EconomySri Lanka

“வெற்றிபெற வேண்டுமா? அடுத்தவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” – ஜாக் மா


ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றபின் இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய இக் கட்டுரை அவரின் அனுமதி பெற்று ‘மறுமொழி’ இணைய சஞ்சிகையில் தமிழில் பிரசுரமாகிறது. மொழி மாற்றத்தில், மொழி பிசகினாலும் கருத்துப் பிசகு நேராமல் இருக்கவேண்டுமென முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. சுகந்தனைப் போலவே ஜெகனும் தன் வசதியான, பழக்கப்பட்ட உலகத்தை உதறித் தள்ளிவிட்டு எங்கள் குருதி தோய்ந்த மண்ணை வியர்வையால் கழுவ முன்வந்திருக்கிறார்கள். நீண்ட கட்டுரைதான். முழுமையாக வாசிப்பதுகூட ஒரு வகையில் இவர்கள் போன்றவர்களின் ஆத்ம பலத்துக்கு மேலும் உரம் சேர்க்கும். உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது – ஆசிரியர்

உலகின் மொத்த வியாபாரத்துக்கான தலைசிறந்த கணனிச் சந்தையான அலிபாபாவை வடிமைத்த ஜாக் மா, முளைவிடும் தொழில் நிபுணர்களுக்குச் சொல்லும் ஒரு புத்திமதி ” நீங்கள் வெற்றிபெற விரும்பினால், மற்றயோர் விட்ட தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களின் வெற்றிக் கதைகளிலிருந்தல்ல” என்று.

நீங்கள் வெற்றிபெற விரும்பினால் அடுத்தவர் விட்ட தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்களது வெற்றிக் கதைகளிலிருந்தல்ல

ஜாக் மா, அலிபாபா ஸ்தாபகர்

பல வெற்றிகரமான தொழில் முனைவர்கள், சிரமங்களுக்கு மத்தியில் வடக்கே யாழ்ப்பானத்துக்கு வந்து, தமது வெற்றியின் இரகசியங்களை எங்களுக்குக் கதை கதையாகச் சொல்வார்கள். எல்லா நல்ல கதைகளைப் போலவே அவை பயங்கரமானவையாக ஆரம்பித்து மகிழ்ச்சியானவையாக முடியும். ஒரு ஆணோ, பெண்ணோ வியாபார முயற்சியொன்றை ஆரம்பிப்பார்; “அது சரிப்பட்டு வராது, விட்டுவிடு” என்று எல்லோரும் சொல்வார்கள்; எடுத்ததெல்லாம் பிழைத்துக்கொண்டே போகும்; விடாப்பிடியாகத் தொடர்ந்தால், கொஞ்சம் அதிர்ஷ்டமும், திறமையும் சேர இறுதியில் அது பலனைக் கொடுக்கும். கேட்டுக்கொண்டிருக்கும் எங்கள் எல்லோருக்கும் தெரியும் கதையின் இறுதியில் அவர் வெற்றிபெறப் போகிறார் என்று. காரணம் கதை சொல்லி ஒரு வெற்றிகரமான தொழில் முனைவர்!

கோவிட்-19 இற்கு முதல், இப்படியான சிறப்புப் பேச்சாளர் பலர் பல மணித்தியாலங்கள் பயணம் செய்து யாழ்ப்பாணம் வருவார்கள். இப்போது தொழில் முனைவர்கள், இணையத்தில் zoom வழியாக கண்டங்களுக்கு அப்பாலுள்ள தமது சொகுசு வீடுகளிலிருந்தே தமது ‘வெற்றிக் கதைகளை’ அளந்து விடுகிறார்கள்.

