Spread the love
டாக்டர் எஸ்.ரகுராஜ், MD, மேரிலாண்ட்
பின்னணி
வேப்பிங் |ஈ-புகைத்தல் மூலம் சுவாசப்பை பழுதடைதல் 1
Dr.S.Raguraj, MD

இது தனியே மேரிலாண்ட் மாகாணத்துக்குரிய பிரச்சினை மட்டுமல்ல அமெரிக்காவின் பல மாகாணங்களும் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினை என்பது பின்னர் தெரியவந்தது. அமெரிக்காவிலுள்ள பிரபல நோய்க் கட்டுப்பாட்டு மையம் (Centre for Decease Control) தனது இணையத்தளத்தில் இது பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

சுவாசப்பை தொடர்பான கடுமையான வியாதிகளுடன் பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது தொடர்பாக மேரிலாண்ட் சுகாதாரத் திணைக்களம், சமீபத்தில் விசாரணைகளை மேற்கொண்டது. இந் நோயாளிகள் அனைவரும் தொற்றுநோய்க்கான அறிகுறிகள் எதையும் கொண்டிருக்கவில்லை என்பதும், மாறாக, அனைவரும் ‘வேப்பிங்’ எனப்படும் ஈ-சிகரட் புகைத்தலைப் பழக்கமாகக் கொண்டவர்கள் என்பதும் விசாரணகளின்போது தெரிய வந்தது. அக்டோபர் 1, 2019 வரையில் 23 பேர் ‘வேப்பிங்’ தொடர்பான நோய்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

‘வேப்பிங்’ தொடர்பான சுவாசப்பை நோய்களின் அறிகுறிகள்

அநேகமான ‘வேப்பிங்’ பாவனையாளர்களின் அறிகுறிகள் வாரங்கள் அல்லது மாதங்களின் பின்னர் தான் வெளியே புலப்படுகின்றது. குறுகிய சுவாசம் அல்லது மூச்சுத் திணறல் (shortness of breath),நெஞ்சு வலி (chest pain), சுவாசிக்கும் போது வலி (pain on breathing), மூச்சு வாங்குதல் (wheezing), இருமல் (coughing), இருமும்போது இரத்தம் வருதல் (coughing up blood) ஆகியன பல பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள். மேலும் சிலருக்கு காய்ச்சல் (fever), நடுக்கம் (chills), குமட்டல் (nausea), வாந்தி (vomitting), நிறை குறைதல் (weight loss), வயிற்றுப் போக்கு (diarrhea) அல்லது வயிற்று வலி (abdominal pain) அறிகுறிகளும் இருக்க வாய்ப்புண்டு.

‘வேப்பிங்’ தொடர்பான சுவாசப்பை நோய்களுக்கான காரணங்கள்

இந் நோய்களுக்கான உடனடிக் காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அத்தோடு ஒரு குறிக்கப்பட்ட ஈ-சிகரட் அல்லது பாவிக்கப்படும் பதார்த்தங்கள் என எதையும் இதுவரை இந் நோய்களோடு தொடர்பு படுத்த முடியவில்லை . இருப்பினும், சிகிச்சை பெற வந்தவர்கள் அனைவரும் ரெற்றாஹைட்றோகனாபினோல் (Tetrahydrocannabinol (THC)), கனாபிடிடியோல் (Cannabididiol (CBD) மற்றும் நிக்கொட்டீன் கொண்ட பதார்த்தங்களை (எண்ணைகள்) ‘வேப்பிங்’ கின்போது பாவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்
ஈ-சிகரட் என்றால் என்ன? ‘வேப்பிங்’ என்றால் என்ன?

சிகரட் பாவனைக்கு அடிமையானவர்களின் பழக்கத்தைக் குறைத்து அதை முற்றாக விட்டுவிடுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட கருவியே ஈ-சிகரட். சிகரட் போன்ற உணர்வுகளைத் தரும் அதே வேளை சிகரட் தரும் தீங்கினை விட அதிகம் தீங்கில்லாவையென இக் கருவிகளைத் தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள். சில இரசாயனப் பதார்த்தங்கள் கொண்ட திரவத்தை ஆவியாக்கிப் புகையாகத் தரும், சிகரட் அல்லது சுருட்டுகளைப் போன்ற தோற்றத்துடன் இவை காணப்படும்.

