Sri Lanka

வெளியாரால் திணிக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் – இலங்கை அரசு


செப்டம்பர் 19, 2020: வெளியாரால் திணிக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் எதையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை, ஜெனிவாவிலுள்ள ஐ.நா.மனித உரிமைகள் சபைக்கு அறிவித்துள்ளது.

“கடந்த நான்கரை ஆண்டுகளாக, வெளியார் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டுத் தோல்வியடைந்த நல்லிணக்க முயற்சிகளை விட்டுவிட்டு, இலங்கையின் நன்மையை முன்வைத்து, அதன் மக்கள் இட்ட ஆணைக்கேற்றவாறு செயற்படுத்தக்கூடிய நல்லிணக்க முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்” என அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45வது அமர்வின்போது, உண்மை, நீதி, நட்டஈடு, சம்பவங்கள் மீளவும் நடைபெற இடம்கொடாமை போன்ற விடயங்களுக்கான விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின்போது மேற்கண்ட அறிக்கையை இலங்கை வழங்கியிருந்தது.

2030 நிலையான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவிருக்கும் தன்விருப்பக் கடப்பாடுகளின் பிரகாரம், அரசாங்கம் இத் தீர்க்கப்படாத கரிசனைகளைக் கவனத்திலெடுத்துச் செயலாற்றும். தனிப்பட்டவர்களினதும், சமூகத்தினதுமான உரிமைகளை முன்னெடுத்தல், நீதியையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்தல், சமூகத்தின் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றை முறையான ஜனநாயக, சட்ட மரபுகளின்படி முன்னெடுத்தல் இத் திட்டத்தில் அடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.



ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரது அறிக்கையில் இலங்கை பற்றிய பல குறைபாடுகள் கூறப்பட்டிருந்தன. உண்மை, நீதி, நட்டஈடு, சம்பவங்கள் மீள இடம்பெறாமைக்கான உறுதிமொழி போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை இந்த அறிக்கையில் உரிய முறையில் காட்டப்படவில்லை. எனவே இந்த அறிக்கை இன்றைய இலங்கையின் உண்மையான நிலவரத்தைக் காட்டவில்லை என அரசு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முடிவில், இலங்கையின் உள்நாட்டு முன்னுரிமைகள், கொள்கைகளின் பிரகாரம், ஐ.நா.மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்துடனும், ஐ.நா.மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும், சர்வதேச சமூகத்துடனும் தொடர்ந்தும் நெருக்கமாக இலங்கை பணியாற்றும் எனத் தெரிவித்துள்ளது.