ArticlesNewsWorld

வெனிசுவேலா | கனடாவின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது!

வெனிசுவேலா விடயத்தில் மேற்குலகம் தார்மீக நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அதில் பெரிய ஏமாற்றமுமில்லை. கனடாவின் நிலைப்பாட்டைத் தவிர.

வெனிசுவேல மக்கள் பெருந்துன்பங்கள அனுபவிக்கிறார்கள். பொருளாதாரம் சீரழிந்து கிடக்கிறது. 3 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகளும் அங்குள்ள ஊடகங்களும் இந்நிலைமைக்குப்  பொறுப்பாளியாக அதிபர் நிக்கோலாஸ் மடுரோவையே சுட்டுகின்றன.

வெனிசுவேலாவின் பிரச்சினை, உலகின் அதிமுக்கிய வளங்களைத் தன்னகத்தே வைத்திருப்பதுதான். உலகின் அதிகமான பெற்றோலிய வளம் இங்குதானிருக்கிறது. தற்போது நாட்டின் 70% மான பொருளாதாரம் முதலாளிகளிடம் தானிருக்கிறது. 95% எண்ணை ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் பொரூளாதாரம்.

நாட்டின் இன்றய நிலைக்கு புறத்திலிருந்து வரும் அழுத்தங்கள் முக்கிய காரணமாகவிருந்தாலும் உள்ளகக் காரணங்களையும் புறந்தள்ளிவிட முடியாது.

1998ம் ஆண்டளவில் பொலிவேரிய சமூகப் புரட்சி ஆரம்பமானது.  சாதாரண மக்கள் குழுக்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தின் இயந்திரங்களாகவிருந்தன. நகர்ப்புறங்களில் 200 முதல் 400 குடும்பங்கள், கிராமப்புறத்தில் சுமார் 20 குடும்பங்கள் என்று ஒன்று சேர்த்து மக்கள் குழுக்கள் உருவாக்கப்பட்டன. 2009 வாக்கில் இப்படியான 30,000 குழுக்கள் இருந்தன. இக்குழுக்களே தேவைகளைத் தீர்மானிப்பன, திட்டங்களைத் தீட்டின. அரச இயந்திரங்கள் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தின. பண்டங்களை உற்பத்தி செய்வதும், வினியோகிப்பதும் இப்படியான மக்கள் குழுக்களின் பங்களிப்புடன் தான். இதில் பெண்களின் பங்களிப்பு, அதிலும் வயதான பெண்களின் பங்களிப்பு ஆண்களை விட அதிகமாகவிருந்தது ( கனடாவின் பெண்ணுரிமை நாயகன் இதயெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்). சாவேசின் ஆட்சியில் உலகின் எண்ணை விலை அதிகமாகவிருந்தது. இந்த சமூகப் புரட்சியும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தது. வெளிநாட்டு முதலாளித்துவ வியாபாரிகளை அவர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்.

வெனிசுவேலாவில் எண்ணை வளங்களைவிடவும் வேறு கனிம, தாவர வளங்கள் (12% அமசோன் காடுகள் இங்கு தானுள்ளன). அமெரிக்காவின் பெரு வணிக நிறுவனங்கள் இவ்வளங்களைப் பணமாக்க படு முயற்சி செய்தன. சூழலியல் மற்றும் சுதேசிகளின் நன்மை கருதி சாவேஸ் அவற்றைத் தடுத்து விட்டார்.

சாவேசின் ஆட்சி அமெரிக்க ஆட்சியாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவிருந்தது. அவரின் ஆட்சியைக் கலைக்க மூன்று தடவைகள் முயற்சித்தார்கள் (2002, 2003, 2004). அப்படியிருந்தும் அவர் 5 தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். ஒவ்வொரு தடவையும் 55 வீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்றிருந்தார். 17 தேர்தல்கள் மற்றும் கருத்துக் கணிப்புகளில் 16 தடவைகள் அவர் வெற்றியீட்டினார். வெனிசுவேலாவின் தேர்தல்கள் நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுபவை. உலகிலேயே மிகச் சிறந்த தேர்தல் முறை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புகழாரம் சூட்டியிருக்கிறார். இருப்பினும் அவரைச் சர்வாதிகாரி எனவே அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் அழைத்தார்கள்.

வெனிசுவேலா தற்போது பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. அதற்கு தற்போதய அதிபர் மடூரோவும் ஒருவகையில் காரணம் தான். மடூரோ சாவேசின் நண்பர். சாவேசின் சோசலிச ஆட்சி முறையைப் பின்பற்ற முயற்சி செய்தார். ஆனால் சாவேசின் மரணத்திற்குப் பிறகு அமெரிக்க ஆட்சியாளரின் அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டன. ஒபாமா ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத் தடைகளை முடுக்கி விட்டது மட்டுமல்லாது வெனிசுவேலா அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளது என்று வேறு பிரகடனம் செய்திருந்தார். ட்ரம்ப் அதை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் சென்று அந்நாட்டின் மீது படையெடுக்கப் போவதாக அச்சுறுத்துகிறார். லத்தின் அமெரிக்க நாடுகளின் மீது அமெரிக்கா 96 தடவைகள் படையெடுத்திருக்கிறது.

