ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு : ட்றம்பருக்கு நோபல் பரிசு?
மாயமான்
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சீன சந்திப்பு பயங்கரமான வெற்றியை ஈட்டியிருக்கிறது. நீண்ட நாள் எதிரிகளான இந்தியாவையும் சீனாவையும் சமரசம் செய்ய வைத்த ரஸ்ய அதிபர் புட்டினுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை வழங்கவேண்டியது நியாயமான உலகின் கடமை. அப்படியொரு நியாயமான உலகத்தை இனிமேல்தான் யாராவது சிருஷ்டிக்க வேண்டும். ஆனால் ஒன்று, புட்டினைக் கொண்டு இந்தியாவையும் சீனாவையும் கை கோர்க்க வைத்து தென்னுலகத்தை (Global South) மேலும் வலுப்படுத்தியமைக்காக ட்றம்பருக்கு நோபல் பரிசைக் கொடுக்க வேண்டுமென இத்தால் நான் பரிந்துரைக்கிறேன்.
நேருவின் காலத்திலிருந்து அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்திருந்த இந்தியாவை, மோடி மூலம் அமெரிக்க அணியில் சேர்க்க அமெரிக்க ஏகாதிபத்தியம் நீண்டகாலமாக முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தது. அசுர பாய்ச்சலில் முன்னேறி வரும் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்து தென்னுலகில் அமெரிக்க நாட்டாண்மையைத் தொடர்ந்தும் வைத்திருக்க அமெரிக்காவின் பலமான ஆயுதப் பட்டறையில் இந்தியா தேவையாக இருந்தது. ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் விவேகம் இயற்கை முட்டாளான ட்றம்பருக்கு இருக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது ட்றம்பரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தவன் நான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாட்டாண்மையை உள்ளிருந்து ஒழித்து உலகிற்கு தற்காலிக விடுதலையைப் பெற்றுத்தரும் வல்லமை ட்றம்பருக்கு மட்டுமே உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு. புட்டினும் இதை நன்றாக உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் 2017 இல் ட்றம்பரின் வரவிற்காக சமூக வலைத்தளங்களை புட்டின் வசப்படுத்தியிருந்தாரோ தெரியாது. இந்தியாமீது 50% வீதம் இறக்குமதித் தீர்வையை விதித்ததன் மூலம் இந்தியாவையும் சீனாவையும் மாத்திரமல்லாது நேட்டோ நாடான் துருக்கி உட்பட வேறு பல நாடுகளையும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரவணைப்பிற்குத் தள்ளி விட்டிருக்கிறார் ட்றம்பர். இது தென்னுலகிற்குக் கிடைத்த மகத்தான வெற்றி.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2025 ஆம் ஆண்டு உச்சி மாநாடு வட சீனாவிலுள்ள ரியான்ஜின் என்னும் நகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் இந்த வருட முதன்மை விருந்தினர் ரஸ்ய அதிபர் புட்டின். இந்திய-சீன ஒற்றுமையை மட்டுமல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் நசுங்கிக்கொண்டிருக்கும் மத்திய ஆசிய, மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றையும் கொண்டுவந்து ஷங்காய் அமைப்பில் இணைக்கும் ஆட்சேர்ப்பு வேலையையும் புட்டினே செய்கிறார். அமெரிக்காவின் கபட வலையில் வீழ்ந்து சோவியத் யூனியனை உடைத்ததன் மூலம் கோர்பச்சேவ் உலகின் இருதுருவ ஒழுங்கை ஒரு துருவ ஒழுங்காக மாற்றியிருந்தார். இவ்வுச்சி மாநாட்டின் பின்னர் அதை ஒருபடி மேலே கொண்டுபோய் பல்துருவ ஒழுங்காக மாற்றியிருக்கிறார் புட்டின். இனிவரும் எதிர்காலம் ட் ராகனுக்கும் யானைக்கும் என சீன அதிபர் ஜின்பிங் புகழுமளவுக்கு இவ்வுச்சி மாநாடு வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.
ட்றம்பரின் முட்டாள்தனமான நடவடிக்கைகள் உலகையே புரட்டிப் போட்டுவிட்டன என்பதைப் பலரும் அறிவர். போகும் வழி தெரியாமல் ஐரோப்பா தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறது. யூக்கிரெய்னில் ரஸ்யா நிறுத்தப்படாவிட்டால் புட்டினின் கனவான சோவியத் யூனியனின் இரண்டாம் வருகை நிச்சயமாக்கப்பட்டுவிடும். ரஸ்யாவில் இப்போதே CCCP சின்னங்கள் அங்கிங்கென்று தலைகாட்ட ஆரம்பித்து விட்டன. ட்றம்பரோ சிக்காக்கோவைப் பிடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். அங்கே பெலாறுஸ், ஈரான், பாகிஸ்தான், மலேசியா, ஆஜபஜான், ஆர்மீனியா ஷங்காய் அமைப்பில் இணைக்கப்பட்டும் இணைவதற்கு வாசலில் காத்துக்கொண்டுமிருக்கின்றன.
செப்டம்பர் 3ம் திகதி முடிவுறவிருக்கும் ரியான்ஜின் உச்சிமாநாட்டின் பிரகடனமாக வரவிருப்பது: உள்ளக விவகாரங்களில் தலையிடாமை, பிறரின் இறைமையை மதிப்பது, பலப் பிரயோகத்தை அனுமதிக்காமை, பொருளாதாரத் தடைகளை நிர்ப்பந்திக்கும் கருவிகளாகப் பாவிப்பதை எதிர்த்தல் ஆகிய கொள்கைகளை ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வரித்துக் கொள்வது. அதாவது ட்றம்பர் தற்போது சுயபிரகடனம் மூலம் செய்வதற்கு முற்றிலும் எதிர்மறையானது இந்த ஷங்காய் பிரகடனம்.
இனிமேல்தான் தெற்குலகில் சூரியன் உதிக்கப்போகிறது. ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு வாழ்த்துக்கள்! (Image Credit: Sputnik/Sergey Bobylev)
