வைட்டமின் B12 குறைபாடு: கடுமையான பாதிப்புகளுக்குக் காரணமாகலாம்
அகத்தியன்
எங்கள் உடலில் இரத்தம் உருவாக்கப்படுவது முதல் நரம்புகளின் ஆரோக்கியம், செழுமையான DNA உருவாக்கம் வரை இந்ந்டைமுறைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான பதார்த்தம் வைட்டமின் பி12. இருப்பினும் இதன் குறைபாடு நெடுங்காலத்திற்கு, சிறிது சிறிதாக அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் அறிகுறிகளுக்கு நாம் பழகிப்போய்விடுவதனால் அதன் தாக்கத்தை நாம் உதாசீனம் செய்துவிடுகிறோம். வயது முதிரும்போது இதன் பாதிப்பு பாரதூரமானதாக ஆகிவிடுகிறது. எமது உடல் வைட்டமின் பி.12 ஐ உற்பத்தி செய்வதில்லையாதலால் அதை நாம் உண்ன்ஊம் உணவிலிருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அறிகுறிகள்
வைட்டமின் பி.12 போதாமையினால் ஏற்படும் அறிகுறிகளை இங்கே வரிசைப்படுத்துகிறோம்.
1-சோர்வு / களைப்பு
தொடர்ச்சியான உடற் சோர்வுக்கு வைட்டமின் பி.12 போதாமை காரணமாகவிருக்கலாம். இதற்கு காரணம் எமது இரத்தத்தில் காணப்படும் செங்குருதித் துணிக்கைகள் போதுமான அளவுக்கு ஒக்சிசனைக் காவிச்செல்ல முடியாமல் போவது. நடக்கும்போதும் உடல் பிரயாசத்தின் மூலம் காரியங்களைச் செய்யும்போதும் தசைகளின் இயக்கம் முடுக்கிவிடப்படுகிறது. இத்தசைகள் திறம்பட இயங்குவதற்கு சக்தி தேவை. இரத்தத்தால் கொண்டுவரப்படும் உணவு தசைகளில் வைத்து எரிக்கப்பட்டு சக்தியை உருவாக்குவதற்கு இந்த ஒக்சிசன் அவசியமானது. ஆனால் வைட்டமின் பி.12 குறைபாடுள்ளவர்களது செங்குருதித் துணிக்கைகள் போதுமான ஒக்சிசனைக் காவிவர முடியாமையால் சக்திக் குறைவு ஏற்பட இலகுவில் சோர்வு பீடித்துக்கொள்கிறது. சாதாரண களைப்பு சிறிதுநேர ஓய்வுடன் விடுபட்டுப் போகும். ஆனால் வைட்டமின் பி.12 போதாமையால் வரும் களைப்பு நீண்ட நேரத்திற்கு தாக்குப்பிடிக்கும்.
2- விரல்களில் கூச்ச உணர்வு (tingling sensation)
கை, கால் விரல்களில் அதிர்வு அல்லது கூச்சம் போன்ற உணர்வுகள் தோன்றுவதற்கும் வைட்டமின் பி.12 குறைபாடு காரணமாகும். பரெஸ்தீசியா எனப்படும் உணர்வற்ற நிலை (numbness) அல்லது கைகள், கால்கள் அல்லது நாக்கு நுனியில் தொடர்ச்சியான கூச்ச உணர்வு (tingling) ஆகிய அறிகுறிகள் வைட்டமின் பி.12 குறைபாடு ஆரம்பிக்கிறது என்பதற்கு அறிகுறியாகும். நரம்புகளின் போர்வையாக இருக்கும் பாதுகாப்பு உறையான மையெலின் சிதைவடையும்போது இவ்வுணர்வு வெளிப்படுகிறது. இது ஒரு தற்காலிக விடயம் எனப் பலர் இதை உதாசீனம் செய்துவிடுகிறார்கள். இதனால் நிரந்தரமான நரம்பு பாதிப்பு ஏற்படும் அபாயமுண்டு. சிலருக்கு மின்னதிர்ச்சி போன்ற சடுதியான வலி உடம்பெங்கும், குறிப்பாக கால்களில் அல்லது நாரியில் ஏற்படலாம். இது கவனத்தில் எடுக்கப்படாவிட்டால் நிரந்தர வலியாகா மாறும் ஆபத்தும் உண்டு.
