World

வைரஸ் விளைவு | உலகமயமாக்கத்தின் முடிவா?

வல்லரசுகளிடையே வைரஸ் எழுப்பிவரும் புதிய பனிப்போர்
சிவதாசன்

“கடந்த அக்டோபரில் வூஹானுக்கு வந்திருந்த அமெரிக்கப் படைகளினாலேயே கொறோனாவைரஸ் சீனாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது” எனச் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் தனது ருவிட்டர் பதிவுகளின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் மிக இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படும் சமூகவலைத் தளத்தில் இக் குறுஞ்செய்தி 168 மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது. கொரோனாவைரஸின் சீனபரம்பலின் உச்சக்கட்டத்தில் சீன அரசினால் தடைசெய்யப்பட்டிருந்த இச் சமூகவலைத்தளம் தற்போது அரசுக்குச் சார்பான செய்திகளைப் பரப்புவதற்காகப் பாவிக்கப்படுகிறது.

வைரஸ் பரவல் ஆரம்பிப்பதற்கு முன்னரே, ஹொங் கொங்க் ஜனநாயகப் போராட்டத்தில் அமெரிக்கத் தலையீடு மூலம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான பனிப்போர் ஆரம்பித்திருந்தது. இவ்வைரஸ் தொற்று விடயத்தில் ஆரம்பத்தில் சீனா நடந்துகொண்ட முறைபற்றி மேற்குநாடுகள் பலவகையான விமர்சனங்களை முன்வைத்திருந்தன. தொற்றுக்களும், இறப்புக்களும் பெரும்பாலும் சீனாவுக்குள் நடைபெற்றபடியால் மேற்குநாடுகள், குறிப்பாக அமெரிக்கா, அதை ஒரு ‘சீனப் பிரச்சினையாகவே’ அணுகியது. மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தால் உலக சுகாதார நிறுவனம் இப் பரவலை ஒரு எல்லை கடந்த கொள்ளை நோயாக (pandemic) எப்போதோ அறிவித்திருக்க முடியும்.தற்போது சீனாவுக்கும், அமெரிக்காவிற்குமிடையில் மீண்டும் துளிர்விடும் பனிப்போர் உக்கிரமடைவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சீனாவின் பக்கத்தில், அதன் வைரஸ் தொற்றும், இறப்பும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில், மிகப் பெரிய சனத்தொகையுள்ள நாடொன்று வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது என்பதை அது ஒரு சாதனையாகக் கருதுகிறது. அந்த வெற்றிக்கான உரிமையை (credit) அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சீனாவுக்குத் தரத் தயாராகவில்லை. இதனால், இக் கொள்ளைநோயினால் தாம் ‘கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடங்களை’ மேற்குநாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும் அது தயாராகவில்லை. தாம் பெற்ற துன்பத்தை இப்போது மேற்குநாடுகள் அனுபவிப்பது பற்றி சீனா உள்ளூர மகிழலாம், எள்ளி நகையாடலாம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், கொரோனவைரஸை ஒரு ‘சீன வைரஸாக’ ஜனாதிபதி ட்றம்ப் முதல் தீவிர மதப் பிரசங்கிகள் வரை சமூகவலைப்பதிவுகள் மூலமும், பிரசங்க வானொலிகள் மூலமும் ‘அது கடவுளின் செயல்’ என்பது போலக், கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் மெக்சிக்கர்கள் அல்ல, எங்களைத் தடுக்க சுவர்களை எழுப்ப முடியாது என்பதுபோல, அமெரிக்கா தூங்கிக்கொண்டிருந்தபோது, வைரஸ் தன் படையெடுப்பை நடத்திவிட்டது. அதுவும் ‘கடவுளின் செயலே’ எனச் சீனா இப்போது சொல்லிக்கொள்ளலாம், யார் கண்டது?தற்போது வெடித்துள்ள அமெரிக்க – சீன பனிப்போரை (v ?.0 ) ஆரம்பித்தது பொறுப்பற்ற அமெரிக்க அரசியல்வாதிகளும், ஊடகங்களும்தான் என்பதற்கு நிறைய ஆதாரங்களுண்டு. கடந்த பெப்ரவரியில், சீனாவின் வூஹான் நகரில் நோய்த்தொற்று தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்த காலத்தில், அமெரிக்க செனட்டர் ரொம் கொட்டன் “இவ் வியாதி வூஹானிலுள்ள உச்சப் பாதுகாப்பில் இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் ஆரம்பித்தது என்றார். அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ அதை ‘வூஹான் வைரஸ்’ என்றார். கலிபோர்ணியாவின் குடியரசுக் கட்சியின் பிரதிநிதி கெவின் மக்கார்த்தி அதை ‘ சீன வைரஸ்’ என அழைத்தார்.

