Spread the love

கொறோனாவைரஸ் சீன ஆய்வுகூடத்திலிருந்து மனிதர்மேல் தாவியது என்னும் விவகாரம் சர்வதேச ரீதியில் மீண்டும் பிரச்சினையைக் கிளப்பி வருகிறது.

இது ஒரு ‘சீன வைரஸ்’ என, ஆரம்ப காலங்களில் ஜனாதிபதி ட்றம்ப் மற்றும் ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோர் உரத்துக் கூறி வந்தார்கள். அப்போது அதை ஒரு அரசியல் குரைச்சல் என்பது போலப் பலரும் விமர்சித்திருந்தார்கள். வூஹான் கடலுணவுச் சந்தையில் விற்கப்பட்ட எறும்புண்ணி விலங்கிலிருந்து மனிதருக்குத் தாவியிருந்தது என்ற கருதுகோளை விஞ்ஞானிகளும் ஆதரித்து அதை மரபணு வரிசைபடுத்தல் (genetic sequencing) நிரூபிக்கவும் செய்தார்கள்.

தற்போது, தொற்றின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டும் வேளையில், நோயின் தாற்பரியம் உலகம் எதிர்பாத்ததைவிட மிக மோசமாக ஆகிவரும் நிலையில் வைரஸின் ஆதி மூலம் பற்றிய காய்ச்சல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது விடயத்தில் சீனா உண்மையைச் சொல்ல வேண்டும் என ஜனாதிபதி ட்றம்பும், ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவும் மீண்டும் குரலெழுப்பியுள்ளார்கள்.

நட்ட ஈடாகப் பெருந்தொகையான பணத்தைச் சீனா தரவேண்டுமெனவும், இது குறித்து ஐ.நா. தலையிடவேண்டுமெனவும் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் வற்புறுத்தி வருகிறார்.

“வைரஸ், வூஹானிலுள்ள ஆய்வுகூடமொன்றிலிருந்து புறப்பட்டதா என, வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேட்டதற்கு “இது பற்றி நாங்கள் தீர விசாரித்து வருகிறோம், இது பற்றி இப்போதைக்கு சீன ஜனாதிபதி சி யிடம் எதுவும் பேசுவது முறையல்ல எனவும்” என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

உலகமெங்கும் 2 மில்லியனுக்கு மேல் நோய் தொற்றுக்களும், 136,000 பேர் மரணித்தும், அரை மில்லியனுக்கு மேல் குணமாகியும் இருக்கிறார்கள்.

“இவ் வைரஸ் வூஹானிலிருந்து புறப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். வைரசியல் நிறுவனம் ( Institute of Virology) வூஹான் சந்தையிலிருந்து இரண்டொரு மைல்கள் தூரத்தில் தான் இருக்கிறது. அங்குதான் மனிதர்மீது முதல் தொற்று நடந்திருக்கிறது. சீன அரசு இது குறித்து உண்மையை வெளியிட வேண்டும்” என மைக் பொம்பியோ ஃபொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

இவ் வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஆராய்ச்சியின்போது அது தப்பி மனிதரில் தாவி வெளியே பரவியிருக்கலாமெனப் பல சந்தேகங்கள் பலர் மத்தியிலும் இருந்து வருகின்றது.பிறழ்வுள்ள மரபணுவை மாற்றி (திருத்தி) (gene editing) நோயைக் குணமாக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் முதன் முதலில் ஜேம்ஸ் ரெய்லர் என்பவரால் பரீட்சிக்கப்பட்டது. இப் பரிசோதனையின்போது ஒரு இளைஞர் மரணமடைந்ததையடுத்து மரபணுத் திருத்தப் பரிசோதனைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கடந்த வருடம் சீனாவில் சில விஞ்ஞானிகள் முளையக் கல ஆராய்ச்சியின்போது (stem cell) இந் நடைமுறையைப் பின்பற்றினார்கள் என உலக ரீதியாகக் குரலெழுப்பப்பட்ட போது, சீன அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது. சீனாவில் பெரும்பாலான ஆய்வுகூடங்கள் நேரடியாகவோ அல்லது மறைவாகவோ அரச ஆதரவின்றி இயங்குவதில்லை.

Related:  கோவிட்-19 அறிகுறிகள் | பட்டியலில் சேர்க்கப்பட்ட 4 புதிய நோயகுறிகள்

வெளவால்களிலிருந்து வைரஸ்களைச் சேகரித்து அவற்றை ஆராய்ந்து அதற்கான தடுப்பு மருந்துகளை உருவாக்கி வைத்திருக்க வேண்டுமென்ற முனைப்போடு சீனா, மியன்மார் போன்ற நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகின்றார்கள். வூஹான் வைரசியல் நிறுவனமும் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது. SARS-CoV-2 வைரசின் மரபணு வரிசையை உறுதிபடுத்திய விஞ்ஞானியும் இந் நிறுவனத்தைச் சேர்ந்தவர்தான். சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு எதிர்ப் பக்கத்தில் தான் இவ்வாய்வுகூடம் இருக்கிறது. எனவே, அங்கிருந்துதான் வைரஸ் தப்பியிருக்கவேண்டும் என்பதற்குப் பலத்த ஆதாரங்களும் இல்லாமலில்லை.

