வேலையாளாகப் பணி புரிவதற்கென இயந்திர மனிதன் (robot) – ரெஸ்லா உருவாக்குகிறது
தொழில்நுட்பம்
வாகனத் தயாரிப்பு, விண்கலத் தயாரிப்பு ஆகியவற்றிகளில் வெற்றிகளைக் கண்ட தொழிலதிபர் எலான் மஸ்க், இப்போது வேலையாள் (இயந்திர) தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார்.
‘ரெஸ்லா பொட்’ (Tesla Bot) எனப் பெயரிடப்பட்ட இந்த இயந்திர மனிதன் (robot) தனிப்பட்ட ஒருவரது பிரத்தியேக வேலையாளாகப் பணிபுரியும் வகையில் வடிவமைக்கப்படுகின்றது. ரெஸ்லா வாகனத்தில் தற்போது பாவனையில் இருக்கும், கமரா, சென்ஸர் போன்ற பெரும்பாலான கருவிகள் இந்த இயந்திர மனிதனில் பாவிக்கப்படுமெனக் கூறப்படுகிறது.
இந்த ரெஸ்லா பொட், 5 அடி, 8 அங்குலம் உயரமும் 125 இறாத்தல் எடையைக் கொண்ட மனித உருவில் இருக்குமெனவும், முகத்துக்குப் பதிலாக காட்சித் திரை (screen) ஒன்று இருக்குமெனவும் கூறப்படுகிறது. அதன் நகரும் வேகம் மணித்தியாலத்துக்கு 5 மைல்கள் எனவும் கூறப்படுகிறது.
மனிதர்களால் செய்வதற்கு ஆப்பத்தானவை எனக் கருதப்படும் பணிகள், திரும்பத் திரும்பச் செய்யப்படும், போரடிக்கும் பணிகள் ஆகியவற்றைச் செய்வதற்கு ரெஸ்லா பொட்டைப் பாவிக்கலாமென ரெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ரெஸ்லா நிறுவனம் தற்போது தயாரிக்கும் உதிரிப் பாகங்கள் பல இந்த இயந்திர மனிதநின் உருவாக்கத்திற்காப் பயன்படுத்தப்படும். எனவே ரெஸ்லா நிறுவனம் இப்போதே உலகின் மாபெரும் ரோபோட்டிக் நிறுவனம் எனவும் அதில் பணிபுரிய நிறைய பொறியியலாளர்களும், செயற்கை விவேக மென்பொருள் தயாரிப்பாளர்களுமே தேவை எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வீட்டுப் பணியாளர்களாக ரெஸ்லா பொட்களைப் பாவிக்கும் எண்ணத்துடனேயே இத்திட்டத்தில் இறங்கியுள்ளதாகவும், உடலால் வேலை செய்வதென்பது எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு தேர்வாக (choice) மட்டுமே இருக்கும் எனவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய விரும்பாதவர்கள் அப்படிச் செய்யத் தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் எண்ணக்கருவில் உருவான வேறு பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன என்பதால் இதற்கும் அப்படியான கதி நேராலாம் எனவும் அவர் ஐயம் தெரிவித்துள்ளார்.
ரெஸ்லா பொட்டுக்கான முதலுரு (prototype) அடுத்தவருடம் மட்டில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.