ஷேன் வார்ண்: ஆடுகளத்தை அதிரவைத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
1970-2022
கிரிக்கெட் ஆட்ட வரலாற்றில் குறிப்பிடக்கூடிய அளவு முக்கியமான வீரர்களில் ஒருவரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேற்ன் வார்ண் அவரது 52 ஆவது வயதில் மரணமானார். தாய்லாந்திலுள்ள கோ சாமுயி என்னும் இடத்தில் வாடியொன்றில் விடுமுறையக் கழித்தபோது அவரது மரணம் நிகழ்ந்ததாகவும் அதில் சந்தேகப்பட எதுவுமில்லை என தாய்லாந்து பொலிஸ் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
கிரிக்கெட் பந்துவீச்சில் ‘லெக் ஸ்பின்னெர்’ என்ற வித்தையில் திறமைசாலியான இவர் இந் நூற்றாண்டின் ஐந்து சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ஒருவராக ‘விஸ்டென் பஞ்சாங்கத்தினால்’ தெரிவுசெய்யப்பட்டவர். 1992-2007 வரையிலான அவரது 15 வருட கிரிக்கெட் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்காக ஆடி 708 விக்கெட்டுகளை எடுத்து சாதனைகளைப் புரிந்தவர்.
தாய்லாந்திலுள்ள கோ சாமுயி என்னுமிடத்தில் நண்பர்களுடன் விடுமுறைக்காகச் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த விடுமுறை வாடியில் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறதென்றும் அசைவின்றிக் கிடந்த அவரது உடலை முதலுதவி மூலம் மீட்டெடுக்க அவரது நண்பர்களும் பின்னர் மருத்துவ உதவியாளர்களும் முயற்சி செய்தபோதும் அது பலனளிக்கவில்லை எனவும் மாரடைப்பே மரணத்துக்கு காரணமெனச் சந்தேகப்படுவதாகவும் தெரிகிறது.

கிரிக்கெட் உலகின் இன்னுமொரு பிரபல ஆட்டக்காரரும் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பருமான றொட்ணி மார்ஷின் மரணம் நிகழ்ந்து சில மணி நேரங்களில் வார்ணின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. 70 களில் மிகவும் பிரபலமான மார்ஷும் அவரது 74 ஆவது வயதில் மாரடைப்பினால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘வார்ணி’ என அன்பாக அழைக்கப்படும் வார்ண் தனது பந்துவீச்சின்போது பிரயோகிக்கும் வித்தையான ‘லெக் ஸ்பின்’ (leg spin), ஓரளவு அருகிப்போய்க்கொண்டிருந்தபோது 1990 களில் அதற்குப் புத்துயிரூட்டியவரெனவும் எதிர்பாராத வகையில் அவரது எதிராளிகளைத் திக்குமுக்காட வைக்கும் தந்திரசாலியெனவும் அறியப்பட்டவர். பாகிஸ்தானின் அப்துல் காதர் போன்றோர் இவ் வித்தையை வெற்றிகரமாகக் கையாள்பவர்கள் என அறியப்பட்டாலும், ஆட்டக் களத்தில் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தும் வீரராக அறியப்பட்டவர் வார்ண்.
ஜனவரி 1992 இல், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த வார்ணின் திறமை 1992-1993 இல் மெல்போர்ணில் நடைபெற்ற Boxing Day Test எனப் புகழப்படும் ஆட்டத்திலேயே வெளிவந்தது. இதில இராண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை நிலைநாட்டியிருந்தார்.
Ball of the Century
இருப்பினும் 1993 இல் இங்கிலாந்தின் ஓல்ட் ட்றஃபோர்ட்டில் (Old Trafford) நடைபெற்ற அவுஸ்திரேலிய ஆஷெஸ் சுற்றின்போது வார்ணின் முதலாவது பந்து துடுப்பாட்ட வீரர் மைக் கற்றிங்கினது (Mike Gatting) விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாது தான் ‘அவுட்’ ஆக்கப்பட்டுவிட்டேன் என்பதை கற்றிங் உணர்வதற்குச் சில நிமிடங்கள் பிடிக்குமளவுக்கு அவரைப் பிரமிக்க வைத்திருந்தது. இந்த சுற்றுப் போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் நடைபெற்ற ஒரு-நாள் ஆட்டப் போட்டிகளிலில் இங்கிலாந்து அணியிடம் மிகவும் மோசமாக அடிவாங்கியிருந்த அவுஸ்திரேலிய அணிக்கு ஓல்ட் ட்றஃபோர்ட்டில் நடைபெற்ற வார்ணின் இப் பந்துவீச்சு மகத்தான உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த வருடம் தட்டிச் சென்ற ஆஷெஸ் கிண்ணத்தைப் பெற இங்கிலாந்துக்குப் 12 வருடங்கள் பிடித்தது (2005), வார்ண் வீசிய அந்த ஓல்ட் ட்றஃபோர்ட் பந்து இன்று வரை இந் நூற்றாண்டின் பந்து (Ball of the Century) எனப் புகழப்படுகிறது.
சர்ச்சைக்குரியவர்
ஆடுகளத்திற்கு அப்பால் வார்ணின் வாழ்க்கை பல சர்ச்சைகளுடன் கூடியது. 1994 இல் இலங்கையில் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் நடைபெற்ற ஆட்டங்கள் தொடர்பாக இந்திய சூதாட்ட நிறுவனமொன்றுக்கு தகவல்களை வழங்கியமைக்காக 1995 இல் அவரும் அவரது சகா மார்க் வோவும் அபராதங்கள் விதிக்கப்பட்டார்கள். 2003 இல் இலங்கையில் நடைபெற்ற 50-ஓவர் உலகக் கிண்ணப் போட்டியின்போது செயல்திறன் அதிகரிக்கும் வஸ்துக்களைப் பாவித்தமைக்காக ஒரு வருடம் விலக்கி வைக்கப்பட்டார். அவரது மீள்வருகையின் பின்னர் பல போட்டிகளில் தன் திறமைகளைத் தொடர்ந்த் வெளிப்படுத்திவந்தாலும் 2006-2007 ஆஷெஸ் சர்வதேச போட்டியில் தனது இறுதியான அபார ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரது 37 ஆவது வயதில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டு இந்திய பிரிமியர் லீக்கின் முதலாவது ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார். போக்கர் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்த வார்ண் இறுதிக் காலங்களில் லாஸ் வேகாஸ் சூதாட்ட நிலையங்களில் கழித்தார். சிறிது காலம் ஃபொக்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் விவரணையாளராகவும் பணியாற்றியிருந்தார்.
கிரிக்கெட் ஆடுகள வித்தைக்காரரான ஷேன் வார்ணின் மறைவு திடீர் மறைவு இறுதியாக கிரிக்கெட் உலகத்தையும் ‘ஸ்பின்’ பண்ணிவிட்டது என்றெ சொல்ல வேண்டும்.