Healthகேள்வி-பதில்

வைரஸ்-பக்டீரியா-ஃபங்கஸ்: என்ன வித்தியாசம்?

கேள்வி பதில்

பொதுவாக எமது உடலில் தொற்றுநோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் மூன்று வகைப்படும். வைரஸ் (virus), பக்டீரியா (bacteria), ஃபங்கஸ் அல்லது பூஞ்சணம் (fungus) ஆகியனவே அவை. இவை மூன்றும் வெவ்வேறுவகையான சளிசுரங்களைத் (நிமோனியா) தோற்றுவிப்பன என்றாலும் பொதுவாக காய்ச்சல், தடிமன் என்றால் மருத்துவர்கள் உடனே வாயைத் திறந்து தொண்டையை ஆராய்வார்கள். தொணடை சிவப்பாக அழற்சியுடன் இருந்தால் வேறு பரிசோதனைகளையும் செய்துவிட்டு அது பக்டீரியத் தொற்று என்று கூறி அண்டிபயோட்டிக் மருந்துகளைப் பரிந்துரைப்பதைக் கண்டிருப்பீர்கள். பக்டீரியத் தொற்றின் அறிகுறி இல்லாவிட்டால் காய்ச்சலுக்கு ரைலனோலைப் போட்டுவிட்டு நல்லா நீராகாரத்தை அருந்தும்படியும் சொல்லி அனுப்பிவிடுவார்கள்.

வைரஸ்

இது புரதக் கோதுக்குள் அடைபட்டிருக்கும் ஒரு மரபணுத் துண்டு என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு உயிர் இருக்கிறதா அல்லது வெறும் சடமா எனத் திடமாகச் சொல்வதற்கு விஞ்ஞானிகள் இன்னும் தயாராக இல்லை.

வைரஸ் உயிர்வாழ்வதற்கு இன்னுமொரு உயிரின் கலம் தேவைப்படுகிறது. அது மனிதக் கலமா அல்லது பறவை, மிருகத்தின் கலமா என்று அவசியமில்லை. கலத்துக்கு உள்ளே நுழைந்ததும் கோதுக்குள் சிறைப்பட்டிருக்கும் மரபணு கலத்தின் இயங்கு பண்புகளைத் ‘திருடி’ த் தானே தன்னைப் பிரதி செய்யத் தொடங்கிவிடும். இதனால் அக் கலம் ஊதி வெடித்து அருகிலுள்ள இதர கலங்களிலும் வைரஸ் தொற்றிக் கொள்கிறது. வைரஸுக்கு மனித, விலங்கு கலங்கள் தான் வேண்டுமென்பதில்லை. பக்டீரியா, ஃபங்கஸ் உடல்களிலும் அது புகுந்து தனது சிருஷ்டிகளைச் செய்ய வல்லது. சமீபத்தில் உலகை ஆட்டிப்படைத்த கோவிட் ஒரு வைரஸ் தொற்று. இதுபோல் HIV/AIDS, Ebola போன்ற மோசமான வியாதிகளுக்கும் வைரஸ் காரணமாகிறது.

வைரஸ் மனித உடலில் புகுந்ததும் உடலின் பாதுகாப்பு பொறிமுறை (immune system) அதை அடையாளம் கண்டு அதற்கு எதிராகத் தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்குள் வைரஸின் இனப்பெருக்கம் மிக வேகமாக நடைபெற்று விடுமானால் மனித உடலில் நோய் பற்றிக்கொண்டுவிட்டது என்று அர்த்தம். எனவே தான் மனித உடலின் பாதுகாப்பு பொறிமுறையை எப்போதும் பலமானதாக வைத்துக்கொள்ளவேண்டுமென மருத்துவர்கள் சொல்வார்கள்.

மேற்கூறிய மூன்று நுண்ணுயிரிகளிலும் வைரஸ் தான் உருவத்தில் மிகச் சிறியது. இதனால் இது தும்மும் போதும், இருமும்போதும் காற்றில் இலகுவாக மிதந்துசென்று அடுததவரைத் தொற்றிக்கொள்கிறது. சில வைரஸ்கள் பிறரது உடற் திரவங்கள் மூலமும், நுளம்புகள் மூலமும் தொற்றிக் கொள்கின்றன.

வைரஸ்கள் பலவித வடிவங்களில் தம்மை மாற்றிக்கொள்ளக்கூடியவை. எனவே இவற்றை அடையாளம் கண்டு தனித்தனியாக மருந்துகளைத் தயாரிக்க முடியாது. அதைவிடவும் இவை மனிதக் கலங்களுள் ஒளித்திருக்கும்போது மருந்துகளினாலும் அவற்றைத் தொடமுடியாது. எனவே அவற்றை உடலின் பாதுகாப்பு பொறிமுறைதான் அழிக்கவேண்டும். தடுப்பு மருந்துகளை எடுப்பவர்களின் உடல்கள் சில குறிப்பிட்ட பருவகால வைரஸ்களுக்கு அல்லது அறியப்பட்ட தொற்றுநோய்களுக்கு எதிரான நிர்ப்பீடனத் தன்மையை (immune) உடலில் முற்கூட்டியே வளர்த்துவிடுகின்றன. பொக்கிளிப்பான், சின்னம்மை போன்ற வைரஸ் தொற்றுக்கள் ஒருமுறை வந்தால் மீண்டும் வராது என்பதற்குக் காரணம் அவ்வைரஸ்களுக்கு எதிரான நிர்ப்பீடனத்தை உடல் ஏற்கெனவே தயாரித்து விட்டது என்றபடியால் தான்.

