ஷவேந்திர சில்வா மீது தடைகளை விதிக்கும் கோரிக்கை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் என்ற அமைப்பு ஆதாரங்களைச் சமர்ப்பித்தது

இலங்கையின் இராணுவத் தளபதியும், முதன்மை பாதுகாப்பு அதிகாரியுமான ஷவேந்திர சில்வா மீது தடைகளை விதிப்பது போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பல கருவிகளில் ஒன்று என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

ஷவேந்திர சில்வா போன்ற போர்க்குற்றவாளிகள் மீது தடைகளை விதிக்கவேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ITJP) என்ற அமைப்பு நீண்டகாலமாக கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. ஷவேந்திர சில்வா போன்றவர்கள் போர்க்குற்றங்களை நிகழ்த்தியமைக்கான ஆதாரங்களை இவ்வமைப்பு சேகரித்து பிரித்தானிய அரசின் பார்வைக்குச் சமப்ர்ப்பித்தும் இருக்கிறது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரபல மனித உரிமைகள் வழக்கறிஞரும் டெஸ்மண்ட் டூட்டூ மையத்தின் அறங்காவலரில் ஒருவருமான ஜஸ்மின் சூக்கா மற்றும் முன்னாள் பி.பி.சி செய்தியாளரும் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென அயராது போராடிவருபவருமான ஃபிரான்ஸிஸ் ஹரிசன் ஆகியோரும் பிரித்தானிய அரசுக்கு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்ற்ங்கள் தொடர்பான ஆதாரங்களை ITJP அமைப்பின் மூலம் சேகரித்து வழங்கி வருகிறார்கள்.

மார்ச் 09 அன்று, பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் விக்கி ஃபோர்ட் அவர்கள் இக் கோரிக்கை பற்றிப் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். ” சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்ட அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள நாம் வரவேற்கும் அதே வேளை, தடைகளை விதிப்பதென்பது எம்மிடமுள்ள பல கருவிகளில் ஒன்று மட்டுமே. சில வேளைகளில் அவை அவற்றின் தாக்கத்தைக் குறைத்துவிடும் சாத்தியமுமுண்டு. அதே வேளை வேறு பல வழிகளையும் நாம் கையாள முடியும். அவற்றைப்பற்றி இப்போது நாம் எதிர்வுகூற முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விக்கி ஃபோர்ட்டின் இவ்வுரை தொடர்பாகப் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விரேந்திர சர்மா ” ஷவேந்திர சில்வா மீது தடைகளை விதிப்பது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் வெளிவிவகார, பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சு ஏதாவது கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதா” எனக் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஃபோர்ட், ஐ.நா.மனித உரிமைகள் சபையில் 46/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றுழைக்கும் மைய நாடுகளில் ஒன்று என்ற அவகையில் அமெரிக்கா, மன்க்த உரிமைகள், பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாகத் தனது உறுதியான பங்களிப்பைச் செய்துவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபை அமர்வின் போது இலங்கை மீதான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மைய நாடுகளின் தலைமைய இந்தத் தடவை பிரித்தானியா எடுத்துள்ளது.

பெப்ரவரி 2020 முதல் ஷவேந்திர சில்வாவை அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒருவராக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதே வேளை மெஜர் ஜெனெரல் உதய பெரேரா மீதும் பயணத் தடையை விதிப்பதற்கு அமெரிக்கா மையநாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.