Science & Technology

வைரஸ் தொற்றின் போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் தேனீக்கள்!

வைரஸ்களைப் பற்றிப் பல விடயங்கள் மர்மமானவை. ஆனால் ஒரே ஒரு விடயத்தை மட்டும் அவை மறைப்பதில்லை. தமது இனத்தைப் பெருக்கிக்கொள்வதில் மட்டும் அவை பின்நிற்பதில்லை. மனிதருக்கு அடுத்தாற்போல் அவை தமது இனப்பெருக்கத்துக்காக நாடுவது தேனீக்களை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், மனிதரைப் போல் தேனீக்களும் வைரஸ்கள் மீது போர் தொடுக்கின்றன.

தேனீக்களைத் தாக்கும் வைரஸுக்குப் பெயர் Israeli Acute Paralysis Virus. இத் தொற்றின்போது தேனீக்கள், தமது கூட்டிலுள்ள ஏனைய தேனீக்களுக்கு நோய் பரவாமலிருக்க, ஒரு வகையான சமூக விலக்கலைக் கையாளுகின்றன. ஆனால், கெட்டித்தனமான வைரஸ், நோய்த் தொற்றுக்குள்ளான தேனீயின் மூளையைச் சலவை செய்து அயலிலுள்ள தேன்கூட்டில் நோயைப் பரவச் செய்கிறது என ‘நாஷனல் அகடமி ஒஃப் சயன்செஸ்’ என்ற சஞ்சிகை தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

தேனீக்கள் பொதுவாகப் பெரும் சமூகங்களாக வாழ்வன. பல்லாயிரக்கணக்கான இத் தேனீக்கள் உறவினராக இருப்பதுடன் ஒரே வீட்டில் மிக நெருக்கமான வாழ்முறையையும் கொண்டிருப்பவை. அப்படியிருந்தும் வைரஸ் தொற்றை அவை எப்படி பரவாமல் தடுத்துக்கொள்கின்றன என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது.

இதைக் கண்டுபிடிக்க, சம்பெயின் – ஏர்பானாவிலுள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவரான ரிம் கேர்னாட் ஒரு உத்தியைக் கையாண்டார். ஒரு கூட்டின் ஆயிரக்கணக்கான தேனீக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒரு தானியக்கப் பொறிமுறையொன்றைச் செயற்படுத்தினார். பின்னர் வைரஸ் தொற்றுக்குள்ளான தேனீக்கள் சிலவற்றை அக் கூட்டிற்குள் நுழைத்து விட்டார்.கேர்னட்டுடன் கூட்டாகப் பணியாற்றிய இன்னுமொரு பூச்சியியலாளர் (entomologist) அடம் டோல்சால் என்பவர் தாம் கண்டதை விபரிக்கிறார்.

“நாங்கள் அவதானித்தபடி, ஒரு கூட்டிலுள்ள தேனீக்கள், பொதுவாக சகோதரிகளுடன், நோய்த்தொற்றுள்ள தேனீக்கள், நோய் தொற்றாத தேனீக்களுக்கு அருகில் போகாமலும், வழக்கமான வாயினால் உணவூட்டுவதைத் தவிர்த்தும் வந்தன” என்கிறார்.

இந்த சமூக விலக்கல் தேனிக்களின் ‘சிந்தனையால்’ வந்ததல்ல, மாறாக அவற்றின் நோயெதிர்ப்பு ஆற்றல் (நிர்ப்பீடனம்) இச் சமூக விலக்கலைத் தூண்டுகிறது என ஆராய்ச்சியாளர் நம்புகிறார்கள். தமது குழுமத்தையும், இராணியையும் காப்பாற்றுவதற்காக நோய்த் தொற்று வந்த தேனீக்கள் தம்மைத் தாமே விலக்கிக் கொள்கின்றன என அவர்கள் கூறுகிறார்கள்.

அவை எல்லாம் மிக நெருங்கிய சொந்தக்காரர்கள். தமது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பது அவற்றின் கடமை. தேனீக்கள், பல மில்லியன் வருடங்களாக சமூக விலக்கலைக் கடைப்பிடித்து வருகின்றன. அதே வேளை, நோய்த்தொற்று அடுத்த கூட்டிலுள்ள தேனீக்களுக்குப் பரவக்கூடாது என்பதில் அவை பெரிதாக அக்கறை கொள்வதில்லை. இதில்தான் வைரஸ் தன் கெட்டித்தனத்தைக் காட்டுகிறது.

ஏமி ஜெஃப்றி எனும் இன்னுமொரு மாணவி கூறுவதன்படி, கூட்டைக் காவல் காக்கும் தேனீக்கள், நோய்த் தொற்றில்லாத அன்னிய தேனீக்கள் நுழையும்போது காட்டும் தீவிரத்தை, நோய்த் தொற்றுள்ள அன்னிய தேனீக்கள் வரும்போது காட்டுவதில்லை. இதனால், நோயெதிர்ப்புடன் இருக்கக்கூடிய தீனீக்களை விட இரண்டு மடங்கு, நோய் தொற்றிய தேனீக்களை இக் காவல் தேனீக்கள் உள்ளே அனுமதிக்கின்றன என்கிறார்.

தேனீக்கள் தாம் யார், எங்கிருந்து வருகிறோம் என்பதை அறிவிக்கும் இரசாயனப் பதார்த்தங்களை வைரஸ் தனக்குச் சாதகமாக மாற்றிவிடுகின்றன. இதன் மூலம் காவல் தேனீக்கள் ‘இவர்கள் நம்முடையவர்கள்’ என நம்பும்படியாக ஆகிவிடுகிறது என ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர்.

தேனீ வளர்ப்பவர்களுக்கு இது பெரிய சங்கடத்தைக் கொடுத்து வருகிறது. அவர்கள் பல மில்லியன் கணக்கான தேனீக் குடும்பங்களை அருகருகே வைத்து வளர்த்து வருகிறார்கள். நோய்த் தொற்றுள்ள தேனீக்கள் அருகேயுள்ள தேன்கூடுகளுக்கு இலகுவாக கிருமிகளைக் கொண்டு செல்கின்றன என்கிறார்கள் அவர்கள்.