EnvironmentIndia

வேதராஜன் பாலாஜி | சதுப்பு நிலப் பேணலுக்கான ஒரு தனி மனிதனின் பயணம்

பெருமைக்குரிய தமிழர்கள் – 3


முன்னோட்டம்

2004 டிசம்பர் 26 அன்று தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஏறத்தாள 227,000 மக்களின் உயிர்களைக் காவுகொண்டிருந்தது. இப் பேரழிவு கற்றுத்தந்த பாடங்களில் முக்கியமான ஒன்று கரையோர அலை வேலிகளின் அவசியம் பற்றி.

இந்து சமுத்திரத்தில் உருவாகிய ஆழிப்பேரலை பல திசைகளிலும் சீறிப் பாய்ந்தது. அதன் பாதையில் அகப்பட்ட ஊர்களையும், கிராமங்களையும், நகர்களையும் துவம்சம் செய்தது. அப்படியாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது இந்தோனேசியாவின் கரையோரத்திலிருந்த ஆச்சே நகரம். 167,000 மக்கள் இங்கு மரணித்தார்கள்.

அதே வேளை, தென்னிலங்கையில் இதன் கதை வேறாக இருந்தது.

தென்னிலங்கையிலுள்ள கப்புஹன்வெல என்னும் கரையோரக் கிராமத்தில் இரண்டு பேர் மட்டுமே இறந்திருந்தார்கள். காரணம் அக்கிராமத்தின் கரையோரம் 200 ஹெக்ரேர் சதுப்புநிலத் தாவரங்களால் நிரம்பியிருந்தது. ஆழிப்பேரலயின் வேகத்தை அது தணித்து மக்களைக் காப்பாற்றியிருந்தது.

சதுப்புநிலத் தாவரங்கள்

வாண்டுருப்பா, தென்னிலங்கையில் இன்னுமொரு கரையோரக் கிராமம். ஆழிப் பேரலை தாக்குவதற்கு முன்பாகவே அங்கிருந்த சதுப்புநிலத் தாவரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டிருந்தன. விளைவு 5000 முதல் 6000 வரை அக்கிராமத்து மக்கள் கொல்லப்பட்டார்கள்.


வேதராஜன் பாலாஜி

விஞ்ஞானி வேதராஜன் பாலாஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தனி மனித இயக்கம். கரையோரச் சதுப்பு நிலத்தைப் பேணுவதற்காக அங்குள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஒரு மனிதர்.

பாக்கு விரிகுடா (Palk Bay) பாக்கு நீரிணையால் தேக்கப்பட்டுள்ள ஆழமற்ற கடல் நீரைக்கொண்ட பிரதேசம். ஆகக் கூடிய ஆழமாக 13 மீட்டர் வரை இருக்கலாம். அகலம் 57 முதல் 107 கி.மீ. வரை இருக்கும். தமிழ் நாட்டின் பெரும்பாலான ஆற்றுப் படிவுகள் இங்குதான் இறைக்கப்படுகின்றன.

வங்காள விரிகுடா, மன்னார் விரிகுடா ஆகியவற்றின் அலைத் தாக்கங்களால் பாக்கு விரிகுடாவின் கரையோரங்கள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராய்வதை விஞ்ஞானி வேதராஜன் ஒரு சடங்காகச் செய்து வருகிறார்.



ஆழிப்பேரலைக்கு முன்பாகவும், பின்பாகவும் இப் பிராந்தியங்களின் கரையோரச் சதுப்புநில அமைப்புகளைச் செய்மதிப் படங்கள் மூலம் பல விஞ்ஞானிகளும் ஆராய்ந்தார்கள். யப்பானின் கொயோட்டா பல்கலைக்கழக ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விடயம், 100 மீட்டர் அகலமான சதுப்புநிலப் பற்றைகளினால் ஆழிப்பேரலையின் சக்தியைத் 90 வீதத்தால் குறைக்கலாம் என்பது.

இந்தோனேசியாவின் ஆச்சே பிரதேசத்தைத் தாக்கிய 20 மீட்டர்கள் உயரமான பேரலை 167,000 உயிர்களைக் காவு எடுத்திருந்தது. இதற்குக் காரணம் பெரும்பாலான இப் பிரதேசங்களில் இருந்த கரையோரச் சதுப்பு நிலங்கள் இறால் பண்ணைகளின் உருவாக்கத்துக்காக அழிக்கப்பட்டிருந்தன என்கிறார் இந்தோனேசியாவைச் சேர்ந்த சூழலியல் விஞ்ஞானி ஓகஸ் ஹலிம். மனைவியையும், குழந்தைகளையும் ஆழிப்பேரலைக்குக் காவு கொடுத்தவர் அவர். தற்போது இந்தோனேசியாவின் கரையோரப்பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகளை மீள உருவாக்கும் முயற்சிகளுக்கு அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இவரின் அயரா முயற்சிகளினால் ஆச்சே மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமுள்ள கரையோரப் பிரதேசங்களில் சதுப்புநிலக் காடுகளாக்கப்பட்டுள்ளன.