சீன அரசின் கீழியங்கும் வூஹான் வைரசியல் நிறுவனம் இக் குற்றச்சாட்டைப் புறந்தள்ளியிருக்கிறது.

இவ் விடயங்களை அவதானித்து, நடைமுறைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய பொறுப்பு உலக சுகாதார நிறுவனத்திற்கே இருக்கிறது. ஆனால் அதன் தலைவர் ரெட்றோஸ் அடனோம் சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறார் என்றும், பெப்ரவரி மாதத்திலேயே வைரஸ் புறப்பட்டுவிட்ட விடயம் தெரிந்திருந்தும் உடனடியாக விஞ்ஞானிகளை அனுப்பி அதை விசாரித்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி, அடனோம் மீது விமர்சனங்களை முன் வைக்கிறார். இச் சந்தேகங்களை நிரூபிக்கும் வகையில் சீனாவுக்கும் அடனோமிற்கும் உறவு இருப்பது தற்போது தெரியவந்துகொண்டிருக்கிறது.

சீனாவில் வியாதி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் வேளையில் அதைக் கொள்ளை நோயாக (pandemic) அறிவிக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்துக்குள்ளேயே விவாதிக்கப்பட்டு பணிப்பாளர்களில் 50% மானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தும், சீனா அதைக் கட்டுப்படுத்திவிடும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறி, அடனோம் அவ்வறிவிப்பைக் கால தாமதப்படுத்தியிருந்தார். அப்போது அது அறிவிக்கப்பட்டிருந்தால் உலக பயணத் தடைகள் முன்னதாகவே நடைமுறைக்கு வந்திருக்கும் என்பது பலரது அபிப்பிராயம்.

“வைரஸ் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்படவில்லை, அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என இன்றும் (வியாழன்), சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் உலக சுகாதார நிறுவனத்துக்கு உத்தரவாதத்தைக் கொடுத்துள்ளார்.

வைரஸ் மனிதரில் தாவிவிட்டது என்ற விடயத்தை உலக விஞ்ஞானிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கவில்லை. அத் தாமத்தினால் தான் வைரஸ் பரவுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது என்ற ரீதியில் அசோசியேட்டட் பிரெஸ் வெளியிட்டிருந்த செய்தியைத் தொடர்ந்து, ஜனாதிபதி ட்றம்பும் வெளிவிவகாரச் செயலாளர் பொம்பியோவும் மீண்டும் இவ்விடயத்தைப் பேசவாரம்பித்துள்ளார்கள்.

சீனாவில், இந் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஆகவிருக்கும்போது அமெரிக்க இழப்புக்கள் 30,000 ஆக இருப்பதுவும் (தேர்தல் அண்மித்து வரும் காலத்தில்), பிரித்தானிய நட்ட ஈட்டுக்கான கோரிக்கையும், ஜனாதிபதி ட்றம்பின் ‘வைரஸின் ஆய்வுகூடக்’ கதையும், இவற்றின் பின்னால் அரசியற் காரணங்கள் இருக்கிறதா எனச் சந்தேகங்களை உருவாக்கினாலும் சீனாவின் இறுக்கமான கட்டுப்பாடுகளும் செய்தித் தணிக்கைகளும் இச் சந்தேகங்களை நிரூபிக்கக் கூடியனவாகவே இருக்கின்றன.

Related:  அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு


அதே வேளை, உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா கொடுத்து வரும் நிதியுதவியை நிறுத்தப்போவதாக நேற்று ஜனாதிபதி ட்றம்ப் எச்சரித்திருக்கிறார். உலக சுகாதார நிறுவனத்தின் சீன சார்பு நிலைப்பாடு இதன் பின்னணியாக இருக்கலாமோவென்ற சந்தேகங்கள் இருப்பினும், இந்த இக்கட்டான நிலைமையில் அது மோசமான விளைவுகளைக் கொண்டுவந்து விடுமா என, இவ் விடயத்தில் தீவிரமாக உழைத்துவரும் பில் கேட்ஸ் போன்றோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ் விடயத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைகளும் அதற்குச் சாதககமாக இருப்பதுபோல் தெரியவில்லை. “இவ் வைரஸ் சீன ஆய்வு கூடத்திலிருந்து தப்பவில்லை என்பதை அது ஆணித்தரமாகச் சொல்லி வருகிறது. அதை மேற்கோள் காட்டி சீன அரசும் தனது மறுப்பறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டு வருகிறது. எனவே இவ் விடயத்தில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் சந்தேகங்கள் நியாயப்படுத்தப்பட்டால் அதற்கு உலக சுகாதார நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும்.

Print Friendly, PDF & Email