3- தொடர்ச்சியான மன அழுத்தம்
மூளை மற்றும் நரம்புக்கலங்களுக்கிடையேயான தகவற் பரிவர்த்தனை சீராக நடைபெறுவதற்கு செறிவான நரம்பியற்கடத்திகள் (neurotransmitters) அவசியம். இவற்றின் உருவாக்கத்திற்கு அவசியமான முக்கிய பதார்த்தம் வைட்டமின் பி.12. ஒவ்வொரு நரம்புக்கலமும் அருகிலுள்ள மற்றய நரம்புக்கலத்தினூடு தகவலை அனுப்புவதற்கு இடையிலுள்ள நரம்பியற்கடத்தியைப் பாவிக்கிறது. இது பலவீனமாக இருப்பின் தகவல் பரிமாற்றம் பூரணமாக இருக்க முடியாது அல்லது தடைப்பட்டுப்போகும். இதனால் எங்கள் மனநிலை மாற்றங்களுக்குள்ளாகிறது (mood swings). மனப்பதட்டம், அமைதியின்மை, மன அழுத்தம் தினக்கடமைகளில் ஆர்வமின்மை போன்ற அறிகுறிகள் தென்படலாம். பலர் இவ்வறிகுறிகளை சாதாரணமான மன அழுத்தம் (stress ) அல்லது மனநோய் (mental illness) என எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவருக்கு அடிக்கடி மனநிலை மாற்றங்கள், பதட்டம் ஆகியவற்றுடன் மேலே குறிப்பிட்ட இதர அறிகுறிகளும் தென்பட்டால் அவர் தனது வைட்டமின் பி.12 அளவைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
4- ஞாபகமின்மை / அடிக்கடி மறதி
அடிக்கடி மறதி மற்றும் செயற்பாடுகளில் கவனம் செலுத்த முடியாமை, மந்த உணர்வு, மூளைப் புகார் (brain fog) போன்ற அறிகுறிகளிருப்பின் அதற்கும் வைட்டமின் பி.12 குறைபாடு காரணமாகவிருக்கலாம். மேலே குறிப்பிட்டதுபோல் தரவுகளைச் சேமித்து வைத்திருக்கும் நரம்புக்கலங்களிலிருந்து தரவுகளை மீட்டெடுப்பதற்கு துரிதமாக இயங்கும் நரம்புக்கலங்கள் அவசியம். இங்கும் நரம்பியற் கடத்திகளின் துரித செயற்பாடுகள் அத்தியாவசியமானவை. இவ்வறிகுறிகளைச் சிலர் மூப்பு, பலவீனம், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றோடு தொடர்புபடுத்தி வாளாவிருந்துவிடுகின்றனர். அது தவறு. இப்படியான அறிகுறிகள் இருப்பின் வைட்டமின் பி.12 குறைபாடுள்ளதா எனப் பரிசோதிப்பது நல்லது.
5- சருமம் வெளிறுதல்
வைட்டமின் பி. 12 குறைபாடுள்ளவர்கள் சிலருக்கு சருமம் பழுத்ப்பாகவோ அல்லது மஞ்சளாகவோ (காமாளை போல) மாறுவது வழக்கம். உடலில் போதுமான அளவு செங்குருதித் துணிக்கைகள் உருவாகாமையினால் சருமத்திந் சிவப்புத்தன்மை குறைந்தவுடன் மஞ்சள் / பழுப்பு நிறம் வெளித்தெரிகிறது. சிலருக்கு கண்களின் வெள்ளைப் பகுதியும் பிலிரூபின் பதார்த்த அதிகரிப்பினால் மஞ்சள் நிறமாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு.
6- சுவாசிக்கச் சிரமம்
ஏற்கெனவே கூறியதுபோல் செங்குருதித் துணிக்கைகளின் உருவாக்கத்திற்கு வைட்டமின் பி.12 மிகவும் அத்தியாவசியமானது. இதன் குறைபாட்டினால் இரத்த சோகை (anemia) எனப்படும் இரத்தக் குறைபாடு உருவாகிறது. இப்போது உடலின் பாகங்களுக்கு சக்தி உருவாக்கத்திற்கு அவசியமான ஒக்சிசன் காவப்படுவது குறைவடைவதனால் அதை நிவர்த்தி செய்வதற்கு அதிக ஒக்சிசன் தேவை என்ற கோரிக்கையை மூளை இதயத்துக்கும் சுவாசப்பைகளுக்கும் அனுப்பும். இதனால் இதயமும் சுவாசப்பைகளும் வேகமாக இயங்க ஆரம்பிக்கும். சுவாசப்பைகளுக்குள் காற்று போதாமை போன்ற (shortness of breath) உணர்வு ஏற்படும். சிலவேளைகளில் தலையில் பாரமற்ற தன்மை, மயக்கம் வருகிறது போன்ற உணர்வு மற்றும் இதயமும் வேகமாகத் துடிப்பது போன்ற உணர்வு உண்டாகலாம்.