Wetlands International மற்றும் Oxfam Novib ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தோனேசியாவின் சதுப்புநிலங்களைக் காடாக்குதலில் முன்னணி வகிக்கின்றன. இதற்கு அவர்கள் பாவித்த உத்தி வியக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட கிராமத்தவர்களுக்கு சுய தொழில்களை ஆரம்பிக்க இன் நிறுவனங்கள் கடன்களை வழங்கின. கடன்களைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக, அவர்கள் சதுப்புநிலத் தாவரங்களைத் தமது வாழிடங்களில் நட வேண்டும். அவர்கள் நட்ட மரங்கள் 2 வருடங்களுக்குமேல் வாழுமானால், அவர்கள் தாம் பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை.

இத் திட்டம் பெருமளவு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. 70 கிராமங்களில் சுமார் 2 மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளன. சேற்றுப் பகுதியில் சதுப்புநிலத் தாவரங்களும், மணல் பகுதியில் அப்பிரதேசத்துக்குரிய கசூரினா மரங்களும் நடப்பட்டன.

இத்திட்டம் ஆரம்பித்து 5 வருடங்கள் வரை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு இருந்து உதவிகளைச் செய்தன. தற்போது ஆச்சே மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்கள் மீண்டும் பாதுகாக்கப்பட்டுவிட்டன. இன்னுமொரு ஆழிப்பேரலை குறித்து அம்மக்கள் அதிகம் அச்சம் கொள்ளவில்லை என்கின்றன இத் தொண்டு நிறுவனங்கள்.



ராஜேந்திரன்

54 வயதுடைய மீனவர் ராஜேந்திரன் பாக்கு விரிகுடா பிரதேசத்திலுள்ள கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் 15,000 ச.கி.மீ பரப்பளவை ஆக்கிரமிக்கிறது பாக்கு விரிகுடா. அப்பிரதேசத்தின் சூழலில் எப்படியான தாவரங்கள், கடலினம் வாழ்கின்றன என்பன போன்ற விடயங்களில் அவர் ஒரு நிபுணர்.

முருகனும், இன்னுமொரு வகையில் சுய முயற்சியால் நிபுணத்துவம் பெற்றவர். அடைகாத்தவன் கிராமத்தில் அவர் கடற்புல் / கடற் சாதாளை (seagrass) நாட்டி வளர்த்து வருகிறார். கடற் புல்வெளிகளில் எப்படியான மீனினம் வளர்கின்றன என நிரலிட்டுத் தருவதில் அவர் நிபுணர்.

ராஜேந்திரன், முருகன் போன்றவர்கள் அப் பிரதேசத்தின் சூழலமைப்புகள் பற்றியும், எப்படியான தாவரங்களும், கடலினங்களும் அங்கு இசைபட வாழ்கின்றன என்பது பற்றியும் ஏனையோருக்கு வகுப்பெடுக்குமளவுக்கு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். அதே வேளை பேரலையின் தாக்கத்திலிருந்து அவை எப்படிப்பாதுகாப்பளிக்கின்றன என்பதையும் அவர்கள் நேரடியாகக் கண்டவர்கள்.

இதற்கெல்லாம் மூல காரணம் சூழல் விஞ்ஞானியான வேதராஜன் பாலாஜி. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அவர் கிராமம் கிராமமாகச் சென்று மீனவர்களுக்கு இப் ‘பசுமை’ இயக்கம் பற்றிப் போதித்து வருகிறார்.



மோட்டார் சைக்கிள் பயணம்

வேதராஜனுக்குப் 18 வயதாகவிருக்கும்போதே அவருக்கு நீர்க் கீழுலகத்தின் மீது பித்துப் பிடித்துவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சோமநாதபுரத்தில் சில மீனவர்களின் உதவியுடன் நீர்க்கீழுலக வாழ்வைத் தரிசிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு சிறிய தகரத்தாலான மீன் தொட்டியும், கமராவும் கொண்டு நீரடி உலகத்தைப் படமாக்கினார்.

