெப்றியீசஸ் “பாரிய நோய்ப்பரவலுக்கான அறிகுறிகள் தற்போது காணப்படவில்லையெனினும் இந்த அந்தீஸ் ரக வைரஸ் நீண்டகால உறக்கநிலையைக கொண்டிருப்பதால் நோய்த் தொற்று வெளிப்படவாரம்பிக்கும்போது அடுத்து வரும் வாரங்களில் அதன் பரவல் அதிகரிக்கக்கூடும் என செவ்வாயன்று மாட்றிட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.


நெதர்லாந்தைச் சேர்ந்த எம்வி ஹொண்டியஸ் எனப்படும் உல்லாசக் கப்பலில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான கனாறி தீவுகளில் பயணிகளைத் தரையிறக்க ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்றோ சன்சே அனுமதித்திருந்தார். இங்கு இறக்கப்பட்ட பயணிகள் தத்தம் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் அவர்களை அந் நாடுகள் 42 நாட்களுக்கு தடுத்து வைத்திருக்க வேண்டும் என கெப்றியீஸஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.

147 பயணிகளுடன் ஆர்ஜன்ரீனாவிலிருந்து புறப்பட்ட எம்வி ஹொண்டியஸ் உல்லாசப்பயணிகள் கப்பல் 23 நாடுகளில் தரித்துச் சென்றிருந்தது. இதுவரை அறியப்பட்ட ஹண்டா வைரஸ் நோயாளிகள் இக்கப்பலில் பயணம் செய்தவர்களாகவோ அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களாகவோதான் இருக்கிறார்கள். இப்பயணிகளில் 20 பேர் பிரித்தானியர்கள், 14 ஸ்பானியர்கள், 5 பிரன்ச்சுக்காரர் மற்றும் 17 அமெரிக்கர்கள் அவரவர் நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஹண்டா வைரஸ் எலிகளால் பரவலடையும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் எலிகளின் எச்சில், சிறுநீர் போன்ற கழிவுகள் மூலம் அவை மனிதரில் தொற்றிக்கொள்கின்றன எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இவ்வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஹண்டா ரகம் மட்டுமே மனிதரிலிருந்து மனிதருக்குத் தாவும் குணாதிசயத்தைக் கொண்டிருக்கிறது.

அறிகுறிகள்

ஹண்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் பொதுவாக ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு எந்தவித அறிகுறிகளையும் காணமுடியாது. இதனைத் தொடர்ந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகள் சிறிது சிறிதாக ஆரம்பித்து இருதய வியாதி, உயரழுத்தம், சுவாசப் பை மற்றும் நெஞ்சுக் குழிகளில் நீர்ச்சேர்க்கை ஆகியன (cardiopulmonary) தென்படவாரம்பிக்கும். இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியவர்களில் 38% வீதமானோர் உயிர் பிழைப்பதில்லை.

இந்நோய்த்தொற்றுக்குள்ளாகியவர்களில் பொதுவாகக் காணப்படும் விடயங்கள், இருதயத்தைச் சுற்றியுள்ள சவ்வு, சுவாசப்பைகள், நெஞ்சுக்குழி ஆகியவற்றைல் அதீத நீர்ச்சேர்க்கை ஏற்படுதல். இதனால் முழுமையான சுவாசத்தைப் பெறமுடியாமலும், இருதயம் முழு வீச்சுடன் இரத்தத்தை வெளியனுப்ப முடியாமலும் நுரையீரலின் காற்றுக்குழாய்கள் முற்றாக விரிந்து கொடுக்க முடியாமையால் மூச்சு திணறல் ஏற்படுவதுடன் தொடர்ச்சியான இருமல், நெஞ்சிறுக்கம், தீராத களைப்பு ஆகியன இருப்பதாகவும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. (Image Credit: Screen Grab CTV News)

பொறுப்புத் துறப்பு: இச்செய்தி தகவலுக்கானது மட்டுமே. மேற்கண்ட அறிகுறிகள் இருக்கலாம் எனச் சந்தேகிப்பவர்கள் வைத்தியர்களை ஆலோசித்து முடிவுகளை எடுக்கும்படி வலியுறுத்துகிறோம்