Jack Ma
Jack Ma, founder of Alibaba.com


“அடுத்தவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று ஜாக் மா சொல்லும்போது, தவறுகள் விடப்பட்டுப் பல மாதங்கள் / வருடங்கள் கழிந்த பின்னர் மெருகூட்டி நகைச்சுவையுடன் ஒருவர் சொல்லக் கேட்கும் விடயமல்ல. தவறுகள் நடைபெறும்போது பார்த்த ஒருவராக நீங்கள் இருந்திருக்க வேண்டும். எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி எதிர்பார்த்தபடி நிறைவேறாமையைக் கண்டு ஒரு குழுவின் தலைவர் (team leader) அங்கலாய்ப்பதை நேரில் பார்த்த அக் குழுவில் ஒருவராக நீங்கள் இருந்திருக்க வேண்டும். தனது தவறையும், மற்றவர்களின் தவறையும் சேர்த்து அத் தலைவர் செப்பனிடுவதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஒரு குழுத் தலைவர் எப்படித் தனது பணியாளர்கள், தனது மூல வழங்குனர்கள் (suppliers), தனது முதலாளிகள், தனது வாடிக்கையாளர்கள் எனச் சகலரையும் திருப்திப்படுத்துகிறார் என்பதை நீங்கள் பார்த்துப் பழக வேண்டும் என்பதையே ஜாக் மா சொல்கிறார்.

“நீங்கள் 20-30 வயதுகளில் இருக்கும்போது ஒரு நல்ல முதலாளியின் கீழோ அல்லது அல்ல நிறுவனத்திலோ இணைந்து செய்பவற்றைத் திருத்தமாகச் செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்” என்கிறார் மா. தவறுகள் ஏற்படும்போது அவற்றைப் பார்த்தவராக நீங்கள் இருக்க வேண்டும். நல்ல முதலாளி என்னும்போது, ஒரு தவறு நேரும் சந்தர்ப்பத்தில் அதை எப்படி அவர் திருத்திக்கொண்டார் எனபதையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இதுவே மா சொல்லும் செய்வன திருந்தச் செய் என்னும் பாடம்.

துரிதமாக முன்னேறும் ஒரு நிறுவனத்தில் இணைந்து அது எப்படி இழைக்கப்பட்ட தவறுகளைச் செப்பனிட்டு மேலும் ஸ்திரமாக வளர்ந்து வெற்றிகளைத் தேடிக்கொண்டது என்பவற்றை அவதானித்துப் பழகிக்கொள்ள வேண்டும். கெட்ட செய்திகளை எதிர்கொள்வது, சேதங்களைக் கட்டுப்படுத்துவது, விடயங்களை முன்னிலைப் படுத்துவது, கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது, மாட்டிக்கொண்ட குழிகளிலிருந்து தப்பிப்பது, ஆபத்திலிருந்து விலகிக்கொள்வது, வாடிக்கையாளர் எதைப் பொறுத்துக்கொள்வார், எதை மன்னிக்கமாட்டார் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது, இலகுவில் விரக்தியை எட்டாமால் இருக்கப் பழகுவது எனப் பல விடயங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

“”நல்ல நிறுவனம்” என்பது எல்லாவற்றையும் சரியாகவே செய்யும் நிறுவனம் என்பதல்ல பொருள். ஒரு நல்ல நிறுவனம், போதுமான நிதிவளங்களையுடையதாகவும், தவறுகளைத் தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். அதன் வாடிக்கையாளரும், வழங்குனரும், பணியாளர்களும் இதர பயன் பெறுநர்களும் அந் நிறுவனம் எப்படியான தவறுகளை இழைத்திருந்தாலும் அதைக் கைவிட்டு ஓடிவிடமாட்டார்கள். ஒரு நல்ல நிறுவனம் எப்படியாவது தனது தறுகளைத் திருத்தி மீண்டெழும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு என்றும் இருக்கும். “கொல்ல முடியாத ஒன்றுதான் உங்களைப் பலசாலியுமாக்கும்” என்பதைப் போல தவறுகளிலிருந்து மீண்டெழவல்ல நல்ல நிறுவனம் பலமுள்ளதாக மாறும்.யாழ்ப்பானம் ஒரு செழிக்கும், வளரும், பூரிக்கும் பொருளாதார மையமாக வரவேண்டுமானால் இங்கு அதிக நிறுவனங்கள் வரவேண்டும். வளங்களையும், இயங்குதிறனையும் கொண்ட உத்வேகத்தையும் கொண்ட, எல்லைகளை நகர்த்த வல்ல, தவறுகளை இழைக்கவல்ல, வெற்றிகளால் வெற்றிகொள்ளவல்ல நல்ல நிறுவனங்கள் இங்கு வரவேண்டும். இங்கு தற்போது பணி நெறியைக் (work ethic) கைக்கொள்வோர் அரிதாகிவிட்டார்கள். தற்போது இங்கு இயங்கும் நிறுவனங்கள் துரிதமாக வளரும் என்ற நம்பிக்கை இல்லை. நல்ல பணிக்கலாச்சாரங்களைப் பழக்கவல்ல புதிய நிறுவனங்கள் பெருமளவு தேவை. அவை வெளியிலிருந்து கொண்டுவரப்பட வேண்டும்.

