Spread the love

சிவதாசன்

பெப்ரவரி 15, 2020

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) என்.வேதநாயகம் திடீரெனப் பதவி மாற்றம் செய்யப்பட்ட விடயம் மிகவும் குழப்பம் தருவதாயிருக்கிறது. மிகப்பெரியதொரு இனவழிப்பிற்கான திட்டமிடலின் ஒரு அங்கமாகவே இதனையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

வேதநாயகம் ஒரு அப்பழுக்கற்ற, ஊழலற்ற, கடமையே கண்ணாகிய ஒரு அபூர்வ பிறவி. இந்தக் காலத்தில், இந்த அசிங்கமான சூழலில், நாற்றமெடுக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் சேவை செய்தது அவர் செய்த பாவம்.

29 வருட சேவை; இன்னும் மூன்றே மாதங்களில் ஓய்வெடுக்கவிருப்பவர்; திடீரென்று பதவி மாற்றப்பட்டு ஒரு மூலைக்குள் விடப்பட்டிருக்கிறார். அது ஒரு வகையில் ஒரு quarantine in reverse தான். அவரது நல்ல குணம் மற்றவர்களுக்குத் தொற்றிவிடக்கூடாது என்பதற்காகவாக இருக்கலாம்.

இது ஒரு அவசர நடவடிக்கை. காரணங்கள் மர்மமாக இருப்பினும் வெளிச்சத்தில் தான் காரியங்கள் நடந்திருக்கிறது. சந்தேகத்துக்குரிய காரணங்கள் நான்கு, இப்போதைக்கு.

ஒன்று: ஏப்ரம் மாதம் தேர்தல் வருகிறது. வழக்கமாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தேர்தலில் returning officer ஆக இருப்பது வழக்கம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் எப்படி நடந்துகொண்டாரென்பது ஜனாதிபதிக்கு மட்டுமே வெளிச்சம். ஊழல்காரருக்கு அவரைக் கண்ணில் காட்டக்கூடாது.

இரண்டு: நடத்தையால் அவர் அரச விசுவாசியாகவிருந்தாலும் உளத்தால் அவர் ஒரு தமிழ்த் தேசியவாதி. அவரது கால்களும் மிதிவண்டியும் செல்லாத தமிழ்ப்பகுதிகள் இருக்க முடியாது என்னுமளவுக்கு அவர் மக்களையும் அவர்களது துன்பங்களையும் அறிந்தவர். அநியாயங்களுக்குத் துணைபோகாதவராகையால் அவருக்கு எதிரிகள் அதிகம். அவரது நல்ல பண்பால் நல்லாட்சிக் காலத்தில் அவரை விரும்பிக் கேட்டு யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவந்தது த.தே.கூட்டமைப்பு. எனவே அவரது ‘நல்லவர்’ என்ற பெயர் களங்கப்பட்டு ‘கூட்டமைப்பின் ஆள்’ என்பது அவர் மீது நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது. இதனால் மட்டுமே கைதட்டிச் சிரிப்பதற்கு நிறையப்பேர் இருக்கிறார்கள்.

மூன்று: நல்லாட்சி அரசில் அவர் தான் செய்யவேண்டிய விடயங்களைச் செய்வதற்கான வெளி இருந்தது. தடைகளில்லை. அது பலருக்குக் கடுப்பேத்தியிருந்தது. தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான்கு: யாழ் பல்கலைக்கழக ஆணையத்தில் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அதனால் அங்குள்ள ஊழல் பேராசிரியர்களுக்கு அவர் ஜென்ம விரோதி.

எனவே வேதநாயகத்தை ஓரங்கட்டியதற்கு ஜனாதிபதி காரணமில்லை. தமிழர்கள் தான் காரணம். அவருக்கும் ‘ஆக வேண்டி’ இருந்தது. அள்ள வேண்டியவர்களுக்கும் ‘ஆக வேண்டி’ இருந்தது.

வேதநாயகம் பற்றி என்.லோகதயாளன் கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் வாசிக்காமல் இருப்பது புத்திசாலித்தனமானது.

வேதநாயகம் படிக்காத அரசியல்வாதிகளின் செல்வாக்கால் அப் பதவிக்கு வந்தவரல்ல. படிப்படியாகப் படித்துப் பட்டம்பெற்று உயர்ந்தவர். பாடசாலை ஆசிரியர், முதுமாணிப்பட்டம், பின்னர் இலங்கை நிர்வாக சேவை ஊழியர் என்று கடுமையான உழைப்பினால் உயர்ந்தவர். கடுமையான போர்க்காலங்களிலும் அவரைத் தண்ணியில்லாக் கிராமங்களுக்கு அனுப்பினார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்தார். போர்க்காலத்தில் அரச ஊழியராகவிருந்து தன் மக்களுக்குச் சேவை செய்வதிலுள்ளதன் சிரமம் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஓடித்தப்பாது மக்களோடு நின்றவர்கள் அவர்கள்.

