ஷவேந்திரசில்வாவின் போர்க்குற்றங்கள் பற்றிய புதிய தகவல்கள் – ITJP

போர்க் குற்றங்களுக்காக வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் உள்ளன

இறுதிப் போரின் போது மேஜர் கெனெறல் ஷவேந்திர சில்வா இழைத்ததாகக் கருதப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (International Truth and Justice Project (ITJP)) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட இவ்வமைப்பு, 2008 -09 காலகட்டத்தில் நடந்த போரின்போது முன்னணி வகித்த கட்டளைத் தளபதிகளில் ஒருவரான சில்வாவின் நடவடிக்கைகளைப் பற்றிய விளக்கமான குறிப்புகளை 137 பக்க அறிக்கையாக வெளியிட்டுள்ளது. படங்கள், குறுந்தகவல்கள் (SMS), இராணுவ வாக்குமூலங்கள், அழிக்கப்பட்ட இராணுவ அறிக்கைகள் (மீளுருச் செய்யப்பட்ட கணனித் தரவுகள்), முந்தைய ஐ.நா. விசாரணை அறிக்கைகள் என, இது வரை எந்த இராணுவக் கட்டளைத் தளபதியும் சந்தித்திராத அளவுக்கு ஆதாரங்களைத் திரட்டி இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்களிடமிருக்கும் தகவல்களில் ஒரு மிகச் சிறிய அளவே இவ்வறிக்கையில் வெளியிடப்படுகின்றது. ஷவேந்திர சில்வா எவ்வித தண்டனையும் பெறாமல் பதவியுயர்வு பெற்றுப் பணியாற்றும் வரைக்கும் சர்வதேச சமூகம் சட்டம், ஒழுங்கு, பொறுப்புக் கூறல் விடயங்களைப் பற்றிப் பேசிக்கொள்ள முடியாது  என அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா அவர்கள் தெரிவித்துள்ளார்.

2008-09 காலப்பகுதியில் ஷவேந்திர சில்வா 58வது படையணியின் கட்டளைத் தளபதியாகவிருந்தபோது புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்களில், இவ்வறிக்கையில் இடம்பெறும் சில:

  • பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்.
  • மருத்துவ மனைகள், அதன் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்
  • பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதல்
  • தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்தமை

அத்தோடு கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, பொக்கணை, புதுமாத்தளன், வலைஞர் மடம் மற்றும் முள்ளி வாய்க்கால் ஆகிய பகுதிகளில் வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சில்வாவின் பங்கு பற்றியும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வட்டுவாய்க்கால் பாலத்தில் வைத்து விடுதலைப்புலிகள் சரணடைந்த போது அதை மேற்பார்வை செய்த தளபதி சில்வா தான். சரணடைந்த புலிகளின் தலைவர்களது கைகளைக் குலுக்கி வரவேற்றதும் தளபதி சில்வா தான். பின்னர் சரணடைந்த தலிவர்களின் உயிரற்ற உடல்கள் பாலத்தின் மறு பக்கத்தில் கிடந்தன. இத்தனைக்கும் சில்வா அப் பகுதியில் தொடர்ந்தும் தன் கட்டளைகளைப் பணித்துக் கொண்டிருந்தவர். இக் காரணத்தால் நடைபெற்ற அனைத்து போர்க்குற்றங்களுக்கும் அவர் பொறுப்பாளியாவார்.

இதே போன்று 2017ம் ஆண்டு ஷவேந்திரா சில்வாவிற்கு அடுத்த நிலை கட்டளைத் தளபதியாயிருந்த லத்தின் அமெரிக்காவிற்கான தூதுவர் ஜெனெறல் ஜகத் ஜயசூரியா மீது சர்வதேச நீதியதிகாரத்தின் கீழ் ITJP பல போர்க்குற்ற வழக்குகளைப் பதிவுசெய்திருந்தது. இதன் காரணமாக ஜகத் ஜயசூரியா வழக்கு பதிவு செய்த அன்று மாலையே லத்தின் அமெரிக்காவிலிருந்து தப்பியோடி விட்டார்.

‘இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அவர் தொடர்ந்தும் சிறீலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலை அதிகாரியாக இருக்க முடியாது. சில்வா உடனடியாகப் பதவி நீக்கப்பட்டு குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். சிறிலங்கா இவ் விடயத்தில் கவனமெடுக்கத் தவறினால் சிறீலங்காவுடன் நெருங்கிய இராணுவத் தொடர்புகளை வைத்திருக்கும் அப் பிராந்தியத்திலுள்ள இதர நாடுகள் ஷவேந்திர சில்வாவுக்கு விசா அனுமதி மறுக்கவேண்டும் அல்லது அதற்கும் மேலாக அவரைக் கைது செய்ய வேண்டும் ” என சூக்கா மேலும் கூறினார்.