இதை எப்படிச் சாதிக்கலாம்?

Board of Investment graphic

1992 ம் ஆண்டு, அப்போதைய அரசு “200 ஆடைத் தொழிற்சாலை” என்றொரு திட்டத்தை அறிவித்தது. இதன் பிரகாரம் பிரதான ஆடைதயாரிப்பு நிறுவனங்கள் கொழும்புக்கும், கம்பஹாவுக்கும் வெளியே உற்பத்தி நிலையங்களை உருவாக்கவேண்டும் என பிரேமதாச அரசு உத்தரவிட்டது. பணியாத நிறுவனங்கள் பயமுறுத்தப்பட்டன. பெரும் பணச் செலவில் அரசு அவற்றின் கட்டிட நிர்மானக்கலைச் செய்து கொடுத்தது. இம் முயற்சியே பின்னாளில் இலங்கைக்கு மிகப்பெரிய அந்நியச் செலாவணியை ஈட்டி வருகிறது.

இந் நிறுவனங்கள் வடமாகாணத்தில் தமது உற்பத்தி தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது பலனளிக்குமென நாம் கருதுகிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், வவுனியாவிலுள்ள நவீன தொழிற்சாலையொன்று, ஆயிரக்கணக்கான எங்கள் பெண்கள் கைகளினால் தைத்த விலை கூடிய ஆடைகளைப் பாரிசுக்கும் மிலானுக்கும் ஏற்றுமதி செய்வதைப் பார்த்தேன். ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தால் 2018 இல் இலங்கை US$ 5 பில்லியன்களை ஈட்டியிருக்கிறது. இத் துறை மூலம், நேரடியாகவும், எதிர்மறையாகவும், பல இலட்சம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது.

சமீப காலங்களாக, அரசாங்கங்கள் பல பணியாளர்களையும், பொருளாதாரத்தையும் மேற்கு மாகாணத்திலுள்ள பெரு நகரங்களை நோக்கி நகர்த்தி வருகின்றன. இதனால், ஏற்கெனவே சன அடர்த்தி அதிகமான இம் மாகாணத்துக்கு, பிற மாகாணங்களிலிருந்து மக்கள் வேலைதேடிப் படையெடுத்துவருகிறார்கள். தற்போதைய கோவிட்-19 நோய்த் தொற்றுகளின் மத்தியில், இப்படியான அதிக சன அடர்த்தியுள்ள நகரமயமாக்கல் விபரீதமான விளைவுகளையே தரும்.இலங்கை அரசு, 1992 இல் போல “200 ஆடைத் தயாரிப்பு” முன்னெடுப்பை தொழில்முறை சேவைகள் (professional services) உள்ளிட்ட, இதர துறைகளிலும், மீளவும் மேற்கொள்ள வேண்டும். பிரேமதாச அரசைப் போல நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலையும், சன்மானங்களையும் வழங்கி மேற்கு மாகாணத்திலிருந்து வடக்கிற்கும் இதர மாகாணங்களுக்கும் உற்பத்தி நிலையங்களை நகர்த்த வேண்டும். 30 வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம் நினைத்திருந்தால் அரச முதலீட்டில் உற்பத்தி நிலையங்களை வெளி மாகாணங்களில் நிறுவியிருக்கலாம். ஆனால் அதை விட்டு தனியார் நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தி இடம் பெயர்த்திருந்தது. இது இப்போது நல்ல விடயமாகப் பார்க்கப்படுகிறது.