பக்டீரியா

வைரஸைப் போலல்லாது இது ஒரு உயிருள்ள ஒற்றைக்கல (single cell) நுண்ணுயிர். அது உயிர்வாழ மனித உடல்தான் வேண்டுமென்றில்லை. மண்ணிலோ, நீரிலோ அது வாழ்ந்து தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்யக்கூடியது. காற்றினாலோ அல்லது நீர், உணவு போன்றவற்றாலோ அது பரவக் கூடியது.

வயிற்றுப் போக்கு, தொணடைக் கரப்பான் (strep throat), சிறுநீர்ப்பாதைத் தொற்று (urinary tract infections), காச நோய் (tuberculasis) போன்றிய நோய்கள் பக்டீரியாவினால் ஏற்படுபவை எனப்படும். வைரஸால் பாதிக்கப்பட்டு அழற்சிக்குள்ளாகிய நுரையீரலில் சுவர்களில் பக்டீரியா தொற்று (secondary infection) ஏற்படும்போது அது சிலவேளைகளில் நிமோனியா (சளிசுரம்) ஆக்கிவிடுவதுண்டு.

பொதுவாக பக்டீரியா எமக்குப் பகையாளி என்பதைவிட நெருங்கிய நண்பர் என்றே கூறவேண்டும். நாம் பிறந்த நாள் முதல் எமது தாயாரிலிருந்தும் பின்னர் நாம் தவழ்ந்து வளரும் மன்ணிலிருந்தும் ஏகப்பட்ட வகையான பக்டீரியாக்கள் எமதுடலில் தொற்றிக்கொள்கின்றன. எமது சமிபாட்டுத் தொகுதியில் இவை மிகவும் சந்தோசமாக வாழ்ந்துவருகின்றன. எமது உணவுகளைச் சமிபாடடையச் செய்வது முதல் தீங்கு தரும் இதர நுண்ணுயிரிகளை அழிப்பதுவரை அவை எமக்கு நன்மையையே செய்கின்றன.

திடீரெனத் தொற்றும் எமக்கு முன்னர் அறிமுகமில்லாத பக்டீரியாக்களே எமக்குத் தீங்கை விளைவிக்கின்றன. இவை எமது உடலின் கலங்களைத் தாக்கியழிப்பது முதல் தாம் சுரக்கும் நச்சுப் பதார்த்தங்கள் (toxins) மூலமும் எமக்குத் தீங்குகளை விளைவிக்கின்றன. சில வேளைகளில் இவ்வகையான பக்டீரியாக்களின் செயற்பாடுகளால் அதிக உசாரடைந்த நிர்ப்பீடன செயற்பாட்டினால் எமது உடலும் பாதிப்புக்குள்ளாவதுண்டு.

பக்டீரியாத் தொற்றைக் கட்டுப்படுத்த அன்ரிபயோட்டிக் என்னும் பெயரில் பலவகையான மருந்துகள் உண்டு. வைரஸ்களைப் போலல்லாது இவை கலங்களுக்கு வெளியே குடலில் வாழ்வதால் மருந்துகளால் இவற்றைக் கொன்றுவிட முடியும். சில பக்டீரியாக்கள் மிகவும் கெட்டித்தனமாக சில மருந்துகளுக்குத் தப்பிப் பிழைக்கப்பழகிவிடுகின்றன. அது மட்டுமல்லாது இதர பக்டீரியாக்களுக்கும் தமது மரபணுக்களைப் பகிர்ந்து எமது மருந்தை உதாசீனம் செய்து வாழப் பழகிக்கொள்கின்றன. இதனால் தான் ஒரே அண்டி பயோட்டிக் மருந்தை குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பாவிக்க மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை.

ஃபங்கஸ்

பக்டீரியா, வைரஸ் போன்றல்லாது ஃபங்கஸ் பல் கல உயிரி. இன்னுமொரு விலங்கினத்துக்கு நிகரானது ஆனால் அளவில் சிறியது. நொதியத் தொற்று (yeast infections), மெனிஞ்சைற்றிஸ் (meningitis) போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது.

ஃபங்கஸ்களில் இரண்டு வகையுண்டு. ஒன்று சூழலில் வாழ்வது மற்றது எம்முடன் இசைபட வாழ்வது. சூழலில் வாழும் வைரஸ் நொதியம் மற்றும் உணவில் வளரும் பூஞ்சண வகை. இவை உதிர்க்கும் வித்திகள் (spores) நுரையீரல் மற்றும் சருமத் துளைகளின் வழியாக உள்ளே நுழைந்து உடலுறுப்புக்களைப் பாதிக்கின்றன. நிர்ப்பீடன ஆற்றல் குறைந்தவர்களை இது இலகுவில் பாதிக்கிறது. இசைபட வாழும் பங்கஸ்கள் பொதுவாக எமது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஃபங்கஸ் தொற்றுக்களைப் போக்க பலவித மருந்துகள் உண்டு. (Image Credit: The Conversation)