Sri LankaWorld

ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கா செல்லத் தடை!

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் பகிரங்க அறிவிப்பு!

பெப்ரவரி 14, 2020

இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதென அந் நாட்டின் இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இராஜாங்கத் திணைக்களம், வெளிநாட்டு நடவடிக்கைகள் மற்றும் சார்பான திட்டமிடல் சட்டத்தின் 7031(c) பிரிவின் பிரகாரம் அவர் மீதான தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2009 இல், இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இறுதிக்கட்டத்தில் ஷவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாகச் செயலாற்றிய 58 வது படையணி மிக மோசமான மனித உரிமை மீறல்களையும், சட்டத்துக்குப் புறம்பான கொலைகளையும் செய்திருந்ததாகவும் அதில் அவரது ஈடுபாடு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இராஜாங்கத் திணைக்களம் இத் தடையை விதித்துள்ளது.

வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள் எவரேனும் மனித உரிமை மீறல்கள் அல்லது மிக மோசமான ஊழல் போன்றவற்றுக்குக் காரணமாகவிருந்தார்களாயின் அவர்களோ அல்லது அவர்களது குடும்ப அங்கத்தினர்களோ அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் அதிகாரத்தை 7031(c) சட்டப்பிரிவு இராஜாங்கச் செயலாளருக்கு வழங்குகிறது. அத்தோடு அவர்களைத் ‘தடை செய்யப்பட்டவர்களாகப்’ பகிரங்கமாக அறிவிப்பதற்கான அதிகாரத்தையும் இச் சட்டம் இராஜாங்கச் செயலாளருக்கு வழங்குகிறது.

ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா. சபையும் இதர அமைப்புகளும் ஆவணப்படுத்தி வைத்திருந்தமையும், அவற்றின் உண்மை, நம்பகத்தன்மை ஆகியன நிரூபிக்கப்பட்டமையும், அமெரிக்கா இந்த நிலைப்பாட்டை எடுப்பதற்குத் துணைபோயிருக்கின்றது.

“அவர் (ஷவேந்திர சில்வா) மீது விதிக்கப்பட்டுள்ள தடை, இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலிலும் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக நாம் எவ்வளவு தூரம் சிரத்தையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதையும், தண்டிக்கப்படாத மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம், அவற்றுக்கான பொறுப்புக்கூறல் ஆகியன பற்றி நாம் கொண்டுள்ள அக்கறையையும் எமது இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. மனித உரிமைகளை மேம்படுத்துங்கள், போர்க்குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டுவாருங்கள், நீதியையும் நல்லிணக்கத்தையும் முன்னெடுக்க ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என இலங்கையை நாம் கேட்டுக் கொள்கிறோம்” என இராஜாங்கச் செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கை அரசாங்கத்துடனான எமது பங்காளியுறவையும், நாம் பகிர்ந்துகொள்ளும் அதன் மக்களுடனான நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தையும் நாம் பெரிதும் மதிக்கிறோம். எமக்கிடையேயான இருதரப்பு உறவைப் பலப்படுத்துவது, தற்போதுள்ளதும், இனி வரக்கூடியதுமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள்ளும் வழியில் பாதுகாப்புப் படைகளைத் தயார்ப்படுத்துவது போன்ற விடயங்களில் அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும். பயிற்சி, உதவி, ஈடுபாடு போன்ற விடயங்களில் நாம் வழங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் மனித உரிமைகள் மீதான மதிப்பு எப்போதுமே ஒரு முக்கியமான கூறாகவிருக்கும் என்பதையும் நாம் உறுதிசெய்கிறோம்.

உலகம் முழுவதிலும் எங்கு, யாரால் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டாலும் அவற்றின்மீது நடவடிக்கை எடுப்பதற்காக எப்படியான கரூவிகளையும்ம, அதிகாரங்களையும் பாவிக்க அமெரிக்கா தொடர்ந்தும் தயாராகவிருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பான ஆதரவு, மீறல்களைச் செய்தவர்கள் மீதான பொறுப்புக் கூறல், அமைதியும், ஸ்திரமும், செழிப்பும் கொண்ட இலங்கையை உருவாக்குதல் ஆகிய விடயங்களில் நாம் எவ்வளவு தூரம் அர்ப்பணிப்போடு செயற்படுகிறோம் என்பதை இன்றைய அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது” என அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளர் மைக்கேல் பொம்பியோ ஊடகவியலாளருக்கு இன்று (14) விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.