செயற்பாடு இல்லை, பேச்சு மட்டும்தான்

சமீப காலங்களில், பேச்சு மட்டும் அதிகரிக்கிறதே தவிர செயற்பாடுகள் குறைவாகவே இருக்கிறது. 2017 இல் அரசாங்கம் 1 பில்லியன் ரூபாய்கள் செலவில் வடக்கில் ஒரு உயர் மாடிக் கட்டிடத்தை நிறுவப்போவதாக அறிவித்தது. பல் பாவனை அலுவலகங்கள், கடைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை உள்ளடக்குமெனக் கூறப்பட்ட அந்த ‘மாளிகையை’ நான் இதுவரை எங்கும் காணவில்லை. அந்த வருட, வரவு செலவு விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் இது அறிவிக்கப்பட்டிருந்தது.

மிக அண்மையில், யாழ்ப்பாணத்தில் ஒரு IT/BPO மையத்தை ஆரம்பித்து கொழும்பிலும், வெளிநாடுகளிலும் இருந்து நெடுங்கால நிறுவனங்களைக் கொண்டுவருவதற்கு இந்திய நிதி உதவியும் அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது. 40,000 சதுர அடிகளில், 400 இற்கும் மேற்பட்ட பணித்தளங்களுடன் (work stations) அமையவிருக்கும் இந் நிலையத்தின் நிர்மாணத்திற்கு இந்திய நிதி தயாராகவிருந்தது. சென்ற ஜூன் மாதத்தில் அத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பதிலாக, இந்திய உதவியின் அரைவாசிப் பணத்தில், 5400 சதுர அடிகளில் 20 கணனிகளும், இரண்டு 3D பிறிண்டர்களுடனுமான அலுவலகம் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. முதலாவது திட்டத்தின்படி வெளியிலிருந்து நிறுவனங்கள் அழைத்துவரப்பட்டிருக்கலாம், ஆனால் இரண்டாவது திட்டத்தின்படி அது இயலாத ஒன்று.

வடமாகாணத்தில் வேலையின்மை

வட மாகாணத்தில், அதிக தராதரமுள்ளவர்களிடம் அதிக வேலையின்மை காணப்படுகிறது. புள்ளி விபரச் சேர்க்கைமுறையில், தேடிக்கொண்டிருப்பவர்களே “வேலையற்றோர்” எனப்படுகிறார்கள். வேலை செய்ய விருப்பமில்லாதவர்களை இப் பட்டியலில் அடக்குவதில்லை.

எனவே, போதிய அல்லது மேலதிக தராதரங்கள் இருந்தும் திருப்தி தரும் வேலைகளுக்கான சந்தர்ப்பங்கள் வடக்கில் மிகவும் அரிதாகவே இருக்கிறது.

லண்டன், நியூ யோர்க், கொழும்பு ஆகிய நகரங்களில் இளைய தலைமுறையினர் பணிபுரியவோ அல்லது அவற்றோடு அருகில் இருந்து அவதானிக்கவோ வல்ல பல துரித கதியில் இயங்கும் நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்களில் நிகழும் தவறுகள், அவற்றைச் செப்பனிட அவை எடுத்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களை நெருக்கமாக இருந்து அவதனிக்கும் இவர்கள் தாம் சுயமாகத் தமது துரித கதி நிறுவனங்களை உருவாக்க இயலும். யாழ்ப்பாணத்திலோ அல்லது இலங்கையின் வேறெந்த பகுதிகளிலோ இப்படியான நிறுவனங்கள் குறைவு. யாழ்ப்பாணத்தில் சில நிறுவனங்கள் தமது இத மண்டலங்களுக்குள் (comfort zones) இருந்து முடிந்தவரை தமது கதியில் செயற்படுகின்றன. மிகச் சொற்பமானவையே இலட்சிய வேட்கையோடு துரித கதியில் பயணிக்கின்றன.உத்வேகத்தை அதிகரித்தல்

