Spread the love
பிந்திய செய்தி | ஜனவரி 22, 2020

கொறோனா வைரஸ் ஆரம்பித்த இடமாகிய, வூஹான் நகரிலுள்ள ஹுவானன் உணவுச் சந்தையில், ஓநாய்க் குட்டிகள் போன்ற காட்டு மிருகங்களின் இறைச்சி உணவாகப் பரிமாறப்பட்டதென்றும் சீனாவில் இதற்கு முன்னர் ஆரம்பித்த, சார்ஸ் போன்ற பல கொள்ளை நோய்கள் இப்படியான காட்டு விலங்குகளிலிருந்தே ஆரம்பமானவை எனவும் சீன ஊடகமொன்று தெரிவித்திருக்கிறது.

நரி, முதலை, ஓநாய்க் குட்டி, பெரிய அரணை, பாம்பு, எலி, மயில், முள்ளம்பன்றி, ஒட்டகம் போன்ற 112 வகை விலங்குகளை உயிருடன் கொண்டுவந்து இச் சந்தையில் சமைத்துக் கொடுப்பதாக இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்படுகிறதென அவ்வூடகம் மேலும் தெரிவித்தது.

கொறோனா வைரஸ் இப்படியான விலங்கு ஒன்றிலிருந்து ஆரம்பித்திருக்கலாமெனச் சந்தேகித்தாலும், இன்னும் திட்டவட்டமாக நிரூபிக்கப்படவில்லை எனச் சீனாவின் நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் பணிப்பாளர் கவோ ஃபூ தெரிவித்துள்ளார்.

70 வீதத்துக்கும் மேலான புதிய தொற்றுநோய்கள் காட்டு விலங்குகளிலிருந்து ஆரம்பிக்கின்றன. 2002-2003 இல் சுமார் 800 பேரின் மரணத்துக்குக் காரணமான சார்ஸ், வெளவால்களிலிருந்து ஆரம்பித்ததெனக் கூறப்பட்டது. இவ் வெளவால்களை உண்ணும் காட்டுப் பூனைகளைச் சீனரும், பல ஆசிய தேசத்து மக்களும் உண்கிறார்கள் என்றும் சார்ஸ் வைரஸ் அதன் மூலமே தொற்றியது எனவும் பின்னர் தெரிய வந்தது.

காட்டு விலங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவை பண்ணையில் வளர்க்கப்பட்டால் சீனாவில் அதற்குக் கட்டுபாடுகள் இல்லை எனவும் இதனால் கள்ளச் சந்தையில் விற்கப்படும் பல காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.


  • சீனாவில் 440 பேருக்குத் தொற்று
  • அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், தென் கொரியா ஆகிய நாடுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
  • உலக சுகாதார நிறுவனம் இன்று அவசரமாகக் கூடுகின்றது
கொறோனா வைரஸ் | சீனாவில் 9 பேர் மரணம் 1
கொறோணா வைரஸ்

சீனாவில் ஆரம்பித்ததெனக் கருதப்படும், மனிதர்களில் சுவாசப்பை தொடர்பான வியாதிகளுக்குக் காரணமான கொறோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாகச் சீன அரசு ஒத்துக்கொண்டுள்ளது. இவ் வைரஸ் நோயினால் இது வரை 9 பேர் வரையில் இறந்துள்ளார்கள் எனவும், 13 மாகாணங்களில், 440 பேர் வரையில் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. இருப்பினும் பல் வேறு காரணங்களுக்காக, உண்மையான தொகையை அரச திணைக்களங்கள் வெளியிடுவதில் தயக்கம் காட்டுகின்றனவென்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வைரஸ் கிருமிகள் பொதுவாக விலங்குகளைத் தாக்குவதே வழக்கமென்றும் அவற்றில் சில விகாரமடைந்து (mutate), புதிய வகையாக மாறி (new strain) மனிதர்களில் தொற்றிக்கொள்கின்றன என்றும் மருத்துவ உலகம் கூறிவருகிறது.

வைரஸ் வியாதிகளுக்குப் பொதுவாக சிகிச்சைகள் இல்லை. போதுமான நீர்ப் பானங்களை அருந்துவதோடு, காய்ச்சல், இருமல்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளோடு போதுமான ஓய்வை எடுத்துக்கொள்வதே வழி.

Related:  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்றம்ப் தரும் யோசனை - பரிசோதனைகளைக் குறைக்கும்படி உத்தரவு!

கொறோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அவசர கூட்டமொன்றை இன்று ஒழுங்கு செய்துள்ளது. உலகம் முழுவதுக்கும் எச்சரிக்கை அறிக்கையை வெளியிடுவது பற்றி அது கலந்தாலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரையில், அமெரிக்கா, யப்பான், தாய்வான், தாய்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இவ் வைரஸ் பரவியிருக்கிறது.

2002 -2003 இல் சார்ஸ் வைரஸ் தொற்றுக் காலத்தில் நடைபெற்றது போல, நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா என சீன அரசாங்கம் ஏற்கெனவே யோசிக்கத் தொடங்கி விட்டது. இதர நாடுகளும் இறங்கு துறைகளில் பயணிகளை அவதானிக்கும் (screening) முயற்சிகளில் இறங்கியுள்ளன. சார்ஸ் தொற்றின்போது சுமார் 800 பேர் சீனாவில் மரணமடைந்திருந்தனர்.

Print Friendly, PDF & Email