2002 இல் அவர் கடல்சார் உயிரியலில் (marine biology) தனது முதுமாணிப் பட்டத்தைப் பெற்ற பின்னர் தனது மோட்டர் சைக்கிளில் 1,200 கி.மீ. , இந்தியாவின் தென் கிழக்கு கரையோரத்தை வலம் வந்தார். அங்குள்ள கரையோரச் சமூகங்களின் கடல் சார் வாழ்வியலை ஆராய்ந்தார்.

“இப் பயணம் என் வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது. இதன் விளைவாக, எங்கள் கடற்கரையையும், அதில் சார்ந்து வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க, சதுப்புநிலத் தாவரங்கள், கடற் புல், பவளப் பாறைகள் போன்றவற்றைப் பேணுவதன் அவசியத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டுவர வேணுமென்பதை உணர்ந்தேன். இது குறித்த துண்டுப் பிரசுரங்களை அச்சடித்துப் பாடசாலைகளிலும், பஞ்சாயத்துக் கூட்டங்களிலும் விநியோகித்து எனது கருத்துக்களைப் பரப்பினேன்” என VillageSquare.in என்னும் இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் வேதராஜன் தெரிவித்திருக்கிறார்.

பாரம்பரிய அறிவு

கரையோரச் சமூகங்களுடனான ஊடாட்டத்தால், தென் கிழக்குக் கரையோரக் கடல் சார் மக்களினதும், உயிரினங்களின் வாழ்க்கை முறைகளை அறியக்கூடியதாக இருந்தது. இவ் வாழிடங்களிலிருந்து சிறிது சிறிதாக அருகி இல்லாமற் போகும் மீனினங்கள் பற்றி மீனவர்களிடமிருந்து அறிந்து கொண்டார்.

“உதாரணத்திற்கு, இங்குள்ள கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ காலத்தில் போசாக்கிற்காக உண்ணும் சுதும்பு என்னும் ஒருவகை மீன் இப்போது ஏறத்தாள மறைந்து விட்டது. அவை இனப்பெருக்கம் செய்யும் நன்னீர் ஊடகம் அருகி வருவதுவே இதற்குக் காரணம்” என்கிறார் வேதராஜன்.



படகுப் பயணம்

வேதராஜனின் இப்பயணம் அவரது சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பட்டறைகள், கருத்தரங்குகள் மூலம் கடல்சார் உயிரினம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வந்தாலும், 2004 ஆழிப்பேரலையே அவரது கருத்துக்களின்மீது மேலும் உத்வேகத்தைக் கொண்டு வந்தது. சதுப்புநிலத் தாவரங்கள் எப்படி கரையோரக் கிராமங்களைப் பாதுகாக்க முடியும் என்பதை இச் சமூகங்களுக்கு உனர்த்தக்கூடியதாக இப்பயணம் அமைந்தது.

வேதராஜன் தனது கலாநிதிப் பட்டத்துக்காகக் கற்றுக்கொண்டிருந்த வேளை, வனத்துறையில் இணைந்து பணியாற்றுக்கொண்டிருந்தார். அப்போது பாக்கு விரிகுடாவில் நிறைய சதுப்புநிலத் தாவரங்களை நாட்டினார். 2007 இல் அவர் கடல் மார்க்கமாக ஒரு பயணத்தை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தார்.

சுய கற்றலின் மூலம் பழகி, ‘கயாக்கிங்’ (kayaking) எனப்படும் மிதப்புப் படகைச் செலுத்திக்கொண்டு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை கிழக்குக் கரையோரமாகப் பயணம் செய்தார். இதன் மூலம் கடல்சார் சூழல், மீன்பிடி ஆகியவற்றில் சமநிலையைப் பேணுவது தொடர்பாக கருத்துப்பரிமாறல்களை அவ்வப்பகுதிகளிலுள்ள மக்களோடு மேற்கொண்டார்.

பயணம் இலகுவாக் இருக்கவில்லை. 5 முதல் 7 மணித்தியாலங்கள் துடுப்புகளை வலிப்பார். காற்றுக்கெதிராகப் பயணம் செய்வதில் சிரமங்கள் இருந்தாலும் உள்ளூர் மீனவர்கள் அவரது பயணத்துக்கு உதவும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

உள்ளூர் மீனவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அவரவர் கடற் பிரதேசங்களில் எதிர்பாராமல் தோன்றும், அசாதாரண கடல் விலங்குகளைப் பற்றி அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். டொல்ஃபின், திமிங்கிலம் போன்றவற்றின் வரவுகள் பற்றி, மீனவர்கள் மூலம் தகவல்களைச் சேகரித்தார். அவர்களை வனத்துறையுடன் தொடர்பு படுத்தி சிக்குப்பட்டிருக்கும் பெரிய கடல் விலங்குகளைப் பாதுகாப்பாக விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

கடற்புல் (seagrass)

கடற் புல் (சாதாளை)

இக் கடற் பயணத்தின்போது வேதராஜன் கற்றுக்கொண்ட விடயங்களில் ஒன்று, கரையோர மக்கள் சதுப்புநிலத் தாவரங்கள், பவளப்பாறைகள் பற்றி அறிந்திருந்த அளவுக்கு கடற்புல் பற்றியோ, பேரலைகளின் வேகத்தைக் குறைக்கும் அதன் பண்பு, பல்வகை உயிரினங்களை வாழவைக்கும் அதன் சூழல் பற்றியோ அதிகம் அறிந்திருக்கவில்லை என்பது.

