NewsSri Lanka

ஷவேந்திர சில்வாவின் நியமனம் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கிறது – OHCHR

27 August 2019

லெப்டினண்ட் ஜெனெரல் ஷவேந்திர சில்வா சிறீலங்காவின் இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து ஐ.நா. நிபுணர்கள் குழு கடும் அதிருப்தியத் தெரிவித்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) தெரிவிக்கிறது.

நீண்ட காலமாகத் இழுத்தடிக்கப்பட்டு வரும் பாதுகாப்புத் துறையின் சீர்திருத்த நடவடிக்கைகளையும், முன்னர் இழைக்கப்பட்ட கொடுமைகள் மீதான விசாரணைகளையும் உடனடியாக மேற்கொள்ளும்படி சிறீலங்கா அரசாங்கத்தை இந் நிபுணர்கள் கேட்டிருக்கிறார்கள் என உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

அவ்வறிக்கையில், ஆகஸ்ட் 18 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் லெப். ஜெனெரல் ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதென்பது, 25 வருட யுத்தத்தின் போது சில்வாவின் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்தவித கரிசனையும் காட்டப்படவில்லை என்பதையே காட்டுவதாகவும் இது மனித உரிமை ஆணையாளர் உட்படப் பலரையும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

” இப்படியான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலைமையில், லெப்.ஜெனெரல் சில்வாவின் நியமனம் பாதிக்கப்பட்டவர்களை மேலும் அவமானப்படுத்துவதாகவும், பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களும் இந்நாட்டில் தண்டனைகள் எதுவுமின்றித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது என்பதையுமே காட்டுகிறது. இது அரச நிறுவனங்கள் மீது சிறீலங்கா சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்த்துவிடும் ஆபத்தை உருவாக்குவதாகவுமே படுகின்றது” என அந் நிபுணர்கள் கூறுகிறார்கள் என அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

மே 2009 இல் இறுதிப்போர் நிறைவுக்கு வரும்போது லெப்.ஜெனெரல் சில்வா சிறிலங்கா இராணுவத்தின் 58 வது படைப்பிரிவுக்குக் கட்டளை அதிகாரியாக இருந்தார் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லெப்.ஜெனெரல் ஷவேந்திர சில்வா

ஐ.நா. அறிக்கை, சில்வாவையும் அவரது படைகளையும் போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களாகவும் இனம் காட்டுகிறது. 2012 இல் சில்வா, ஐ.நா.வின் அமைதி காக்கும் படைகளின் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீதும், அவர் நிர்வகித்த படையினர் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இன்றுவரை முறையாக விசாரிக்கபப்டவில்லை என ஐ.நா. நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் 30/1 இன் பிரகாரம், போரின்போது புரியப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தவறுகள் மீதான பொறுப்புக்கூறல் விடயங்களை நிறைவேற்றுவதாக சிறீலங்கா அரசு, தானாகவே முன்வந்து சம்மதம் கொடுத்திருந்தது என்பதை நிபுணர்கள் நினைவுபடுத்தினர்.

” சிறீலங்கா இராணுவத்தின் சில படையினர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தும் அவர்களை விசாரித்து வழக்குப் பதியும் விடயங்களில் முன்னேற்றம் காணப்படாமையும், படைத் துறை சீர்திருத்தப்படாமையும் மிகவும் கவலையைத் தருகின்றது. இவ்விடயங்களில் துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்” என நிபுணர்கள் தெரிவித்தனர்.

பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படாமையும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நீதித்துறைக்கு இருக்கும் குறைபாடுகளும் பற்றி, உண்மையையும், நீதியையும் முன்னெடுத்து, இழப்புகளை ஈடுசெய்யவும், தவறுகள் மீண்டும் ஏற்படாதவாறு தடுப்பதற்கான உததரவாதத்துடன் நடைமுறைகளை செயற்படுத்தவும் வேண்டி ஐ.நா.வின் விசேட தூதுவர் 2017இல் அரசைக் கேட்டிருந்தார்.

“இக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய சிறீலங்கா அரசுக்கு முடியாமலோ அல்லது விருப்பமில்லாது போனாலோ, உலக வரம்புகளுக்குள் இணங்கக்கூடிய பொறுப்புக்கூறல் நடைமுறைகளை அமுற்படுத்தும் முயற்சிகளைச் சர்வதேச சமூகம் எடுக்க வேண்டும்” என போர்க்குற்றங்களை முன்னெடுக்கும் நடைமுறைகளை உதாரணம் காட்டி ஐ.நா.நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர்.