இப்படியான செய்திகளைத் தவிர்க்கும்படியும், இந் நோய் ஒரு துர்ப்பாக்கியமான அவலம். இதை அரசியலாக்க வேண்டாமெனவும் சீன அரசு கேட்டுக்கொண்டிருந்தது. அப்படியிருந்தும் ட்றம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பனன் இப்படியான செய்திகளுக்கு மேலும் உரமேற்றியிருந்தார்.

இது சீனாவினால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதமல்ல என உலக விஞ்ஞானிகள் உத்தரவாதம் தந்தும் இச் செய்தி இனவாத வானலைகளினால் இப்போதும் எடுத்துவரப்படுகிறது.

தற்போது வைரஸ் எல்லை தாண்டப் பழகிவிட்டது. அதைத் தடுப்பதற்கு ட்றம்பினால் சுவர்களை எழுப்ப முடியவில்லை. இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து சீனா ‘பழி வாங்குகிறது’ என்றே தற்போதய பனிப்போரைப் பார்க்கமுடிகிறது.

தகவல் முடக்கத்துக்கு (information suppression), அத் தகவல் உண்மையாயினும், அதை ஒரு conspiracy theory எனப் பட்டம் சூட்டி, அமெரிக்கா மக்களிடமிருந்து அதை அப்புறப்படுத்திவிடும். மக்களது சுதந்திரத்தில் கைவைக்காமலேயே அவர்களுக்கு நியாயமாகப் போய்ச் சேரவிருந்த தகவலை அது புத்திசாலித்தனமாகப் பறித்துவிடும். அதே தகவலைச் சீனா இரும்புப் பிடியால் மக்களிடமிருந்து பறித்துவிடும். இரண்டு நாடுகளுமே தேசிய பாதுகாப்பு என்ற முலாமைப் பூசி நாட்டில் இருக்கக்கூடிய நீதிமான்களது வாய்களை அடைத்துக்கொள்கின்றன. There are many ways to skin an apple.சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரின் குறும்செய்திக்கு நிறைய வரவேற்பு இருப்பது போலவே ட்றம்பின் ருவீட்டுக்களுக்கும் கணிசமாக உண்டு. எனவே, ‘இச் செய்திகளில் உண்மையில்லை’ என எத்தனை விஞ்ஞானிகள் சங்கங்கள் அறிக்கைகளை விட்டாலும் அவற்றுக்குத் துர்ப்பாக்கியமாகப், படிகளைக்கூடக் கடப்பதற்கான பலம் கூட இருப்பதில்லை.

பொய்ப் பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் ஒருவகையான Stockholm Syndrome என்ற சித்தப்பிறழ்வுக்குள் சென்று தாம் ஆரம்பித்த பொய்ப் பிரசாரங்களைத் தாமே நம்பிவிடுவதும் இச் சுதந்திர உலகத்தில் நடைபெறுகிறது. இல்லாதுபோனால், “நான் ஜனாதிபதியாக வரமாட்டேன் என நம்பித் தேர்தலில் குதித்த ட்றம்ப் இப்போது நானே சிறந்த ஜனாதிபதி, அடுத்த தேர்தலிலும் நானே வெற்றி பெறுவேன்” என மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு மாறியிருக்கிறார் என்றால் எங்கோ பிறழ்வு நடந்திருக்க வேண்டும்.

“அமெரிக்க அரசியல் பிரசங்கிகளின் ‘நச்சு கொறோனாவைரஸ் அரசியல்’ மக்களிடத்தில் பிரிவையும், அச்சத்தையும், வெறுப்பையும் விதைத்து வருகிறது. இப்படியான ஆபத்தானதும், பொறுப்பற்றதுமான பேச்சுக்கள் ஒற்றுமையாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய தருணத்துக்கு எதிர்விளைவுகளையே தோற்றுவிக்கும்’ என சீன ஊடகங்கள் சுதந்திர உலகத்துக்கு வகுப்பெடுக்கும் தருணம் வந்திருக்கிறது.

இவ் வைரஸ், உலகம் எதிர்பாராத பல மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது எனப் பல அறிவாளிகள் எச்சரித்திருந்தார்கள். உலகமயமாக்கம் மீண்டும் ‘நாடுமயமாக்கம்’ என்ற வக்கிரநிலைக்குப் போய் எல்லா நாடுகளும் ‘Make (fill in the blank) Great Again’ என்ற வைரஸ் தொற்றுக்குப் பலியாவதுதான் அந்த மாற்றமா?

நடந்தால் வரவேற்கத்தக்கது.

மார்ச் 13, 2020