மக்களோடு நெருக்கமாக இருந்தார் என்பதற்காகவே ஜூலை 2009 இல் பாதுகாப்பு படைகள் அவரைக் கைது செய்தது. அதற்குப் பின்னாலிருந்தவர் இன்னுமொரு அரசியல்வாதி. ஜனவரி 19, 2010 வரை அவர் சிறையிலிருந்தார். வெளியே வந்ததும் கனடா வாராது முல்லைத்தீவுக்கே மோனார். அரசாங்கம் எதிர்பார்த்த அளவுக்கு அவர் மிரண்டோ, பணிந்தோ போய்விடவில்லை.

Related:  13 வது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த நான் அரசாங்கத்துக்கு உதவுவேன் - பிள்ளையான்

2015 இல் நல்லாட்சி ஆட்சியமைத்ததும் கூட்டமைப்பு தன் செல்வாக்கைப் பாவித்து அவரை யாழ்ப்பாணத்தின் மாவட்டச் செயலாளராக்கியது (GA). அன்றே அவர் குறி வைக்கப்பட்டுவிட்டார். இதே போன்று தான் இன்னுமொரு நேர்மையான தமிழ் அரச ஊழியரை யாழ்ப்பாணம் முன்னொருத்டவை இழந்தது. கலாநிதி தேவநேசன் நேசையாவை, அவரது நற்பண்புக்காக அப்போதய தமிழரசுக் கட்சியின் தளபதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்துக்கு அரசாங்க அதிபராகக் கொண்டுவந்தார். 1981-1984 ஆண்டுக்காலத்தில் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர் பகிரங்கப்படுத்தினார். அதனால் அவர் தன் பணியிலிருந்து விலக வேண்டி வந்தது.

வேதநாயகம், தன் பணிக்காலத்தில் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருக்கிறார். 15 க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவிப்பணமும், மேலும் 150 பலகலைக்கழக மாணவர்களுக்கு வேறு பல உதவிகளையும் செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள பிரச்சினை புதிய அரசாங்கத்தின் எடுபிடிகளின் பலப்பரீட்சைகள். யார் கோதாபயவுக்கு மிக நெருக்கம் என்பதில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அங்கஜன் ராமநாதனுக்குமிடையில் இழுபறி. நாமலையா றோஹிதவையா யாழ்ப்பாணத்தின் இளவரசராக்குவது என்பது பற்றிச் சில்லறை அரசியல்வாதிகளுக்குள் இழுபறி.

ராஜபக்ச குடும்பத்துக்கு ஏப்ரல் தேர்தல்கள் மட்டுமே குறி. வடக்கில் வாக்குகளைப் பிரிப்பதற்கு அவர்களுக்குத் தேவையற்றவர் பட்டியலில், துரதிர்ஷ்டவசமாக வேதநாயகம் மாட்டுப்பட்டுள்ளார். அதற்குக் காரணமும் அவரே. பேசாமல் அருமைநாயகம் (GA) போலத் துதி பாடியிருக்கலாம்.

இப்போது, 29 வருடங்களுக்குப் பிறகு, ஓய்வு பெறுவதற்கு இன்னும் மூன்றே மாதங்கள் இருக்கும்போது, அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதற்குப் பின்னால் பல அரசியல்வாதிகளுட்படப் மேலும் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.

முல்லைத்தீவிற்கு ஒரு இராணுவத் தளபதியை மாவட்டச் செயலாளராக்க அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது என அறியப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் உதயகுமார் அவசரம் அவசரமாக ஓய்வெடுப்பதற்கு ஓடித்திரிகிறார். கிழக்கு மாகாண ஆளுனர் பெண்மணி ‘இந் நாடு சிங்கள பெளத்தர்களுக்குரியது’ என்று கர்ச்சிக்கிறார். கட்டாயச் சிங்கள பெளத்தக் கல்வி தமிழர் பாடசாலைகளில் நுழையத்தயாராகிக்கொண்டிருக்கிறது. கோதா வந்தால் தமிழருக்கு விடிவு கிடைக்கும் என்று இன்னும் புலம் பெயர்ந்த சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறது.

எனவே வரப்போகும் தேர்தலில் மக்களுக்கு மிகப்பெரிய கடமையொன்று காத்திருக்கிறது. வழக்கம் போல ‘சரியான பதிலைச் சொல்லி’ வேதாளங்களை நிலத்தில் இறங்காது பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்களது பொறுப்பு.

Print Friendly, PDF & Email
வேதநாயகம் விவகாரம் | இறங்கக்கூடாத  வேதாளங்கள்

வேதநாயகம் விவகாரம் | இறங்கக்கூடாத வேதாளங்கள்