வேப்பிங் |ஈ-புகைத்தல் மூலம் சுவாசப்பை பழுதடைதல் 2

இவற்றை வாயில் வைத்துப் புகையை உள்ளிளுக்கும் போது இப் புகையிலிருக்கும் சில இரசாயனப் பதார்த்தங்கள் (THC, CBD, Nicotine) இரத்தத்துடன் கலந்து சிறிதளவு போதையைக் கொடுக்கின்றன. இப் பதார்த்தங்களுக்கு (அல்லது புகைக்கு) சுவை, மணம் போன்ற வாசனைத் திரவியங்களை எண்ணையில் கலந்த சிறிய புட்டிகளை இக் கருவிகளோடு பொருத்திப் பாவனையாளர் புகைக்கின்றனர்.

Related:  அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது - ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு

‘வேப்பிங்’ என்பது ஆவியாக்குதல் (vaporizing) என்பதன் சுருக்கம் (vaping) ஆகும்.

‘வேப்பிங்’ தொடர்பான நோய்களிலிருந்து எப்படி என்னைப் பாதுகாக்கலாம்?

ஈ-சிகரட்டுகளைப் புகைக்காதீர்கள்

இந் நோய்களுக்குக் காரணம் கஞ்சா அல்லது THC எண்ணைகள் என்கிறார்கள். இது உண்மையா?

இதுவரையில் அடையாளம் காணப்பட்ட காரணம் THC அல்லது CBD சம்பந்தப்பட்ட பதார்த்தங்கள் தான். இருப்பினும் உறுதியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நான் இயற்கை வளர்ப்பின் மூலம் உற்பத்திசெய்யப்பட்ட, ‘சீல்’ செய்யப்பட்ட புட்டிகளில் வரும் THC அல்லது CBD எண்ணைகளையே பாவிக்கிறேன். இவை பாதுகாப்பானவையா?

இல்லை. இது வரையில் எந்தவொரு பதார்த்தமும் பாதுகாப்பானைவையென்று உறுதி செய்யப்படவில்லை. பல நோயாளிகள் ‘சீல்’ வைக்கப்பட்ட புட்டிகளையே பாவித்திருக்கிறார்கள். புட்டிகளில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் எல்லாம் உண்மையாக இருக்கவேண்டுமென்பதில்லை. இப் பதார்த்தங்கள் உண்ணப்படும் போதோ அல்லது சருமத்தில் பூசப்படும் போதோ தீங்கு விளைவிக்காமல் இருக்கலாம் ஆனால் சுவாசப்பைகள் விடயத்தில் iவை நிச்சயமாகத் தீங்கை விளைவிக்கின்றன.

இச் சுவாசப்பை நோய்களுக்குக் காரணம் அதிலிருக்கும் வைட்டமின் ஈ எனக் கூறப்படுகிறது. அது உண்மையா?

இதுவரை எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. பல ஆய்வுகூடங்களில் பரிசோதித்தபோது வைட்டமின் ஈ அசெற்றேற் (vitamin E acetate) சில THC பதார்த்தங்களில் காணப்பட்டது உண்மை.

நான் ஈ-சிகரட் பாவனையை நிறுத்த முயல்கிறேன் ஆனால் முடியவில்லை. என்ன செய்யலாம்?

இதற்கென்று பயிற்றப்பட்டவர்கள் நீங்கள் வாழும் பிரதேசங்களில் இருப்பார்கள். அவர்களை நாடுங்கள். இங்கு அப்படியான சேவைகளை வழங்குபவர்களின் அழைப்பிலக்கம் 1-800-QUIT-NOW. இது 24/7 வரை இயங்குகிறது.

இது பற்றிய மேலதிக தகவல்களை நான் எங்கு பெற்றுக்கொள்ளலாம்?

மேரிலாண்ட் சுகாதாரத் திணைக்களம் இளைய தலைமுறையினருக்காக பல தகவல்களைத் தனது இணையத்தளத்தின் மூலம் வழங்குகிறது. இதன் இணைப்பு TheVapeExperiment.com​.

Print Friendly, PDF & Email