வேலணை மத்திய கல்லூரி | புதிய அதிபர் மீதான தடை நீக்கம்
வி.இ. காஸ்டன் ரோய் தொடர்ந்தும் அதிபராகக் கடமையாற்றுவார்
மத சார்பான எதிர்ப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த வேலணை மத்திய கல்லூரி அதிபர் விக்டர் இம்மானுவேல் காஸ்டன் ரோயின் நியமனம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து வடமாகாண கல்வி அமைச்சு இத்தடையை நீக்கியதோடு அவரது நியமனத்தையும் உறுதிசெய்துள்ளதென இலங்கை அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.
மத சார்புடைய சிலரது எதிர்ப்புகளின் காரணமாக அதிபர் ரோயின் நியமனத்தை வடமாகாணசபையின் கல்வி அமைச்சு ஒத்திப்போட்டிருந்தது. ஆனாலும் இது தொடர்பாக இலங்கை அதிபர் சங்கம் மத்திய கல்வி அமைச்சருக்கு முறைப்பாடு செய்தமையைத் தொடர்ந்து அமைச்சர் பிரேமஜயந்த வடமாகாணசபையின் தீர்மானத்தை நீக்கியதோடு அதிபரது நியமனத்தை உறுதியும் செய்துள்ளார்.
அதிபர் ரோய் இதற்கு முன்னர் கோண்டாவில் ராமகிருஷ்ண மஹா வித்தியாலயத்தில் கடமை புரிந்து வந்தவர். வேலணை மத்திய கல்லூரியில் அதிபர் பதவிக்கான விண்ணப்பத்தை வடமாகாண கல்வி அமைச்சு விளம்பரப்படுத்தியபோது அதிபர் ரோய் அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது நியமனம் அறிவிக்கப்பட்டபோது பல பெற்றோர்கள் இக்கல்லூரியில் படிப்பவர்கள் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆகையால் அப்பதவிக்கு ஒரு இந்துவையே நியமிக்கவேண்டுமென எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். இப்படியாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் பிள்ளைகள் இக்கல்லூரியில் படிக்கவில்லை என்பதும் இன்னுமொரு குற்றச்சாட்டு. இவ்வெதிர்ப்பின் காரணமாக வட மாகாணசபை அதிபர் ரோயின் நியமனத்தை மீளப்பெற்றுவிட்டு புதிய அதிபருக்கான விண்ணப்பத்தைக் கோரியிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை அதிபர் சங்கம் தலையிட்டு மத்திய கல்வி அமைச்சருக்கு முறையீடொன்றைச் செய்யவேண்டி ஏற்பட்டது.
மத்திய கல்வி அமைச்சரின் தீர்மானத்தை மாற்றுவதற்கு மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாயினும் அவை வெற்றியளிக்கவில்லை என அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. (படம்: முகநூல் (இ-வ முதலாவதாக இருப்பவர் அதிபர் ரோய்)