ஸ்காபரோவில் 600 பேருக்கு முழுநேர வேலை வாய்ப்பு! -

ஸ்காபரோவில் 600 பேருக்கு முழுநேர வேலை வாய்ப்பு!

அமசோன் நிறுவனத்தின் புதிய வழங்கல் நிலையம் ஸ்காபரோவில் திறக்கப்படவுள்ளது

உலகப் பெரும் இணைய அங்காடிகளில் ஒன்றான அமசோன் நிறுவனம் தனது வழங்கல் நிலையமொன்றைத் (fulfillment centre) தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபரோவில் (கனடா) திறக்கவுள்ளது.1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளதும், சுமார் 600 பேருக்கு முழுநேர வேலைவாய்ப்புக்களைத் தரவல்லதுமான இந் நிலையம், ஒன்ராறியோ மாகாணத்தின் 7வதும், கனடாவின் 12வதுமான நிலையமாகும். ஒன்ராறியோவில் அதிகம் குடிவரவாளர்கள் செறிந்து வாழும் நகரங்களான பிரம்ப்டன், மிசிசாகா, மில்ரன், கலிடோன் மற்றும் தலைநகரான ஒட்டாவாவிலும் இதர வழங்கல் நிலையங்களை அமசோன் நிறுவியுள்ளது.

அமசோன் வழங்கல் நிலையம்

அமசோன் நிறுவனம், தற்போது ஒன்ராறியோ நிலையங்களில் 4000 முழுநேர வேலை வாய்ப்புக்களையும், மேலும் 1000 பேர்களுக்கு அதன் தொழில்நுட்பப் பிரிவில் வேலை வாய்ப்புக்களையும் அளித்துள்ளது.

“ரொறோண்டோ நகரில் அமையவிருக்கும் முதலாவது வழங்கல் நிலையத்தால் 600 பேருக்கு முழுநேர வேலைவாய்ப்புக்களை ஸ்காபரோ வாசிகளுக்கு வழங்குவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என ரொறோண்டோ நகரபிதா ஜோன் ரோறி தெரிவித்தார். ரொறோண்டோ மத்தியில் அமந்துள்ள தொழில்நுட்ப மையம் மட்டுமல்லாது, இப் புதிய வளாகத்தின் மூலம் தொடர்ந்தும் எம்மிடமிருக்கும் திறமையான வேலையாட்களிடத்தே முதலீடு செய்ய முன்வருவது வரவேற்கத் தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.

ரொறோண்டோவில் தனது நிறுவனத்தின் வளர்ச்சி குறித்துப் பெருமிதமடைவதாகவும், ரொறோண்டோ பெரும்பாகத்தில் மிகச் சிறந்த பணியாட்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு சகல வசதிகளுடனான ஊதியங்களைத் தாம் வழங்குவோம் எனவும் அமசோன் கனடாவின் பிராந்திய நடவடிக்கைகளின் பணிப்பாளர் விபோர் அரோரா தெரிவித்தார்.

புதிய றோபோட்டிக் நிலையத்தில் பணிபுரிபவர்கள் பொம்மைகள், குழந்தைகளுக்கான பொருட்கள், சிறிய எலெக்ட்ராணிக் பொருட்கள் ஆகியவற்றைப் பொதி செய்து அனுப்பும் பணிகளைச் செய்வார்கள்.

முழுநேரப் பணியாளர்கள் நல்ல சம்பளத்துடன் மருத்துவ (medical), கண்ணாடி (vision), பற்சேவை (dental), ஒவூதியச் சேமிப்புத் திட்டம் (RRSP Plan), நிறுவனப் பங்குகள் (stock awards), சிறப்பான பணி மீதான சன்மானம் (performance based bonus) ஆகிய வசதிகளை வேலை தொடங்கிய முதலாவது நாளிலிருந்தே பெறத் தொடங்குவார்கள் என நிறுவனம் தெரிவிக்கிறது.

“ஒன்ராறியோவில் வாணிபம் தளைத்து வளர்கிறது. இன்றய அமசோனின் அறிவிப்பு எங்கள் திட்டம் திறம்படச் செயற்படுகிறது என்பதற்கும், ஒன்ராறியோ மாநிலம் வர்த்தகத்தை வரவேற்கிறது என்பதற்கும் சான்றாக விளங்குகின்றது” என ஒன்ராறியோ மாகாணத்தின் முதலமைச்சர் டக் போர்ட் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.

அமசோன் நிறுவனம் ஒன்ராறியோவில் தொடர்ந்தும் முதலீடுகளைச் செய்ய விரும்புவதைத் தான் வரவேற்கிறேன் என்றும், நல்ல தொழில் முயற்சிகளை உருவாக்கவும், வளரவும், மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவும் சிறந்த மாகாணமாக நாம் ஒன்ராறியோவை உருவாக்குவோம் என்றும் அவர் தன் அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

Related:  பாலஸ்தீன இஸ்ரேலிய குடியிருப்புகள் சட்டவிரோதமானவையல்ல - அமெரிக்கா

ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, மனிற்றோபா, கியூபெக் எனக் கனடாவிலுள்ள அத்தனை வழங்கல் நிலையங்கள். அலுவலகங்கள், அபிவிருத்தி மையங்கள் மற்றும் இதர வளாகங்களில் மொத்தம் 10,000 பணியளர்களுக்கு அமசோன் வேலைவாய்ப்புக்களை வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)