News & AnalysisSri Lankaமாயமான்

வெளிநாட்டுப் பயணங்கள் : ராஜ(பக்ச)தந்திரத்தின் வெற்றி


உலகின் மனசாட்சியை உலுக்காத முள்ளிவாய்க்கால் படுகொலைகள்

மாயமான்

பதவியேற்றதிலிருந்து மாளிகைக்குள் முடங்கிக் கிடந்த ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு நியூ யோர்க் ஐ.நா. பொதுச்சபை அளித்த வரவேற்பைத் தொடர்ந்து அவர் இப்போது உலக மகா தலைவர்களோடு உரசிப் பேசும் வி.ஐ.பி. ஆகிவிட்டார். ஆதாரங்களோடு நிரூபிக்கக்கூடிய ஒரு போர்க் குற்றவாளி என ஐ.நா. மனித உரிமைகள் சபை முதல் உலக மனித உரிமை நிறுவனங்கள் வரை குற்றஞ்சாட்டியிருந்தும் உலகத் தலைவர்கள் அவரோடு படம் எடுத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள்.

நடந்து முடிந்த COP26 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் வரவேற்புக் கொடுத்தது முதல் இப்போது இளவரசர் சார்ள்ஸ் அவரைச் சந்தித்து அளவளாவுவது வரை இடையில் எத்தனை எத்தனை தலைவர்களோ தெரியாது, ஆனால் வெற்றி அவர் பக்கம் என்பது மட்டும் தெரிகிறது.

தமிழர் தரப்பு எத்தனையோ வழிகளில் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும் எந்த எதிர்ப்பும் உலக தலைவர்களது மனச்சாட்சிகளை உசுப்பியதாகத் தெரியவில்லை. ஒரு state actor என்ற வகையில் இலங்கையின் ஜனாதிபதிக்கு அனுகூலங்கள் நிறையவிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்ளவேண்டுமாயினும், புலம் பெயர்ந்த தமிழர்களைப் பூச்சாண்டிகளாப் பார்த்து அவர்களோடும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டுமென ஐ.நா.வில் ஜனாதிபதியும், பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் கூறியவற்றுக்கு எதிராக இவர்கள் எல்லாம் ஜுஜுப்பிகள் என்று காட்டுமளவுக்கு உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு ‘சிவப்புக் கம்பள’ வரவேற்பு அளித்திருப்பது புலம் பெயர் தமிழர்கள் அணுகுமுறைகளை மாற்றவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

COP26 தமிழர்கள் போராட்டம் (Image Credit: Tamil Guardian)

நியூ யோர்க் வரவின்போது உலகத் தலைவர்கள் அவருக்கு அளித்த வரவேற்பு, அவரோடு மேற்கொண்ட உரையாடல்கள் ஆகியன நிச்சயமாக அவரது உளபலத்தை அதிகரித்திருக்க வேண்டும். ஒரு போர்க்குற்றவாளியெனக் குற்றம் சாட்டப்பட்ட தான் எப்படி உலகத் தலைவர்களால் அவமதிக்கப்படுவேனோ என்ற அச்சத்திலிருந்து நியூ யோர்க் அவரை விடுவித்திருக்கிறது. COP26 இன் போதான உலகத் தலைவர்களின் அதிலும் இளவரசர் சார்ள்ஸின் அரவணைப்பு அவரது நெஞ்சு இன்னும் நிமிர்வதற்கு வழிவகுத்திருக்கிறது. அழைக்கப்பட்ட ஒரு நாட்டின் தலைவரைக் கெளரவிப்பது வழமையே என்ற நடைமுறையையும் தாண்டி அவர் மீது செலுத்தப்பட்ட கவனம் ஆச்சரியம் தந்ததாகினும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