உத்வேகம் (momentum) என்பது உள்ளார்ந்த திறமையை இயங்க வைக்கும் செய்ற்பாடு. சுவிசேஷ போதகர்கள் போல் அரை நாள் சந்திப்பின்போது அலையொலி எழுப்பி உசுப்பிவிடும் காரியமல்ல. ஜாக் மா சொல்வது போல் மற்றவர்களின் ‘வெற்றிக் கதைகளைக்’ கேட்டு நீங்கள் எதையும் கற்றுக்கொண்டுவிட முடியாது. இந்த முதலீட்டுப் போதகர்கள் அவரவர்களது இடத்தில் பிரயோசனப்படலாம். உடற்பயிற்சி ஆசிரியர்கள் போன்று குறிக்கப்பட்ட தேவைகளை மனதில் வைத்து அவற்றில் மட்டும் ஒருவரை உச்சத்துக்குக் கொண்டுபோவதில் வல்லவர்கள். யாழ்ப்பாணம் ஒரு மாரடைப்பு வந்து புனர்வாழ்வு பெற்றுவரும் ஒருவரைப் போன்றது. அதற்கு இறுக்கமான அன்பும், கரம் பற்றுதலுமே உடனடித் தேவைகள்.

உத்வேகத்தை ஊட்டி உசுப்பேத்துதல் என்பது அனுபவஸ்தர்கள் யாழ்ப்பாணத்துக்கு சில மாதங்களோ அல்லது நிரந்தரமாகவோ தங்கியிருந்து செய்யவேண்டிய ஒரு காரியம். சிலர் இதைச் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்த சிலர் கலிபோர்ணியா, நியூ யோர்க், ரொறோண்டோ, மெல்போர்ண், சிங்கப்பூர், லண்டன் ஆகிய நகரங்களிலிருந்து வந்து இப்பணிகளைச் செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர் போரினால் இடம்பெயர்க்கப்பட்டுத் தஞ்சமடைந்த நாடுகளில் நல்ல நிறுவனங்களில், நல்ல முதலாளிகளின் கீழ்ப் பணிபுரிந்து, தவறுகள் என்னும் அனுபவங்களை உரமாக்கி வளர்ந்தவர்கள். சிலர் கொழும்பு, சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் தங்கள் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டவர்கள். இப்படியானவர்களின் வருகை போதாதுள்ளது. மேலும் மேலும் அனுபவஸ்தர்கள் யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும்.

ஜாக் மா சொல்லும் ‘நல்ல நிறுவனங்கள்’, ‘நல்ல முதலாளிகள்’ யாழ்ப்பாணத்துக்கு வருவது இங்கு பல நல்ல பதவிகளை உருவாக்கும். முக்கியமாக வடக்கில் இருப்பவர்கள் தவறுகளின் மூலம் கற்றுக்கொள்ளும் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க அது துணை புரியும். சரியான அணுகுமுறை, பலமான பணி நெறி (work ethic) போன்ற பணிக் கலாச்சாரம் வளர்த்தெடுக்கும்போது அது ஊக்கத்தையும்,உத்வேகத்தையும் கிளப்பிவிடும். இத் தொடரியக்கம், வடக்கிந் எதிர்காலப் பரம்பரைகள் தமது சுய தொழில்களைப் பலமான அத்திவாரத்தில் கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தையும் முன்னேற்றத் துணை செய்யும்.