நவீன விஞ்ஞான முறைகளைப் பாவித்து வேதராஜன் இரண்டு அளவுகளைச் செய்தார். ஒன்று ஒலித் தெறிப்பு முறையால் (acoustic survey) கடற்புல்லின் இருப்பையும், விஸ்தீரணத்தையும் கணித்தறிந்தார். மற்றது வான் படத்தின் மூலம் (Geographic Information System (GIS) mapping) மூலம் சதுப்பு நிலப் பரப்பளவையும் கணித்தறிந்தார். இவற்றை அடிப்படையாக வைத்து (baseline) அவற்றின் வளர்வு தேய்வுகளை அவதானித்து வந்தார். இத் தகவகளின் அடிப்படையில் அவரின் அவதானங்களை அவ்வப்போது கிராமத்தவருடன் பகிர்ந்து கொண்டார்.

“கடற்புல் நாற்றுச் செய்யும்போது, கிராமத்துப் பெண்கள் இப்பயிர் முளைகளை இதற்காகத் தயாரித்த சட்டங்களில் நடுவார்கள். பின்னர் மீனவர்கள் கடலில் மூழ்கி இச் சட்டங்களைக் கடற் படுக்கையில் புதைப்பார்கள். இதன் மூலம், கடல் உயிரினம் அங்கு தழைத்தோங்கி இசைபட வாழ்தலை அவர்கள் நேரடியாகக் கண்டு அனுபவிக்கக்கூடியதாகவிருந்தது” என்கிறார் வேதராஜன்.

மேலதிக உதவிகள்

ஓம்கார் அறக்கட்டளை கரையோரச் சூழல் மேம்பாட்டில் இணையும் மீனவப் பெண்களுக்கு கால்நடை வளர்ப்பை மாற்றீடாகக் கொடுத்து வருகிறது.

‘ஓம்கார்’ Organization for Marine Conservation, Awareness and Research (OMCAR), வேதாராஜனால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை. இதன் மூலம் அவர் உள்ளூர் இறால் பிடிக்கும் மீனவப் பெண்களை சதுப்புநிலத் தாவரங்களின் நாற்றுக்களைப் பயிரிட ஊக்குவித்தார். இதனால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்வதற்காக, அவர்களுக்கு ஓம்கார் அறக்கட்டளை மூலம் கால்நடைகளைச் சன்மானமாகக் கொடுத்தார்.



“எப்படி இயற்கைமுறை விவசாயத்துக்குத் திரும்புவதை நாம் ஊக்குவிக்கின்றோமோ அதே போல சிறிய அலவிலான மீன்பிடித் தொழில்முறைகளையும் நாம் ஊக்குவிக்க வேண்டிய தேவை உள்ளது. தேவைக்கதிகமான மீன் பிடிப்பினால் இயற்கைச் சமநிலை சீர்குலையாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு மாற்று வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு, இயற்கை விவசாயம் போன்ற முறைகளையும் ஆரம்பிக்க உதவிகளை வழங்குகிறோம்” என்கிறார் வேதராஜன்.

ஓம்கார் அறக்கட்டளையினூடாக, உள்ளூர் மீனவர்களைக் கொண்டு, பாக்கு விரிகுடாவில், இதுவரை 75,000 சதுப்புநிலத் தாவர நாற்றுக்கள் நடப்பட்டுள்ளன. அத்தோடு, 60,000 மாணவர்களை இணைத்து கடற்கரை பேணுகையை மேலும் விஸ்தரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்கரைச் சமூகங்களை ஈடுபடுத்தாமல் இப்படியான முயற்சிகளை மேலெடுக்க முடியாது. வணிக இழுவைப்படகுகளினால் கடலினங்களின் சமநிலை பாதிக்கப்பட்ட்டாலும், இப்படியான பாரம்பரிய மீன்பிடி முறைகளினாலும், இயற்கைச் சூழலைப் பேணுவதாலும் சமநிலையைப் பேணமுடியுமென வேதராஜன் நம்புகிறார்.