பூகோள அரசியலில் இலங்கையின் ஸ்தானத்தை முன்வைத்து உலகம் தன் அணுகுமுறைகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டு வருவதைத் தமிழர்கள் நாமும் அவதானித்து எமது அணுகுமுறைகளையும் அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவேண்டுமென்று நான் நினைக்கிறேன். எழுபதுகளில் இலங்கையில் இந்தியா தலையிடுவதற்கான காரணமாக இலங்கைத் தமிழர்கள் இருந்திருக்கலாம். இன்று அப்படி இல்லை. சீனாவின் பொறியில் விழுந்துபோன இலங்கையை மீட்டெடுத்து தமது பக்கம் கொண்டுவருவதே இந்தியாவினதும், அதன் நட்பு நாடுகளான மேற்கு நாடுகளினதும் நிலை. அந்த வகையில் இலங்கை இப்போது மேற்கு நாடுகளின் அன்புக் குழந்தை. உலக வங்கி அள்ளிக் கொடுப்பதும், ஜேர்மனி தனது கடனை அன்பளிப்பாக மாற்றுவதும், இந்தியா பணம், மருந்து, உரம் என்று தானங்களை அள்ளி வழங்குவதும் இக் காரணங்களுக்காகத் தான். ஜனாதிபதி தேர்தலின்போதும் பிறகும் அடிக்கடி அறிக்கைகளை விட்ட அமெரிக்க தூதுவர் அலெனா ரெப்ளிட்ஸ் பின்னர் அடங்கிப் போனதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. அக்கா கமலா ஹரிஸ், உறவினரைத் திரும்பியும் பார்ப்பதாகவில்லை.



இந்த நிலையில் தமிழர்கள் இன்னும் புராதன ஆர்ப்பாட்டங்களுடனும், பதாகைகளுடனும் அவ்வப்போது எதிர்ப்பைக் காட்டுவது தமிழர்களுக்குப் பலனளிக்காது. மாறாக இவ்வெதிர்ப்புகள் இலங்கையில் ஆட்சியாளர் மீதான சிங்கள மக்களின் வெறுப்பைத் திசை திருப்பவே உதவும். இதை உணர்ந்துகொள்ள ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டுமென்பதில்லை. அந்த விடயத்தில் கோதாபய ராஜபக்ச தன் வரவின்மூலம் ஒரே கல்லில் இரண்டு புறாக்களை அடித்துக்கொண்டு போகிறார்.

COP26 மாநாடு முற்றிலும் ஒரு போலி, கனடிய பிரதமர் உட்பட ஏறத்தாள அனைத்து உலகத் தலைவர்களும் தமது முகமூடிகளுடனேயே உலாவுகிறார்கள். சூழல் பாதுகாப்பு விடயங்களில் இலங்கை ஜனாதிபதியின் கைகளும் மிக மோசமான அழுக்குகளைக் கொண்டவைதான். நீர்ப்பாசன அமைச்சரான அவரது அண்ணன் சாமல் ராஜபக்ச சிங்கராஜா வனத்தில் காடுகளை அழித்து குளங்களை அமைப்பதற்கும், குளங்களைத் தூர்வாருவதற்கும் சீன நிறுவனங்களுக்கு அனுமதியைக் கொடுத்தவர். இந்த அழகில் சூழலைப் பாதுகாக்கவென ஜனாதிபதி தாரை தப்பட்டைகளுடன் ஜனாதிபதி கிளாஸ்கோவில் நாடகமாடுகிறார். அதை இதர கோமாளிகள் கைதட்டி ரசிக்கின்றனர்.

இம் மாநாட்டின்போது, ஜனாதிபதி ராஜபக்ச, பாஹ்ரெய்ன் நாட்டின் இளவரசர் ஹமாட் அல் கலீஃபா, நேபாளிய பிரதமர் சேர் பகதூர் டூபா, யூக்கிரெய்ன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓகொஞோ ஐவீலா மற்றும் பல மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். கூட்டிக் கொடுத்த COP26 இற்கு அவர் நன்றியுடையவராக இருக்க வேண்டும்.

ஒரு போர்க்குற்றவளியான ஜனாதிபதிக்கு தமிழர்களது செல்வாக்கு அதிகமெனக் கருதிய ஒரு நாட்டில் கிடைக்கும் வரவேற்பு தமிழர்களுக்கு கிடைத்த அதியுச்ச அவமானம். இனியாவது புலம் பெயர் தமிழ்த் தலைமைகள் புதிய அணுகுமுறைகளைப் பாவிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.