Science & TechnologySri Lanka

வெளிநாட்டுத் தமிழ் இளையோருக்கு Yarl IT Hub வழங்கும் கோடைகால பயிற்சி வகுப்புகள்

இலங்கயின் வடமாகாணத்தில் இயங்கும் இலாபநோக்கற்ற அமைப்பான Yarl IT Hub, பிறதேசங்களில் வாழும் தமிழ் இளையோருக்கென விசேடமாகத் திட்டமிடப்பட்ட பயிற்சி வகுப்புக்களை எதிர்வரும் கோடை காலத்தில் நிகழ்த்தவுள்ளது. சமூகம் சார்ந்த தொழில் முன்னெடுப்புகள், புதுமைகளை அறிமுகம் செய்தல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செறிவான கற்கையை இப்பயிற்சித் திட்டம் வழங்கவிருக்கிறது. இதன் மூலம் இளையோருக்கு அவர்களது மண், கலாச்சாரம் ஆகியவற்றுடனான தொடர்பை ஏற்படுத்த முடியும் என அமைப்பாளர் எதிர்பார்க்கின்றனர்.

வட மாகாணத்தில் சமூகம் சார்ந்த முநைப்புகளில் ஈடுபட விரும்பும் 15-22 வயதுடைய இளையோர் இதில் பங்குபற்றலாம். தெரிவு செய்யப்படும் 18 வயதுக்குக் கீழானவர்கள் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதிப் பத்திரமொன்றை விண்ணப்பத்துடன் இணைத்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படுபவர்கள் சமூக மட்டத்தில் ஊடாட்டங்களை மேற்கொள்வதோடு அடி-மட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடிய சவால்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் ஆராய்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படும். அத்தோடு அவர்கள் மென்பொருள் உருவாக்கத்திலோ அல்லது தமிழ் மொழிக் கற்கையிலோ தமது பயிற்சிக்காலத்தில் ஈடுபட முடியும்.

மே முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும் இப்பயிற்சிக்களத்தில் பங்குபற்றுபவர்கள் தமக்கு ஏற்றவாறு 4 வாரங்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு ஊதியம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. பயிற்சி முடிவில் பெறுபேற்றுக்கான தராதரப் பத்திர்மொன்று வழங்கப்படும்.

பங்குபற்றுபவர்கள் தமது பயணச் செலவுகள் மற்றும் தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கான செலவுகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

பயிற்சிக் களம் யாழ்ப்பாணத்தில் இருக்கும். காலை 9 ம்தல் மாலை 5 வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பின்போதான மதிய உணவை Yarl IT Hub வழங்கும். இதைவிட வார விடுமுறைகளில் தன்னார்வப் பணிகளை மேற்கொள்ளலாம்.