ஒன்ராறியோ மாகாணம் நடமாட்ட முடக்கத்தைத் தளர்த்தும்போது வேலைத் தலங்கள் இயலுமானவரை கோவிட் தொற்றின்றி இருப்பதற்காக மாகாணத்தின் முதல்வர் டக் ஃபோர்ட் ஒரு புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
கைகளில் அணியும் டிஜிட்டல் காப்பு / கைக்கடிகாரமான இவ்வணிகலன் மக்களை ஆறடி தூரம் விலத்திவைக்க உதவுமென அவர் நம்புகிறார்.
ரொறோண்டோ தொழில்நுட்ப நிறுவனமான Facedrive, தயாரித்திருக்கும் இந்த டிஜிட்டல் காப்பு, ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டிருந்தால், அது பற்றி அவர் வேலைசெய்யும் வேலைத்தலம் முழுவதுக்கும் பறைசாற்றிவிடும். அத்தோடு இரண்டு பணியாளர்கள 6 அடி தூர இடைவெளியைக் கடைப்பிடிக்காவிட்டாலும் இக் காப்பு காட்டிக்கொடுத்துவிடும்.
கனடிய மத்திய அரசினால் வெளியிடப்பட்ட கோவிட் எச்சரிக்கைச் செயலியைப் (Covid Alert App) போல ‘The Band’ என அழைக்கப்படும் இக் காப்பும் புளூ ரூத் எனப்படும் சமிக்ஞைப் பரிவர்த்தனையைப் பாவித்து இக் காட்டிக்கொடுப்புக்களைச் செய்கிறது. GPS போன்ற நடமாட்டத்தைப் பின் தொடரும் தொழில்நுட்பங்களை இது பாவிக்காத படியால் தமது பிரத்தியேகங்கள் (ஒளிவு மறைவுகள்) காட்டிக்கொடுக்கப்பட்டுவிமென்று ஒருவரும் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்கிறது Facedrive. The Band, ஏற்கெனவே தேகாப்பியாசத்தைக் கண்காணிக்கும் Fitbit போன்ற மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக் காப்பு, கீச்சிடுதல் மற்றும் ரீங்காரமிடுதல் போன்ற முறைகளில் தனது அறிவித்தல்களைச் செய்கிறது. ‘தொற்றுள்ளவருக்கு அருகில் சென்றிருப்பது’, ‘தனிமைப்படுத்தலை மேற்கொள்ளும்படி பரிந்துரை வழங்கல்’ அல்லது ‘சுவாச அறிகுறிகளைக் கண்காணிக்கும்படியான எச்சரிக்கை வழங்கல்’ போன்ற வழிகளில் இக் காப்பு எச்சரிக்கைகளை வழங்குகிறது.
விமானங்களில் பயணம் செய்யும்போதோ அல்லது பாடசாலைகளிலோ அல்லது கட்டுமானத் தொழில் நடைபெறுமிடங்களிலோ கோவிட் எச்சரிக்கை செயலி போன்றவற்றை அடிக்கடி பார்த்துக்கொள்ளமுடியாது. இப்படியான சந்தர்ப்பங்களில் இக் காப்பு மிக வசதியாகவிருக்கும் என அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
வேலைத் தலத்தில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதென உறுதிப்படுத்தப்பட்டால் அவர் யார் யாருடன் மிக நெருக்கமாக இருந்திருந்தார் என்பதை, இக் காப்பின் TraceScan தொழில்நுட்பத்தின் மூலம் தொழில் முகாமையாளரால் இலகுவாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
இத் தொழில்நுட்பத்திற்காக ஒன்ராறியோ மாகாணம்$2.5 மில்லியன் டாலர்களை முதலிடுகிறது. Facedrive மற்றும் அதன் பங்காளியான வாட்டர்லூ பல்கலைக்கழகம் ஆகியன, 150,000 ‘காப்பு’க்களைத் தயாரிக்கவுள்ளனவெனவும் இதற்காக ‘Ontario Together Fund’ எனப்படும் திட்டத்தின் மூலம் மாகாண அரசு முதலீடு செய்யவுள்ளதெனவும் தெரியவருகிறது.