‘ஸ்ரேர்லைட்’ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வழக்குகளை மீளப்பெற தமிழ்நாடு அரசு முடிவு

கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அரச பணிகள்

மே 22, 2018 அன்று தூத்துக்குடியிலுள்ள ஸ்ரேர்லைட் ஆலையின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராகப் பதியப்பட்ட பெரும்பாலான வழக்குகளை மீளப்பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

சீ.பி.ஐ. யிடம் கையளிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் பொது உடமைகளுக்குச் சேதம் விளைவித்தவர்கள் எனக் கருதப்பட்டவர்களின் மீதான வழக்குகள் தவிர்ந்த அனைத்து வழக்குகளையும் மீளப்பெறுவதாக தமிழ்நாடு அரசு, தனது மே 21 அன்று வெளிடப்பட்ட கட்டளை மூலம், அறிவித்துள்ளது. அத்தோடு, ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டவர்கள் உயர் கல்வி பெறுவதற்கோ அல்லது அரச பணிகள் பெறுவதற்கோ அரசாங்கத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கப்படமாட்டாது என அத்தாட்சிப் பத்திரங்களையும் (Non-Objection Certificates for higher education and jobs) வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

‘ஸ்ரெர்லைட்’ ஆர்ப்பாட்டக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மரணம் தொடர்பாக விசாரணையொன்று நீதிபது அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இவ்விசாரணையின் தீர்ப்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமையவே தமிழ்நாடு அரசு இந் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மே 22, 2018 இல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ‘ஸ்ரேர்லைட்’ செப்ப் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்குபற்றியிருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரத்தின்போது பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 13 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 100க்கு மேற்பட்டோர் காயப்பட்டுமிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், காயமடைந்தமை, சொத்துக்கள் நாசமாக்கப்பட்டமை தொடர்பாக ஓய்வு பெற்ற உய்ர்நீதிமன்ற நீதிபதி அருணா தலைமையில் விசாரணைக் கமிசன் ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. மே 14, 2021 அன்று இவ் விசாரணைகள் மீதான இடைக்கல அறிக்கை தமிழ்நாடு அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பதியப்பட்ட தேவையற்ற வழக்குகளை அரசு மீளப்பெறவேண்டுமென பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதன் பெறுபேறாக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின், பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளார்:

  1. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக, சீ.பி.ஐ. யிடம் கையளிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன எனப் பதியப்பட்டிருந்த வழக்குகள் தவிர்ந்த அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு மீளப் பெறும்.
  2. உச்சா நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகள் தவிர்ந்த, மே 22, 2018 இற்கு முன்னதாக, இவ்வார்ப்பட்டத்தோடு தொடர்பு படுத்திப் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் மீளப்பெற வேண்டும்.

இதைவிட, இவ்வார்ப்பட்டத்தில் பங்குபற்றிக் காயப்பட்டவர்கள், உளவளப் பாதிப்புகளுக்குட்பட்டவர்கள் என அடையாளங் காணப்பட்ட 93 பேர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய்கள் நிவாரணம் வழன்கவேண்டுமென நீதிபதி பரிந்துரைத்துள்ளார். மரணமான ஒருவரது 72 வயதுள்ள தாய்க்கு, வருமான இழப்புக்காக 2 இலட்சம் ரூபாய்கள் நட்ட ஈடு வழங்கப்படவேண்டுமென நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார்.