Spread the love

கனடா, ஸ்காபரோ பிறிம்லி வீதி / பிற்ஃபீல்ட் வீதி சந்திப்பில் கடந்த மார்ச் மாதம் 13 ம் திகதி நடைபெற்ற தமிழ்ப் பெண் தீபா சீவரத்தினத்தின் கொலை தொடர்பாக அவரது கணவருட்பட, மூவரை ரொறோண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர்.

மார்ச் 13, 2020 வெள்ளி காலை 9:55 மணியளவில் பிறிம்லி வீதி / பிற்ஃபீல்ட் வீதி சந்திப்பிலுள்ள ஒரு இல்லத்தில் இருந்து வந்த அவசர அழைப்பையடுத்து தலத்துக்கு விரைந்த பொலிசார் துப்பாக்கிச் சூடுகளுடன் இரண்டு பெண்கள் காயமுற்றிருந்ததைக் கண்டனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவர்களில் ஒருவர் இறந்துபோயிருந்தார். மற்றவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தார்.

இறந்தவர் 38 வயதுடைய தீபா சீவரத்தினம் எனப் பின்னர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

மார்ச் மாதம் 30ம் திகதி இக் கொலை தொடர்பாக ஸ்ரெட்லி கேர் என்பவர் கைது செய்யப்பட்டதாக ரொறோண்டோ பொலிஸ் அறிவித்திருந்தது. அவர் மீது இரண்டாம் நிலைக் கொலைக் குற்றமும் (second degree murder), கொலை முயற்சிக்கான குற்றமும் (attempted murder) பதியப்பட்டிருந்தன.

இக் கொலை தொடர்பாகக், கடந்த செவ்வாயன்று (ஜூலை 7, 2020), மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் அவர்கள், ஓஷாவா நகரைச் சேர்ந்த கெரி சாமுவேல்ஸ் (27) மற்றும் ரொறோண்டோவைச் சேர்ந்த விஜேந்திரன் பாலசுப்ரமணியம் (42) எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



இவர்கள் இருவர் மீதும் முதலாம் நிலைக் கொலைக் குற்றமும், கொலை செய்வதற்குச் சூழ்ச்சி செய்ததற்கான குற்றமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் சாமுவேல்ஸ், செவ்வாயன்று (ஜூலை 7), 1911 எக்லின்ரன் அவனியூ (கிழக்கு) இல் அமைந்துள்ள நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தார் எனவும், பாலசுப்ரமணியம், புதனன்று (ஜூலை 8) அதே நீதிமன்றத்தில் தொலையூடகத் தொடர்பாடல் மூலம் (teleconference) சமூகமளித்திருந்தார் எனவும் பொலிஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. மூன்றாமவரான கேர், எதிர்வரும் ஜூலை 23, வியாழனன்று இதே நீதிமன்றத்தில் சமூகமளிப்பார் எனவும் அப்போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதலாம் நிலைக் கொலை, கொலை செவதற்குத் திட்டம் தீட்டியமை, கொலை முயற்சி ஆகியவற்றுக்குத் தரமுயர்த்தப்படுமெனவும் ரொறோண்டோ பொலிஸ் சேவைகள் தெரிவித்துள்ளது.

கொலைக்குற்ற்ம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான விஜேந்திரன் பாலசுப்ரமணியம், தீபாவின் கணவராவார்.

Print Friendly, PDF & Email
Related:  இன்று முதல் பாவனைக்கு வருகிறது - ஒன்ராறியோ மாகாணத்தின் கோவிட்-19 தொற்றாளரைக் கண்டுபிடிக்கும் Covid Alert app!