Sri Lanka

வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கை அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறார்கள் – ரஷ்ய தூதுவர்


கோவிட்-19 ஆதரவு என்ற பெயரில் வெளிநாடுகளிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நிதியை அனுப்பலாம் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மற்றேறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கை உள்ளகப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகராவைச் சந்தித்தபோது ரஷ்ய தூதுவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் நிவாரணம் வழங்கல் என்ற பெயரில் போதை வஸ்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலமாக வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இவ்வுதவிகளை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி ஐலண்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், போர் முடிந்த கையோடு அப்போதைய அரசு உளவுப் பிரிவுகளை 3 இலைருந்து 7 ஆக உயர்த்தியிருந்ததாகவும் அப்போது மதக் கல்வி போதனை என்ற பெயரில் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வந்த 160 இஸ்லாமிய மார்க்கப்பள்ளித் தலைவர்களை நாடு கடத்தியிருந்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

துர்ப்பாக்கியமாக, நல்லாட்சி அரசாங்கம் இந்த உளவுப் பிரிவுகளைக் கலைத்துவிட்டதெனவும், தற்போதய அரசு அதை நிவர்த்தி செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் எந்த நிலையிலுள்ளன என ரஷ்ய தூதுவர் விசாரித்ததாகவும் அதற்குப் பதிலளித்த அமைச்சர், 267 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்து அறிக்கைகள் சட்டம அதிபரிடம் கையளிக்கப்படுள்ளதெனவும் விரைவில் அது தொடர்பான நடவடிக்கைகள் தெரியவருமெனக் கூறியதாகவும் தெரியவருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ரஷ்யா ஒரு அங்கத்தவ நாடாக நியமிக்கப்பட்மை தொடர்பாக அமைச்சர் தூதுவருக்கும், ஜனாதிபதி புட்டினுக்கும் நன்றி தெரிவித்தார்.

அத்தோடு, இலங்கை தொடர்பாக முந்திய ஐ.நா.செயலாளர் நாயகம் ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவித்தது மூலமாக ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறியிருந்தார் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். போரின் இறுதி நாட்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அரசு வேண்டுமென்றே தடுத்தது என தீர்மானம் 30/1 இல் குறிப்பிடப்பட்டது தவறு என அமைச்சர் சுட்டிக்காடினார் என அச் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.