7- பசியின்மை
பசியின்மையும் வைட்டமின் பி.12 குறைபாட்டின் ஒரு அறிகுறியாகும். கலங்களில் உணவு செரிமானம் அடைவதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கடமை இவ்வைட்டமினுக்கு உண்டு. வைட்டமின் பி.12 குறையும்போது பசியும் குறைவடைவதனால் இக்குறைபாடுள்ளவர்கள் உடல் மெலிவடையவும் காரணமாகிறது.
8- வாய்ப்புண்கள்
நாக்கில் பருக்கள் போன்று சிவப்பாக வீக்கம் காணுதல், வாயின் உட்பக்கத்தில் புண்கள் உண்டாகுதலுக்கு வைட்டமின் பி .12 குறைபாடும் ஒரு காரணம். சிலர் இதை சாப்பாட்டு ஒவ்வாமை மற்றும் நோய்த் தொற்று என எண்ணி வேறு விதமான சிகிச்சைகளை மேற்கொள்வதால் வைட்டமின் பி.12 குறைபாட்டை உதாசீனம் செய்துவிடுவதுமுண்டு.
9- கண் கூச்சம் / பார்வைக் குறைபாடு
மங்கலான பார்வை, கண் கூச்சம், பொருட்களில் பார்வையைக் குவிப்பதில் சிரமம் போன்ற விழிப்புலப் பிரச்சினைகளுக்கு வைட்டமின் பி.12 குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிரச்சினையை நீடிக்க விட்டால் பார்வை நரம்பு நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு பார்வையை இழக்கவும் நேரிடலாம்.
10- தள்ளாட்டம்
அவயவச் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பின்மை (coordination) ஏற்படுவதற்கு வைட்டமின் பி.12 குறைபாடும் ஒரு காரணம். நடக்கும்போது சமநிலையைப் பேணமுடியாமை, வீழ்தல் போன்றவை இக்குறைப்பாட்டின் காரணமாக ஏற்படக்கூடும். நரம்புகள் பலமிழப்பதால் நடப்பதற்கு சிரமமாக இருக்கும். மூப்பு அல்லது போஷாக்கின்மை இதற்குக் காரணமாகவிருக்கலாம் எனக் கருதி சிலர் இவ்வறிகுறிகளை உதாசீனம் செய்துவிடுவதுண்டு.
11- மயக்கமடைதல் / இரத்த அமுக்கம் குறைதல்
வைட்டமின் பி.12 குறைபாடு காரணமாக இரத்த அமுக்கம் குறைவதும் அதன் காரணமாக உடல் மிகவும் குளிர்வடைந்து (நடுங்குதல்) மயக்கம் வந்து வீழ்வது மற்றும் தசைகளில் பலம் குறைவாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
12- வயிறு / குடல் சம்பந்தமான உபாதைகள்
வைட்டமின் பி.12 குறைபாடு காரணமாக எழும் வயிறு, குடல் சம்பந்தமான உபாதைகளாக வயிறு ஊதுதல், தொடர்ச்சியான மலச்சிக்கல் ஆகியன ஏற்பட வாய்ப்புண்டு.
வைட்டமின் பி.12 குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்கள் யார்?
வைட்டமின் பி.12 பொதுவாக அசைவ உணவுகளிலேயே இருக்கிறது. எனவே சைவ உணவை மாத்திரம் உண்பவர்கள் இக்குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். வயிறு மற்றும் குடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் (உ+ம்: குறோண்ஸ், சீலியாக்) மற்றும் மிதமான அமிலச்சுரப்பிற்கு (reflux) மருந்துகளை எடுப்பவர்கள் வைட்டமிந பி.12 குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள்.
நாளொன்றுக்கு என்ன அளவில் வைட்டமின் பி.12 எடுக்க வேண்டும்?
பரிந்துரைக்கப்படும் வைட்டமின் பி.12 இன் அளவு வயதுக்கேற்ப வேறுபடுகிறது. முதியோர் நாளொன்றுக்கு 2.4 mcg என்ற அளவிலும், கர்ப்பிணித் தாய்மாரும், மகப்பேற்றுப் பெண்களும் 2.6 2.8 mcg அளவிலும், குழந்தைகள் முதல் பதின்ம வயதினர் வரை 0.4 – 1.8 mcg வரையிலும் எடுக்கலாம். ( Image Credit: Photo by Cristi Ursea on Unsplash)
[இது அறிவூட்டலுக்கும் விழிப்புணர்வுக்குமான கட்டுரை மாத்திரமே. இவ்வறிகுறிகள் உள்ளவர்கள் தமது குடும்ப வைத்தியரை நாடி உரிய சிகிச்சைகளைப் பெறும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்]