பொருளாதாரத் தடை என்பது மிக மோசமான விடயம். அதை நடைமுறைப் படுத்துவதில் நிதி நிறுவனங்களே அரசுகளால் பாவிக்கப்படுகின்றன. தடை விதிக்கப்பட்ட நாடுகள்  (அவை பெரும்பாலும் ஏழை நாடுகளாகவோ அல்லது அவற்றின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்குப் பிடிக்காதவர்களாகவோ இருக்கலாம்) தமது பண்டங்களை உலகச் சந்தையில் விற்று வருவாயைத் தேடுவதானால் அது அமெரிக்க நாணயத்திலேயே இருக்க வேண்டும். உலகில் எந்த வங்கியாவது அல்லது வணிக நிறுவனங்களாவது இந் நாடுகளின் வர்த்தகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருந்தால் அவை அமெரிக்காவினால் தண்டிக்கப்படுவது வழக்கம் (30 வருடம் சிறை). தற்போது பெரும் பிரச்சினையைக் கிளப்பியுள்ள சீன நிறுவனமானஹுவாவேமாற்று வழிகளில் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அதன் முதன்மை நிர்வாகியைக் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தும்படி அமெரிக்கா வற்புறுத்துகிறது. அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்திருக்கும் நாடுகளில் ஈரானுமொன்று. இவ் வர்த்தக நடவடிக்கையைக் காட்டிக் கொடுத்தது அமெரிக்க நிதி நிறுவனமொன்று

மடூரோவின் ஆட்சியில் பிழைகள் இல்லாமலில்லை. ஆட்சி மாற்றமொன்றை மக்களும் விரும்புகிறார்கள். ஆனால் அது அமெரிக்காவோ அல்லது அதன் நேச நாடுகளோ சொல்லும் காரணங்களுக்காக அல்ல. பொருளாதாரத் தடை நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அமெரிக்காவுக்குப் பயந்து இதர நாடுகள் கடன் கொடுப்பதை நிறுத்தியுள்ளன. ரஸ்யாவும் சீனாவுமே கடன் கொடுக்க விரும்புவார்கள். ரஸ்யா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மடூரோவின் ஆட்சியைக் கலைக்க அமெரிக்கா இது வரையில் 100 மில்லியன் டாலர்களைச் செலவு செய்திருக்கிறது. பொலிவார் நாணயத்தின் பெறுமதி 97% த்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

சாவேசைப் போல மடூரோவால் அதிகரித்த அழுத்தங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியுமோ தெரியாது. ஏற்கெனவே சோசலிச அணுகுமுறைகளைத் தளர்த்தி நவதாராளவாத அணுகுமுறைகளுக்கு இடம் கொடுத்திருக்கிறார். அதன் கரங்கள் தான் இன்றய குழப்ப நிலைக்கு எண்ணை ஊற்றிக்கொண்டிருக்கின்றன. 70 வீதமான உற்பத்தி அவர்களிடம் தானிருக்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் பண்டசாலைகளில் முடக்கப்பட்டு சந்தையில் பண்டங்களின் போதாமை செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். மக்களின் பட்டினி அளவு கடந்திருக்கிறது. அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் எது தேவையோ அது நிறைவேற்றப்படுகிறது.

அமெரிக்காவும் அதன் சகாக்களும் வெனிசுவேல மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஊடகங்கள் அவற்றிற்குச் சார்பாக ஊதுகின்றன. பொருளாதாரத் தடை பற்றி ஊடகங்கள் எதுவும் பேசுவதில்லை. ஈராக் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையின்போது 5 இலட்சம் குழந்தைகள் மரணமாகின. வெனிசுவேலாவின் மரணசாலைகளின் கணக்கெடுப்பு இன்னமும் நடைபெறவில்லை.

மடூரோ மீதுள்ள குற்றச்சாட்டு, அவர் தேர்தலை நாணயமாக நடத்தவில்லை என்பது. தேர்தலின் போது ஐ.நா. பார்வையாளர்களை அனுப்புவதாக இருந்தது. மடூரோவின் எதிர்க் கட்சிகள் தான் ஐ.நா. வின் வரவை எதிர்த்தார்கள். .நா. மட்டுமல்ல வேறு பல அமைப்புக்களும் அங்கு போக மறுத்துவிட்டன. வெனிசுவேலாவுக்கு நட்பான நாடுகளும் கனடிய தொழிற் சங்கங்கள் சிலவும், சில தேவாலயம் சார்ந்த மதத் தலைவர்களுமே தேர்தல்களைப் பார்வையிட்டார்கள். தேர்தல்கள் முறையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றன என்று அவர்கள் உத்தரவாதமளித்தார்கள்.  ஆனால் கனடாவே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மடூரோ பதவி இறங்கவேண்டுமென்றுநானும் சண்டியன் தான்என்ற எடுப்பில் கனடாவும் முந்திக் கொண்டு விட்டது. ஈராக் போரின் போது பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையர் எப்படி நடந்து கொண்டாரோ அப்படித்தான் கனடிய பிரதமரும் வெனிசுவேலா விடயத்தில் நடந்து கொள்கிறார்.

ஜனநாயகம் கொடுங்கோலர்களை அழிப்பதற்காகவல்ல உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறந்த ஆயுதம். இருபக்கமும் கூரான கைப்பிடியற்ற ஆயுதம். புஷ்ஷுக்காக ரோணி பிளயர் பாவித்தார். இப்போது ட்ரம்பிற்காக ட்ரூடோ பாவிக்கிறார்.

வரலாறு எல்லோருக்கும் உரிய இடங்களை ஒதுக்கித்தான் வந்திருக்கிறது. பார்க்கலாம்.